Saturday, August 29, 2020

பாறாங்கல்

பாறாங்கல் 



'அந்த ரெண்டு பாறையும், கொஞ்ச நாள்ல ஒண்ணா சேந்துரும்' 

நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது, வெள்ளியங்கிரி ஏழாவது மலையின் உச்சியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி நாதரின் குகைக்கோவிலின் நுழைவு வாயில். 

பத்து வயதில், பெரியம்மாவுடன் மலை ஏறியபோது இரண்டு பாறைகளின் இடையே நல்ல இடைவெளி இருந்தது. ஒரு ஐம்பது வருட இடைவெளியில், அவ்விரு  பாறைகளுக்கு இடையே இடைவெளி இல்லை.

'அவையினர் கருத்து சொல்லலாம்', சிம்மக்குன்றில்  உள்ள பாறைகளை கொண்டு   எல்லைக்கோட்டையை நிர்மாணிக்க எண்ணிய அரசனுக்கு, கருத்து சொல்ல அரசவையை கேட்டுக்கொண்டான் மந்திரிப்பிரதானி.

'பேரரசே, கற்கள் மிகவும் உயர்ந்த தரத்தில் இருப்பதால், அவைகளை நம் கால வரலாற்றை பிரதிபலிக்கும் கடவுள் சிலைகளாக வடித்து, சிற்பக்கூடமாகவும், கோயிலாகவும்  மாற்றலாம்' என்றான்  தலைமை சிற்பி.

' மன்னா, நம் தலைமை சிற்பி சொன்னது போல், கற்கள் நல்ல தரமாக இருப்பதால், அதனை அறுத்து, மெருகூட்டி நல்ல விலைக்கு வெளிநாடுகளில் விற்று  வாணிபம் செய்தால், பொருளாதாரத்தில், நம் நாட்டுக்கு இணை யாரும் இருக்க முடியாது'- இது  நிதி மந்திரி.

'பாறைகளை அகற்றி கோட்டை கட்டுவது, அதனை கடவுளாக்குவது அல்லது அதனை அறுத்து வாணிபம் செய்வது, இவை நாம் நம் சந்ததியினர்க்கு செய்யும் துரோகம் ஆகும்' - என்றார் எதனையும் மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்ற  சித்தாந்தம் கொண்ட பகுத்தறிவுப்பிரசங்கி . 

திருக்குறள்-423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

                                                                                                        

மன்னனுக்கு காவல் முக்கியம். சிற்பிக்கு தன்னுடைய திறமை முக்கியம். நிதி மந்திரிக்கு நிதி முக்கியம். பகுத்தறிவுவாதிக்கு தன்முனைப்பு முக்கியம். அவரவர் அறிவுக்கேற்ப பாறைகளின் மெய்ப்பொருள்  மாறுபடுகிறது.

திருமூலர் எப்படி சொல்கிறார் பாருங்கள்; உங்கள் பார்வைதான் முக்கியம்.

திருமந்திரம்-2290

மரத்தை மறைத்தது மாமத யானை 
மரத்தில் மறைந்தது மாமத யானை 
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் 
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே.
                                                                                                                                                                                                          

மரத்தால் செய்யப்பட்ட யானையை பார்க்கையில், யானையாக பார்த்தால் மரம் தெரிவதில்லை. மரத்தின் தன்மையை பார்த்தால் யானை தெரிவதில்லை. இவ்வுலகில் ஐம்பூதங்களை பார்த்தால் அதில் உறையும் பரம்பொருள் தெரிவதில்லை. கண்ணால் காண்பவை எல்லாம்  பரம்பொருளாகப்பார்த்தால் ஐம்பூதங்கள் தெரிவதில்லை.

இவ்வளவு பெரிய  பாறைகள் எப்படி உருவாகி இருக்க முடியும். அதை யார் தூக்கி இவ்வளவு உயரத்தில் வைத்திருக்க முடியும்? தானாகவே, இறையருளால், அணுவாகி, மூலக்கூறாகி, பாறையாகி  இருந்தால் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டுமே.

வளர்ந்து கொண்டே இருப்பதன் சாட்சிதான் வெள்ளியங்கிரி மலை உச்சியில் நான் கண்ட பாறைகளின் இணைப்பு.

*** *** ***





 





Sunday, August 23, 2020

லங்கனம்

 லங்கனம் 

வாழ நினைத்தால் வாழலாம்  வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும்  
ஆசை இருந்தால் நீந்தி வா 


லங்கனம் எனப்படும் பரம மருந்தின் மூலம், உடல் தனக்கு வரும்  நோய்  மற்றும்  உபாதைகளில் இருந்து தன்னைத்தானே சமநிலைப்படுத்திக்கொள்ளும். லங்கானத்தை சாதாரண மனிதர்களும் பயனுறும்  வண்ணம் நான்கு வகையாக முறைப்படுத்தியுள்ளார்கள்.

1. உடலின் தேவைக்கு மட்டும் உண்ணுதல் 
2. முறையாக மூச்சு விடும் பழக்கத்தை மேற்கொள்ளுதல்
3. தேவையானதை மட்டும் கருத்தூன்ற பேசுதல் 
4. தன்னையே நினைந்து அமைதியாக இருத்தல் 

இவ்வளவு சிறப்பான கருத்தை திருமந்திரத்தில் தேடினேன். திருமூலர் ஒரு படி மேலே சென்று, உடலை ஏன் நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்து லங்கானத்தில் உள்ள அனைத்து வகைகளையும் விளக்கி சென்றிருப்பது நமக்கு கிடைத்த பாக்கியமே.

உடம்பை வளர்த்தல் 

உடம்பை வளர்க்கும் உபாயத்தை அறிந்தவர், தானும் வளர்த்து நமக்கும் அதை அளித்து சென்றுள்ளார்.

உடம்பார் அழியில் உயிரார்  அழிவர் 
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் 
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

                                                                           - திருமந்திரம் 724

தேவைக்கு மட்டும் உண்ணுதல்

உடலில் உயிர் நிலைத்திருக்க, நாம் உண்ணும் அளவில் கருத்து கொண்டு உடலின் தேவைக்கு மட்டும் உண்ண வேண்டும்.

அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை 
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் 
உண்டி சுருங்கில் உபாயம் பலஉள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.

                                                                              - திருமந்திரம் 735

மூச்சுக்காற்றை முறைப்படுத்துதல் 

நாம் சுவாசிக்கும் காற்று, உட்செல்லுதல், வெளியேறுதல் மற்றும் தங்கி இருத்தல் எனும் மூன்று தன்மையதாகவும், நாம் உணர உட்செல்லுதல், வெளியேறுதல் மட்டும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. உட்தங்கும் காற்றின் நேரத்தை அதிகப்படுத்தி பயிற்சி செய்ய உடம்பு நிலைத்து வாழும்.

மூன்று மடக்குஉடைப் பாம்புஇரண்டு எட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்தான் 
நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட்டு
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே.

                                                                            - திருமந்திரம் 725 

அளவறிந்து பேசுதல்

முறையாக முயன்று, பேசும் பேச்சை கட்டுப்படுத்தி,  உடலை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் மறைந்துள்ள உண்மை என்ன வென்றால், நாம் எண்ணியதை எல்லாம் ஊருக்கு  சொல்லி பறைசாற்ற  வேண்டிய அவசியமில்லை. 

முறை முறை ஆய்ந்து  முயன்றிலர் ஆகில் 
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது 
மறையது காரணம் மற்றோன்றும் இல்லை 
பறைஅறை யாது பணிந்து முடியே.

                                                                                - திருமந்திரம் 748

தன்மயமாக திளைத்திருத்தல்

ஓவியம் போல் ஆடாமல் அசையாமல் ஒன்றில் ஒன்றிக்  கலந்து இலயிக்கின்ற அறிவுணர்வைப்பெறுங்கள். அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களிலும் மூலாதாரத்திலிருந்து தினமும் சஞ்சரியுங்கள்.  

ஓவிய மான  உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயனறி வார்இல்லை 
தீவினையாம் உடல் மண்டலம் மூன்றுக்கும் 
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

                                                                                   - திருமந்திரம் 751


இந்த பாடல்கள், மனித குலத்திற்கே பெரு நன்மை விளைக்கும் அற்புதமானவை. நோயெதிர்ப்பு சக்தி கிடைக்க, பெருந்தொற்றுகளில் இருந்து மனித சமுதாயம் விடுபட மிகவும் உதவிகரமாக இருக்கும்.


 

  



Sunday, August 16, 2020

இறைநிலா

இறைநிலா


எங்கே எங்கே கொஞ்சம்                                                                                                         நான் பாக்கிறேன்                                                                                                                 கண்ண மூடு கொஞ்சம்                                                                                                         நான் காட்டுறேன்

காணொளி:


கண்களை மூடி, புருவ மத்தியில் உதிக்கும் நிலவுக்காக, உறங்காமல் தவம் இருந்தால், மாங்காய்ப்பால் எனப்படும் வானீர் அமிர்தமாக  கிடைக்கும். நிலவொளியை கண்டு  உடல் முழுதும் பரவும் வரை உறக்கமின்றி தவமிருப்பவன் கண்கள், புற உலக நடப்புகளில் நாட்டம் கொள்ளா உறக்கம் கொண்டுவிடும்.

சசிஉதிக்கும் அளவும் துயில் இன்றி 
சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச் 
சசிசரிக்கின்ற அளவும் துயில் இன்றிச்
சசிசரிப்பின் கட்டன் கண்துயில் கொண்டதே.

                                                                                             - திருமந்திரம் 873

அவ்வளவு எளிதில் அமுதைப்பொழியும் நிலவை பார்த்து விட முடியாது. அதற்கான வழியையும் திருமூலர் சொல்கிறார்:

அட்டாங்க யோகம் எனப்படும் கீழ்கண்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

1. இயமம் - உலக ஜீவராசிகள் நலமுடன் வாழும் வகையில் ஒழுக்கமான வாழ்க்கை நடைமுறையை அமைத்துக்கொள்ளுதல் 

2. நியமம் - ஒழுக்கமான வாழ்வே  தவமாய் மேற்கொள்ளுதல்  

3. யோகாசனம் - பல்வேறு  யோகாசனங்களின் மூலம் உடலும், மனமும் ஒத்திசைந்து  தவத்தில் முன்னேறுதல் 

4. பிராணாயாமம் - உடலில் உள்ள பிராண சக்தியை வளம் பெற செய்து தவத்தின் அடுத்த நிலைக்கு செல்லுதல்  

5. பிரத்தியாகாரம் - ஐம்புலன்களை  பலவந்தமாக அடக்காமல், அதன் வழி சென்று தன்மயமாக்கி,  அகத்தின் உள்நோக்கிய பார்வை கொள்ளுதல்  

6. தாரணை  - உள்ள வெளியில் உருவேற்றியவாறு, மேற்கூறிய நிலையில் தொடர்ந்து இரவும் பகலும்  உலா வருதல் 

7. தியானம் - உடலும், மனமும்  ஒரு நிலைப்பட்டு உயிர் வெளியை புருவ மத்தியில் காண்பதற்கான தியானம் மேற்கொள்ளுதல்  

8. சமாதி - காணாக்கண், கேளாசெவியென ஐம்புலன்களும் அடங்கி இருக்க, குளிர் நிலவு  புருவ மத்தியில் தோன்றுமவதை காணுதல்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம் 
நயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரம் 
சயமிகு தாரணை தியானம் சமாதி 
அயமுறும் அட்டங்கம் ஆவது மாமே.

                                                                             - திருமந்திரம் 552

இதுவே நம் உடலில் உள்ள பரமாத்மாவுக்கு நாம் செய்யும் பூசையாகும். இந்த பூசையால், நாம் மீண்டும் பிறவி எடுக்காமல் அந்த இறைவனோடு ஒன்றி இருக்கலாம். பூசைகளில் ஈடுபடாதவர்களின் உடலிலும் அந்த இறைவன் வாழ்கிறான்.

பகலும் இரவும் பயில்கின்ற பூசை 
இயல்புடை ஈசர்க்கு இணை மலராகப் 
பகலும் இரவும் பயிலாத பூசை 
சகலமும் தான் கொள்வன் தாழ்சடையோனே. 

                                                                                 - திருமந்திரம் 1855


இறைவனடி சேர்ந்தால்தான் பிறவியாகிய பெருங்கடலை நீந்தி, இறைவனின் திருவடிகளை சேர முடியும் என்று வள்ளுவரும் வழி காட்டி இருக்கிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

                                                                                        - திருக்குறள் 10






Sunday, August 9, 2020

இயற்கை நுண்ணறிவு

இயற்கை நுண்ணறிவு

கோவில் பெண் கொண்டது                                                                                                            தெய்வம் கண் தந்தது  



'திரைப்பட பாடல் நிகழ்ச்சிக்கு, இரு நூற்றைம்பது டாலர் ரொம்ப அதிகம், என்று நிகழ்ச்சி உபயதாரர் கொடுத்த ஓசி டிக்கெட்டில் சிட்னி  ஓபரா ஹவுசில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருந்த என்னை தூக்கிவாரிப்போட்டது,  சபரி மலை சன்னிதானத்தில் தேவகானம் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரரான  யேசுதாஸ் அவர்கள் நிகழ்ச்சியில் பாடிய முதல் பாடல்.'

'விழியே கதை எழுது.. கண்ணீரில் எழுதாதே..'  

என்னுடைய கல்லூரி நாட்களில், அன்றைய காலகட்டத்திற்கு , மிகவும்  அழுத்தமான  காதல்  சோகப்பாடல் அது .  கேட்டு உருகாத நாளில்லை. இன்றும்கூட கேட்கும்போது இனம் புரியாத இனிய குறுகுறுப்பு. ஒருதலைக் காதல் தோல்வி யாருக்குத்தான் இல்லை.

கவியரசர் கண்ணதாசனின் இந்த பாடலில் வரும்  'கோயில் பெண் கொண்டது, தெய்வம் கண் தந்தது' - பொருள் உணர எவ்வளவோ நாட்கள் தலைப்பட்டிருக்கிறேன்;  திருமந்திரத்தில் எனக்கு விளக்கம் கிடைக்கும் என எண்ணிப்பார்த்ததில்லை.

திருமந்திரம்-1823

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு  ஆலயம் 
வள்ளல் பிரானாற்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம் 
கள்ளப்  புலன்ஐந்தும் காளா  மணிவிளக்கே.
                                                                           
 
மனிதனின் உடலே ஆலயமாகவும், உள்ளம் ஆலயம் தாங்கிய கோயிலாகவும்,
கோபுரத்தின் வாசலாக வாய்,  ஜீவாத்மாவே சிவலிங்கமாகவும், அழகிய ஒளி விளக்குகளாக  ஐம்புலன்களும் அமைந்துள்ளன.

இந்திரியங்களின் ஆற்றலால் புலன்கள் அகமும், புறமும் அறியும் தன்மை உள்ளன  ஐம்புலன்கள். ஆனால், புற உலகை மட்டுமே காட்டி மனிதனை வழிநடத்துவதால் ஐம்புலன்கள் கள்ளப்புலன்கள் எனப்பட்டன.

திருமந்திரம்-119

அறிவைஐம் புலனுடனே 
நான்ற தாகி 
நெறிஅறி யாதுற்ற நீராழமும் போல 
அறிவு அறிவுள்ளே அழிந்தது போல 
குறி அறி விப்பான் குருபரன் ஆமே.
                                                                              

கள்ளத்தனம் புரியும் ஐம்புலன்கள் வழியாக அறிவு செல்லும்போதும்,  ஆழம் அறியாமல் நீரில் இறங்கி தத்தளிக்கும் போதும், இப்பிறவியில் பெற்ற அறிவே, அறிவை அழிக்கும் அஹங்காரமாக மாறும்போது, பல பிறவிகளில் நாம் செய்த நல்வினைப்பயனால், நமக்கு நல் வழி கட்டுவது அந்த இறைவனே ஆகும். 

இந்த நல்வழிப்பயனாலே நாம் முற்பிறவிகளில் பெற்ற கல்வி, அனுபவ அறிவு ஏழு பிறவிகளிலும்  தொடர்ந்து வரும்.

திருக்குறள் 398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
                                                             

தொடர்ந்து வரும் பிறவிகளில், தான் முந்தைய பிறவிகளில் கற்ற  கல்வி அறிவினை அவனுடைய நுண்ணறிவு  அறிவிக்கும். 
 
திருக்குறள் 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
                                                             

எவ்வளவு அரிதான நுண்ணிய அறிவு வழங்கும் நூல்களை கற்றிருந்தாலும், உண்மை அறிவு என்று அறியப்படும், முந்தைய பிறவிகளில் பெற்றிருந்த நுண்ணறிவு எனப்படும் இயற்கை  அறிவே மேலோங்கி நிற்கும்.

நுண்ணறிவை பெற, இறைவனின் அருளாசி நமக்கு வேண்டும். 

*** *** ***





Sunday, August 2, 2020

அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை 





பனிபோல் குளிர்ந்தது 
கனிபோல் இனித்ததம்மா
ஆஹா மழைபோல் விழுந்தது 
மலராய் மலர்ந்ததம்மா   


காணொளி:


'பல பிறவிகளில் உங்கள் ஆன்மா சேமித்த கர்ம வினைகளும், இப்பிறவியில் நீங்கள் கொண்ட அனுபவமும் உங்கள் பார்வையில் மாயையாய் படிந்திருக்கிறது' - என்றான் கண்ணன், தன்  முன்னே 'நல்லவன்  ஒருவனையும் காண முடியவில்லை' என்ற துரியோதனனையும், 'தீயவர் ஒருவரையும் காணவில்லை' என்று  வணங்கி நின்ற தர்மரையும் பார்த்து. 

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
                                                                                                           - நாலடியார் 

தவம் செய்யும் ஒருவனிடம் எவ்வித பாவமும் நில்லாது, ஒளி பாய்ந்த இருட்டறையில் இருள் மறைவதைப்போன்று, என்று தவத்தில் பெருமையை விளக்குகிறது இப்பாடல்.

'ஆமா, காய்கறிகள், தேங்காய் எல்லாம் சாப்பிட்றத மட்டும்தான் சமைக்க முடியும். மிச்சம் குப்பைதான். வேணுன்னா நீங்களும், உங்க வீட்டாட்களும் அப்படியே தின்னுங்க' என்று பொரிந்தாள்  குமுதா,'சாப்பிட்றதுக்கு  தினமும்  வாங்கும் பொருளின் அளவுக்கு சமமா குப்பையா போடுறோம்' - என்ற கணவனைப்  பார்த்து.

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க - யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.
                                                                                                           - நாலடியார்

உடலில் உள்ள உயிரானது, மலையிடை தோன்றும் மேகத்தைப்போல் மறைந்து விடும். உடல் பெற்றதால் ஆய பயனான தவத்தை மேற்கொண்டு, தன்  பாவங்களை களைந்து பிறவிப்பயன் பெறுதல் வேண்டும்.

'நல்லா கேட்டுக்குங்க. கொஞ்ச கொஞ்சமா தன்னையே முறையா சிதைச்சிகிட்டாதான், [பட்டை தீட்டிய] வைரமே  ஜொலிக்க முடியும்.'

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண்டுஞ்சார் 
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி 
அருமையும் பாரா ரவமதிப்புங்  கொள்ளார் 
கருமமே கண்ணாயி னார்.
                                                                                          - நீதிநெறிவிளக்கம் 

தவம் மேற்கொள்வார்க்கும் இது சரியாக பொருந்தும். தன்  உடலையே ஆதாரமாக கொண்டு இயற்றக்கூடிய தவத்தின் சிறப்பை திருமூலர் சொல்வதைக்கேட்போம்.

கோணா மனத்தைக்  குறிக்கொண்டு கீழ்க்கட்டி 
வீணாத் தண்டூடே வெளிஉறத் தான்நோக்கிக் 
காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு 
வாழ்நாள் அடைக்கும் வழிஅது வாமே.
                                                                                                   - திருமந்திரம் 588

உறுதியான மனநிலையில், தியானத்தில் லயித்து, கண்களும், காதுகளும் செயல் மறந்து, உள்ளொளியில்  உறைவோர்க்கு வாழ்நாள் அழியாமல் நிலைக்கும்.





 








Wednesday, July 22, 2020

எனக்குள் இருவன்

எனக்குள் இருவன்  

இப்போ 
இல்லாட்டி 
எப்போ?



காணொளி:

'கொஞ்ச அடங்கி, சிவனேன்னு உக்காருங்க போதும்'

காசி, ஹரித்வார் யாத்திரை போகணும், இப்ப இல்லாட்டி எப்பன்னு கேட்ட, வேலையிலிருந்து  ஓய்வு பெற்று, சற்று உடல் நலக்குறைவாய் இருந்த  தந்தையை  அடக்கினாள்  பூஜா.

மனதிற்குள் ஒரே புகைச்சல். கண்ணுக்கு புலப்படாத, இலக்கற்ற  எதிரிகளை துரத்தி துரத்தியே வாழ்க்கை முடிந்து விட்டிருந்தது சம்பத்திற்கு. இயல்பாக  துளிர்விட்டு வளர்ந்து நிற்கும் இறை நம்பிக்கை, தெய்வ வழிபாட்டு புத்தகங்களை, ஓய்வு நாட்களில்  படிக்கலாம் என்றால் ஒரே ஒரு பாட்டின் பொருள் கூட புரியவில்லை. தமிழகத்தில் பிறந்து, கற்று, வாழ்வின் இறுதி அங்கத்தில், ஓய்வின் முதல் அத்தியாயமே விளங்கவில்லை.

'சார், எல்லாம் தமிழ் பாடல் புத்தகங்கள்தான். விளக்கவுரையுடன் மிக சில புத்தகங்களே கிடைக்கும்' - விஜயா  பதிப்பகம் விற்பனைப்பெண் சொன்னாள், சம்பத்தின், 'தமிழ் இலக்கிய  பாடல் புத்தகங்கள் விளக்கவுரையுடன் கிடைக்குமா?' என்ற கேள்விக்கு.

வேலைக்கு சேர்ந்த நாட்களில் ஆரம்பித்திருக்க வேண்டும்; தமிழில் உள்ள நல்ல புத்தகங்களை தேடி சேர்த்திருக்க வேண்டும், அப்பொழுது கேட்டிருக்க வேண்டும், இப்போ இல்லாட்டி எப்ப? என்று. 

அள்ள அள்ளக் குறையாத அமிர்தப் பொக்கிஷங்கள், நம் சித்தர்கள் நமக்கு அருளிச்  சென்றுள்ள ஞான விளக்குகள். வாழ் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஞான ஒளியை நம்முள் ஏற்றிருந்தால், ஓய்வு நாட்களில் இறை சிந்தனையே நம்மை மோக்ஷ நிலைக்கு கொண்டு சென்று விடும்.

நான் என்று எண்ணி இருப்பது எனக்குள் இருக்கும் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா. நம்முடலில் வெப்பமாக, விந்துவாக  ஜீவாத்மாவும்; வாயுவாக, நாதமாக  பரமாத்மாவும்  உடலுக்குள்  ஆதாரமாய் வீற்றிருக்கிறார்கள்.


தானென்ற சூக்ஷமடா விந்து நாதம்
தனை அறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து
கோவனன்ற குருவருளால் அங்குதித்து
கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்
ஊனென்ற மடபதிக்கு உறுதியான
உண்மையுள்ள அக்கினி யும் வாய்வுங் கூடி
தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்ச்
சென்றிருந்து ஆதாரம் ஆனார்பாரே.
                                                        - சௌமிய சாகரம் 23
 
அந்த நாதத்திற்கும், விந்துவிற்கும் ஆதி முதலானவன் நம் தமிழ் கடவுள் முருகன். வேதங்களிலுள்ள மந்திரத்தின் வடிவானவன் முருக வேள். 

நாத விந்துக லாதீ நமோநம 
வேத மந்த்ரசொ ரூபா நமோநம 
ஞானபண்டித சாமீ  நமோநம.. வெகு கோடி
                                                                      - திருப்புகழ் 170

இதனையே திருமூலர், சூரிய வெப்பத்தில் கடல் நீரில் உள்ள உப்பு வெளி வருவதும், அதே நீரில் கரைந்த ஒன்றாவது போல், ஜீவாத்மா பரமாத்மவுக்குள் அடங்கி,  இருமையும் ஒருமையாக  உடலுக்குள்  இருக்கிறது  என்கிறார்.


அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் 
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு 
அப்பினில் கூடியது ஒன்றாகு மாறுபோல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.
                                                                  - திருமந்திரம் 136




Saturday, July 18, 2020

தமிழ் கடவுள்

தமிழ் கடவுள் 

உள்ளம் உருகுதையா 
முருகா 
உன்னடி காண்கையிலே 




காணொளி:

உள்ளம் உருகுதய்யா..

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா..




'இது அதர்மம்'  -  குருக்ஷேத்திர தர்ம யுத்தத்தில், யாராலும் எளிதில் பிளக்க இயலாத எதிரியின்  சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைந்து,  எதிரிகளை தன் போர்த்திறனால் துவம்சம் செய்து கொண்டிருந்த தன்னை, நாலா புறமும் இருந்து யுத்த தர்மத்தை மீறி தாக்கும் கௌரவப்  படையினரை நோக்கி கர்ஜித்தான் அபிமன்யு.

கலியுக அபிமன்யுக்கள் இன்றும் கதறிக்கொண்டிருக்கிறார்கள், 'இது அதர்மம்' என்று.

 இவர்களின் ஒரே ஆயுதம் கடவுள்

இல்லையென்று ஒரு சாரார் அடுத்தவருக்கு புத்தி சொல்ல எடுத்துக்கொண்ட ஆயுதம், கவச  அவமதிப்பு.
இருக்கிறதென்று கூறுவோர்கள் எடுத்துக்கொண்ட 
ஆயுதமோ சிலைக்கு காவி பூச்சு. இடையில் மறக்கடிக்கப்படுவது என்னவோ  பெருந்தொற்றின் 
மனிதகுலத்தின் பேரழிவு.

சொந்தமாக கற்றுணர்ந்து அறிவு பெற பொறுமையில்லாத இவர்கள் அடுத்தவர் உண்ட  எச்சில் இலையில்  இருந்த உணவின் சுவையை விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதை அஹங்காரம் என்று சொல்கிறார் அகத்தியர். மனித உடலினின்று இயங்கும் முப்பத்தாறு பிரதம தத்துவங்களில் புத்தி நிலையும் ஒன்று. இது நான்கு தத்துவங்களாக விரிந்து, மனம், புத்தி, அஹங்காரம்  மற்றும் சித்தி என்று நிலை கொள்கிறது.
மனம் ஓரளவிற்கு கல்வி, கேள்வியில் தேர்ச்சி பெற்றதும், 
அடுத்த நிலையான அகங்காரத்தை பற்றி கொள்கிறது.

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
                                              -  அகத்தியரின் சௌமிய சாகரம்  32

நான்காம் நிலையான சித்தியை அடையும் வழியை நம் முன்னோர்கள் விட்டு சென்றதை, இவ்வகை போராட்டங்களினால் அநியாயமாக இழப்பதோடல்லாமல் அடுத்த தலைமுறையினரையும் தெம்பிழக்க செய்கிறோம்.

திருமூலர் வெகு நிறைவாக இதை தெளிவாக்குகிறார்.

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போதும்  
மற்றைப் பசுக்கள் வரள் பசுதானே.
                                                   - திருமந்திரம் 2015

ஒரு பக்கம் வேதம், மந்திரங்கள், பல்வகை சமய சடங்குளை கற்றவர்கள் எவ்வளவுதான் கற்றதை மட்டும் கத்திக்  கதறினாலும்,  இன்னொரு பக்கம் கும்பலாக கூட்டம் கூடி எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முட்டி மோதினாலும், முற்றும் உணர்ந்து சித்தி நிலை அடைந்தவர்கள் வழங்கும்  இறையருளே  போதுமானது. ஏனையோர்கள் எல்லாம் சமுதாயத்திற்கு உருப்படியாக ஏதும் வழங்க முடியாத வறட்டு மாடுகளே!

முருகனின் பேரருள் கந்த சஷ்டி கவசமே,  இன்றைய 
பெருந்தொற்றுக்கு கவசம். தன்னை இழிவுபடுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் கொண்டே இன்று தமிழகம் முழுவதும் உயிர்பெற்று முழங்க வைத்த முருகனின்  கவசத்தை நீங்களும் ஒருமுறை  வீட்டில் ஒலிக்க விட்டு கேட்டு பாருங்கள்:



 

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...