Tuesday, March 30, 2021

வெள்ளியங்கிரி - தென் கைலாயம்

வெள்ளியங்கிரி - தென் கைலாயம்  

என்னுள் 
எழுந்தருளும் 
என்னீசன்    

   





'நம்ம சார்தான் விழுந்தது..' 

மூன்றாம் மலையில், முறையற்ற கருங்கல் படிக்கட்டில்,  நான்காம் நிலையில்   இருந்து, கால் இடறி, மல்லாந்து  விழுந்த என்னை நோக்கி ஓடிவந்து தூக்கி உட்கார வைத்தார்கள்.

கருங்கல்லில் ஒரு சின்ன சிராய்ப்பு தலைக்கு பட்டிருந்தாலும், அந்த வெள்ளியங்கிரி நாதனின் பொற்பாதங்களில் சரண் அடைந்திருக்கும் இந்த உடல். 

காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என் 
பாற்றுளிப் பெய்யில்என்  பல்லோர் பழிச்சில்என்
தோற்பையுள் நின்று தொழில்அறச் செய்தூட்டும் 
கூத்தன் புறப்பட்டுப் போனஇக்  கூட்டையே. 
                                                                         - திருமந்திரம் 167

தோலினால் செய்யப்பட்ட இந்த உடல் கூட்டிலிருந்து உயிர்  பிரிந்த பின்னர் காக்கை உண்டால் என்ன?  பழிச்சொல்லும், புகழ் சொல்லும், பாலும் என்ன செய்யும்?

'நான்' யார் என்று எனக்கிருந்த, அஹங்காரமும்,ஆணவமும் அந்த வினாடியில் என் கண் முன்னே  தோன்றி மறைந்தது. 

வலது பக்கம் நல்ல பலமான அடி. சென்ற முறை மலை ஏறியபோது, இடது காலில் ஏற்பட்ட நரம்புப்பிடிப்பு இன்னும் வலியுடன் இருக்கிறது. இயல்பாகவே இந்த வயதில் இருக்கக்கூடிய முட்டி வலி வேறு. இன்னும் கடினமான நான்கு மலைகள் ஏற வேண்டுமே என்பதைவிட,  ஏழு மலைகளில் இருந்து இறங்குவதும்  மிகவும் சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதும் மனதுக்கு தெரியும்.

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே என்று மனம் தீர்மானித்து விட்டது, ஏறித்தான் பார்ப்போம்.

வியர்வையில் தலை நனைந்து ஒழுகுகிறதா, இல்லை பனிக்காற்றில் உள்ள ஈரத்தாலா? இது ஏழாவது மலையில். வியர்வையும், குளிரும் ஒரு சேர நடந்தேறுகிறது. மனதில், அவன் சந்நிதியை தரிசிக்கும் வேண்டுதல் தவிர வேறொன்றுமில்லை.

உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறேழும் 
கற்றறிவு  எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை 
அற்று அறியாது அழிகின்ற வாறே.
                                                               - திருமந்திரம் 741

ஐம்புலன்களால் பெறத்தக்க ஐந்தறிவு, அதனை பகுத்தறியும் ஆறாம் அறிவு, உணர்தலான ஏழாம் அறிவு, கற்பதனால் கிடைக்கும் எட்டாம் அறிவு, கற்றறிந்த அறிஞர்களின் நட்பில்  கிடைக்கும் ஒன்பதாம் அறிவு. இவை அனைத்தும் பற்றி நிற்பது பரம்பொருள் என்னும் பத்தாம் அறிவு. இந்த உண்மையை உணராது அழிகிறது உடல். 

தரிசனத்திற்காக வரிசையில் நிற்கையில், உடலில் உள்ள அனைத்து சக்தியும் வற்றி, மனத்தில் எந்த ஒரு எண்ணமும் தோன்றாத வண்ணம், மனம் பற்றி நின்ற பத்தாம் அறிவாம், பரம்பொருளின் சுயம்பு லிங்கத்தை பார்த்தேன்.

கண்களில் ஆனந்தக்கண்ணீர்! 
ஐயனே, மீண்டும் உன்னை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்குமா!! 




என்னிடம் ஒன்றுமில்லை என்று சொல்லி நின்றேனே தவிர்த்து, பக்தர்கள் அனைவர் உடையிலும் மலையின் மண் படிந்திருந்தது. சுடுகாட்டு சாம்பல் உன்வாசமென்றால், மலையின் மண்வாசம் எங்கள் அனைவரிடமும்.

இடது காலை பொறுமையாக எடுத்து, வலது காலை மீண்டும் அடுத்த படியில் இறக்கி, உடல் பாரம் வலது காலில் ஏறாத வண்ணம், ஒவ்வொரு படியாக கீழே இறங்க வேண்டி இருந்தது. என்னுடன் உறுதுணையாக வந்தவர்கள் இளைஞர்கள். என்னுடைய கைப்பையையும் சுமந்துகொண்டு, வேகமாக கீழே இறங்கி, முதலில் கால் தவறி விழுந்த மூன்றாம் மலையின் பாதியில் எனக்காக காத்திருந்தார்கள். எனக்கு தண்ணீரும், எலுமிச்சை ஜுசும் வாங்கி கொடுத்துவிட்டு இறங்கி  விட்டார்கள்.




இறங்குகையில், மூன்றாம் மலையின் இறுதியிலும், இரண்டாம் மலையின் ஆரம்பத்தில் உள்ள பாம்பாட்டி சித்தர் குகை கோவிலில் இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு இறங்கினேன்.

தாகம்.

கைப்பையும், தண்ணீர் பாட்டிலும் அவர்களிடம். கைப்பையில் பணம் இருக்கிறது. என்னிடம் இருந்த பணத்தையும்  ஏற்கனவே அவர்களிடம் கொடுத்துவிட்டேன். மொபைல் போனும் கைப்பையில். 

கையில் ஊன்றுகோலும், தோளில் சிறுதுண்டும் தவிர்த்து ஒன்றுமில்லை என்னிடம்.

எனக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.

யாரிடமும் குடிக்க தண்ணீர் கேட்க தயக்கம். சரி, முதல் மலை வெள்ளை விநாயகர் கோயில் திண்ணையில் காத்திருப்பார்கள் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு, காலை பத்து மணி வெயில், உடலில் உள்ள கொஞ்ச நஞ்ச நீரையும் வெளியே தள்ளிக்கொண்டிருக்க, நடந்தேன்.

முதல் மலை இருக்கிறது. வெள்ளை விநாயகர் இருக்கிறார். திண்ணை இருக்கிறது. எனக்காக யாரும் அங்கு இல்லை.

மணி காலை பதினொன்று. பளீரென்ற நீல வானம். சுட்டெரிக்கும் பங்குனி வெயில்.

தாகம். தாகம்.

குறைந்தது ஒன்றரையிலிருந்து இரண்டு மணி நேரம் இந்த வெயிலில், வலியும், தாகமும் கொண்ட  இந்த உடல், அடிவாரத்தை அடைந்தாக  வேண்டும்.

மரண பயம் ஒரு வினாடி என் கண்களுக்குள் ஓடி மறைந்தது, மல்லாந்து  விழுந்தபோதுகூட வராத பயம் இது.

'கொஞ்சம் தண்ணீ..' - கையேந்தினேன், இரண்டு முறை, உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்களிடம்.

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கல்மின்
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே 
மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக் 
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.
                                                                                   - திருமந்திரம் 172

செல்வம் நிலையற்றது என்று தெளிந்து நில்லுங்கள். தெளிந்தவர் செல்வம் இல்லையே என்று கலங்காதீர். ஆற்று வெள்ளம் போல் செல்வம் வந்தாலும் அதனுள் கலந்து மயங்கி நிற்காமல், வேண்டியவர்க்கு வழங்கி வாழ்வீர்களானால் உயிரை எடுக்க எமன் வந்தாலும் அச்சம் தோன்றாது. 

மின்னல் வெட்டாய் ஒரு எண்ணம் எழுந்து மறைந்தது.

'உன் அறிவால்  விளைந்த ஆணவம், உடலில் இருந்த சக்தி, உன்னிடம் இருந்த செல்வம் எல்லாம் நிலை அற்றது. நீ கையேந்தி நிற்கும் இந்த நிலையே நிதர்சனமான  உண்மை.'  

ஜீவாத்மா பரமாத்மாவை அணுகும் நேரம் இது.

என்னுள் 
எழுந்தருளுளினான் 
என்னீசன் 

புராணக்கதைகளில் படித்திருக்கிறோம். சக்தி, சிவனை அடைய அணுகியபோது, அவர் சக்தியை சோதிக்கிறார். தன்னுடைய சொத்து என்றெண்ணிய அனைத்தையும் தானம் செய்துவிட்டு தன்னிடம் ஒன்றுமில்லை என்னும் நிலையில் சக்தியை தன்னுடன் ஏற்றுக்கொள்கிறார்.

அது உண்மைதானே!


கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...