Wednesday, July 22, 2020

எனக்குள் இருவன்

எனக்குள் இருவன்  

இப்போ 
இல்லாட்டி 
எப்போ?



காணொளி:

'கொஞ்ச அடங்கி, சிவனேன்னு உக்காருங்க போதும்'

காசி, ஹரித்வார் யாத்திரை போகணும், இப்ப இல்லாட்டி எப்பன்னு கேட்ட, வேலையிலிருந்து  ஓய்வு பெற்று, சற்று உடல் நலக்குறைவாய் இருந்த  தந்தையை  அடக்கினாள்  பூஜா.

மனதிற்குள் ஒரே புகைச்சல். கண்ணுக்கு புலப்படாத, இலக்கற்ற  எதிரிகளை துரத்தி துரத்தியே வாழ்க்கை முடிந்து விட்டிருந்தது சம்பத்திற்கு. இயல்பாக  துளிர்விட்டு வளர்ந்து நிற்கும் இறை நம்பிக்கை, தெய்வ வழிபாட்டு புத்தகங்களை, ஓய்வு நாட்களில்  படிக்கலாம் என்றால் ஒரே ஒரு பாட்டின் பொருள் கூட புரியவில்லை. தமிழகத்தில் பிறந்து, கற்று, வாழ்வின் இறுதி அங்கத்தில், ஓய்வின் முதல் அத்தியாயமே விளங்கவில்லை.

'சார், எல்லாம் தமிழ் பாடல் புத்தகங்கள்தான். விளக்கவுரையுடன் மிக சில புத்தகங்களே கிடைக்கும்' - விஜயா  பதிப்பகம் விற்பனைப்பெண் சொன்னாள், சம்பத்தின், 'தமிழ் இலக்கிய  பாடல் புத்தகங்கள் விளக்கவுரையுடன் கிடைக்குமா?' என்ற கேள்விக்கு.

வேலைக்கு சேர்ந்த நாட்களில் ஆரம்பித்திருக்க வேண்டும்; தமிழில் உள்ள நல்ல புத்தகங்களை தேடி சேர்த்திருக்க வேண்டும், அப்பொழுது கேட்டிருக்க வேண்டும், இப்போ இல்லாட்டி எப்ப? என்று. 

அள்ள அள்ளக் குறையாத அமிர்தப் பொக்கிஷங்கள், நம் சித்தர்கள் நமக்கு அருளிச்  சென்றுள்ள ஞான விளக்குகள். வாழ் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஞான ஒளியை நம்முள் ஏற்றிருந்தால், ஓய்வு நாட்களில் இறை சிந்தனையே நம்மை மோக்ஷ நிலைக்கு கொண்டு சென்று விடும்.

நான் என்று எண்ணி இருப்பது எனக்குள் இருக்கும் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா. நம்முடலில் வெப்பமாக, விந்துவாக  ஜீவாத்மாவும்; வாயுவாக, நாதமாக  பரமாத்மாவும்  உடலுக்குள்  ஆதாரமாய் வீற்றிருக்கிறார்கள்.


தானென்ற சூக்ஷமடா விந்து நாதம்
தனை அறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து
கோவனன்ற குருவருளால் அங்குதித்து
கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்
ஊனென்ற மடபதிக்கு உறுதியான
உண்மையுள்ள அக்கினி யும் வாய்வுங் கூடி
தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்ச்
சென்றிருந்து ஆதாரம் ஆனார்பாரே.
                                                        - சௌமிய சாகரம் 23
 
அந்த நாதத்திற்கும், விந்துவிற்கும் ஆதி முதலானவன் நம் தமிழ் கடவுள் முருகன். வேதங்களிலுள்ள மந்திரத்தின் வடிவானவன் முருக வேள். 

நாத விந்துக லாதீ நமோநம 
வேத மந்த்ரசொ ரூபா நமோநம 
ஞானபண்டித சாமீ  நமோநம.. வெகு கோடி
                                                                      - திருப்புகழ் 170

இதனையே திருமூலர், சூரிய வெப்பத்தில் கடல் நீரில் உள்ள உப்பு வெளி வருவதும், அதே நீரில் கரைந்த ஒன்றாவது போல், ஜீவாத்மா பரமாத்மவுக்குள் அடங்கி,  இருமையும் ஒருமையாக  உடலுக்குள்  இருக்கிறது  என்கிறார்.


அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் 
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு 
அப்பினில் கூடியது ஒன்றாகு மாறுபோல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.
                                                                  - திருமந்திரம் 136




No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...