கேளுங்கள் தரப்படும்
என் மனத்தில் ஒன்றைப்பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனிப்பறிக்கும் மலர் அனைத்தும்
மணம் பரப்பும் சுற்றி
இறைக்கனலை திருமந்திரத்தில்,
தேடினேன் வந்தது..
நாடினேன் தந்தது..
***
'ரொம்ப குளிருது. ஃபேன நிறுத்திரு..'
என்னைப்பார்த்து புற்று நோய் சிகிச்சையில் இருந்த அக்கா சொன்னார்கள்.
காற்றோட்டமில்லாத மருத்துவ அறை. மாலை நேர புழுக்கம் வேறு. அறையில் ஃபேன் போட்டுக்கூட வியர்த்து கொட்டியது.
எப்படி இது சாத்தியம். ஒரு உடலுக்கு குளிர்ச்சி; மற்றொன்றுக்கு வெப்பம்.
புற இறைக்கனல் இரு உடலுக்கும் ஒரே அளவில் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
எனவே, அக இறைக்கனலில்தான் மாற்றம் இருக்க வேண்டும்.
புறக்கனல் எரித்து வெப்பம் கொடுக்கும் சிற்றறையில் உள்ள சத்தின் [எரிபொருள்] அளவு ஒரு உடலில் இல்லாமலும், மற்றொன்றில் இருப்பதும்தான் காரணம்.
அண்ணல் உடலாகி அவ்அனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணன் ஆம்விந்துவும்
கண்ணும் கனல்இடைக் கட்டிக் கலந்துஎரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.
- திருமந்திரம் 1951
இறைவனே உடலாக உருவெடுத்து, அங்கே சக்தியாக, அகக்கனலாக விளங்கும் வித்தினையும், உடலுக்கு உயிரூட்டும் பிராணனாக உள்ள புறக்கனல் வித்தினையும் நெற்றிக்கு நடுவில் வைத்து எரித்தால், அதுவே அமிர்தமாக, யோகிக்கு தேவையான உணவும், உணர்வும் ஆகும்.
யோகிக்கு மட்டும் இந்த பேறு கிடைக்குமா அல்லது மற்றவர்கள் யார், யாருக்கு இந்த பேறு கிடைக்கும் என்பதனையும் திருமூலர் விளக்குகிறார்.
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
போகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.
- திருமந்திரம் 1950
உடலின் உணர்வுகளால் உந்தப்பட்டு, மோக வயப்பட்டு இல்லற இன்பத்தில் ஈடுபட்டாலும், மேலே சொன்ன யோகியர்களும், உலகை உணர்ந்த ஞானிகளும், மற்றவர் நலனில் அக்கறை கொண்ட சித்தர்களும், உலக போக வாழ்வில் உள்ள இல்லறத்தாரும், ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி வழங்குபவர்களும், முறையாக அகக்கனல், புறக்கனலை நெற்றிக்கு நடுவில் எரித்து அமிர்தம் உண்ணுவார்கள் என்றால் அவர்களும் உயிர் வித்தினை அழியாமல் காப்பவர்களே.
குறிப்பு:
நாம் அனைவரும், போக வாழ்வில் உள்ள இல்லறத்தார் கணக்கில் வருபவர்கள். நாமும் அமிர்தம் உண்ண முயற்சிக்கலாம்; முடியும், முறையாக பயிற்சி செய்தால். வாருங்கள் அகக்கனலையும், புறக்கனலையும் இணைக்கும் வழிதனை, திருமூலர் திருமந்திரத்தில் சொல்வதை கேட்டே தெரிந்து கொள்வோம்; பயிற்சி செய்வோம்.
இறைக்கனல்: 5 தொடரும்..