Tuesday, October 29, 2024
ஒன்றே குலம்! ஒருவனே தேவன் !!
Friday, October 25, 2024
முடிந்த கதை தொடர்வதில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை
'இளவரசிய தூக்கிட்டுப்போன ராஜா, அவளையே கல்யாணமும் பண்ணிக்கிட்டார். அப்புறம் ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க.'
'அவ்வளவுதான். கதை முடிஞ்சது. எல்லாரும் தூங்கப்போங்க' - கதை சொன்ன தாத்தா பேரனையும், பேத்தியையும் தூங்க போக சொன்னார்.
'தாத்தா, இளவரசியும், ராஜாவும் இப்ப தூங்க போவாங்களா?' - பேரன் கேட்டான்.
'இல்ல தங்கம், அது கதை. கதை முடிஞ்சா எல்லாம் முடிஞ்சது. அதுக்கு மேல ஒண்ணும் இருக்காது.' - தாத்தா அவர்களை தூங்க வைக்க பார்த்தார்.
'நேத்து கிருஷ்ணர் கதை சொன்னீங்க. கதை முடிஞ்சு அவரும் செத்துட்டார். பின்ன எதுக்கு அவர் படத்தை வச்சு கும்பிட சொல்றீங்க?'
தாத்தாவுக்கு யாரோ தன்னை பிடரியில் ஓங்கி அடித்ததுபோல் இருந்தது.
கிருஷ்ணரின் காலம் துவாபர யுகத்தின் முடிவாகவும், கலி யுகத்தின் ஆரம்பமாகவும் சொல்லப்பட்டு வருகிறது. கலி யுகத்தில் கிருஷ்ணர் கல்கி அவதாரம் எடுப்பார் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
மஹாபாரதப்போரில் கண்ணன் அருளிய கீதை இன்றும் நமக்கு படிக்க கிடைக்கிறது. கண்ணனின் சந்ததியினர் என்ன ஆனார்கள்? கதை முடிந்ததால் அவர்களும் மடிந்து போனார்களா?
'மானிடர் ஆன்மாவுக்கு மரணம் இல்லை. மறுபடி மறுபடி பிறக்கும்.' -என்றவன் கண்ணன்.
கண்ணன் தேவர்களின் வம்சம், அதனால் அவதாரம் மட்டுமே எடுக்க முடியும்.
எல்லாம் சுவையான கதைதானே. கதை முடிந்தால் எழுந்து போய்விடுவதுதானே முறை. ஏன், அதையே கட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறோம். அடுத்தடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுத்து அவர்களையும் சிந்திக்க விடாமல் செய்கிறோம்.
பழையனவென்று பூஜிப்பவர்களும், நிந்திப்பவர்களும் சிந்திக்க வேண்டியது என்று ஒன்று உண்டு.
அறிவுக்கு ஒவ்வாத பழமை கருத்துக்களை ஒதுக்குவது, பூஜிப்பவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், நிந்திப்பவர்கள் அறிவுக்கு உகந்த பழமை கருத்துகளை ஏற்றுக்கொள்வது.
இதில் சோகம் என்னவென்றால், இவர்களுக்கென்று ஒரு கூட்டம் சேர்ந்தவுடன், தன்னுடைய கருத்தை வலுப்படுத்த, அவர்களின் கருத்து சரியோ, தவறோ, முட்டுக்கொடுக்க ஆரம்பிப்பதுதான்.
சரி என்று பட்டதை சுயமாக சிந்தித்து அதன் வழி நடப்பது ஒன்றுதான் உண்மையான மெய்ஞ்ஞானத்தை வழங்கக்கூடியது.
நல்லன போற்றி அல்லன அகற்றுவதால் கிடைக்கும் பலனை திருமூலர் சுட்டிக்காட்டுவதையும் கேட்டுக்கொள்வோம்.
குயவன் மண்ணைக்குழைத்து இரண்டு மண்பானைகளை செய்தான். ஒன்றினை சூளையில் இட்டு சுட்டான். மற்றொன்றை அப்படியே வைத்து விட்டான். மழைபெய்த போதும், தீயில் சுட்ட பானை திடமாக இருந்தது. சுடாத பானை மீண்டும் மண்ணாகவே கரைந்து விட்டது. தீயில் சுடாத பானையைப்போல் எண்ணற்ற மனிதர்கள் மண்ணோடு மண்ணாக மறைந்துபோகிறார்கள்.
திருமந்திரம் - 143
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்வீழின் மீண்டுமண் ஆனாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாரே.
இறைவனைப்பற்றிய எண்ணங்களை சிந்தித்து அறவழியில் வாழ்பவர்கள், சுட்ட பானை போல் திடமாக இருந்து, இறைவனடி சேரும் பேறு பெற்றவர்கள். மீண்டும் பிறப்பதில்லை.
மற்றவர்கள் சுடாத பானை, மீண்டும் மீண்டும் மண்ணாக கரைந்து, பிறந்து பிறவிச்சுழலில் சிக்கித் தவிப்பவர்கள்.
*** *** *** *** ***
Monday, October 21, 2024
கடவுளைத்தேடி
கடவுளைத்தேடி
கடவுள் இல்லை என்னும் நாத்திகனும், கடவுள் இருக்கிறார் என்னும் ஆத்திகனும் கருத்தில் ஒத்துப்போகும் இடம் ஒன்று உண்டு.
நாம் வாழும் பூமியானாலும், நம் சூரியக்குடும்பமோ அல்லது பிரபஞ்ச வெளியோ, அவற்றில் இருக்கக்கூடிய பொருட்களில் எதற்கேனும் தானாக உருவாகும் தன்மை உண்டோ? அங்கு வாழும் உயிர்களால் புதியதாக ஒன்றை உருவாக்கும் திறன் உள்ளதோ? கண்டிப்பாக இல்லை. ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றும் படைப்புத்திறன் இருக்கிறதே தவிர, உருவாக்கும் திறன் யாருக்கும் இல்லை.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். எவ்வளவு நகைப்புக்குரிய கருத்து இது?
ஒரு வாதத்திற்கு இதை பரிணாம வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டாலும், மனிதனின் பரிணாம வளர்ச்சி என்ன? மனிதன் மனிதனாகவே இருப்பது ஒன்றே போதும், குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது கட்டுக்கதை என்று. இந்த வாதம் நாத்திகவாதிகளுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும்.
கடவுளுக்கு மனித வடிவம் கொடுத்து, குழந்தை குட்டிகளோடு அவனுக்கு புராணக்கதைகள் எழுதி வைத்த ஆன்மீகவாதிகளுக்கு, நாத்திகவாதிகள் எவ்வளவோ மேல் என்று தோன்றும். இதில், நம்முன் நடக்கும் அத்தனை செயல்களுக்கும் கடவுள் பொறுப்பேற்க வேண்டும் என்று முறையிடுவதுதான் இன்னும் வேடிக்கை.
கடவுள் என்பவன் பெண்ணுமல்ல, ஆணுமல்ல, மூன்றாம் பாலினமும் அல்ல.
உள்ளத்தில் எழும் உன் எண்ணங்களில் இருந்து விடுபட்டு தியானத்தில் சமாதி நிலையில் இருக்கும்பொழுது, உன்னுடைய கண்களுக்கு மத்தியில் பேரொளியாய் நிற்பவன் இறைவன். அவனுடைய தன்மைகளை அறிய அறிய ஒருவனுக்கு மிகவும் அரிதான கண்ணின்றி காணும் சக்தியும், காதின்றி கேட்டிடும் திறனும் வாய்க்கப்பெறும்.
திருமந்திரம் - 1872
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்இன்றிக் காணும் செவி இன்றிக்கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
கடவுள் என்று ஒன்று இல்லை என்னும் நாத்திகனின் வாதமும், கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை, [அது உனக்குள்ளே இருக்கும் பெருஞ்சோதி], என்னும் ஆத்திகனின் நிலைப்பாடும் ஒன்றிப்போகிறது.
*** *** *** *** ***
கடவுளைத்தேடும்
பாதை நீள்கிறது
பயணம் தொடர்கிறது
Tuesday, October 15, 2024
உயிரின் பயணம் முடிவதில்லை
உயிரின் பயணம் முடிவதில்லை
மனிதனுக்குள் இறைவன் ஒளித்து வைத்த ரகசியம்..
உயிரின் பயணப்பாதை
உனக்குத் தெரியும் என்று
உனக்குத் தெரியாது
மனிதன் உடலால் அறியப்படுகிறான். உடல் என்பது ஒரு காரியப் பொருள். உள்ளம் இடக்கூடிய கட்டளைகளை நிறைவேற்றும் கருவி. உடலில் உள்ள கர்மேந்திரியங்கள் எனப்படும் கைகள், கால்கள், வாய், கருவாய், எருவாய் உறுப்புகள் இட்ட வேலையை திறம்பட செய்து முடிக்கிறது. கால் இடறி பெருவிரலில் ரத்தம் வந்தால், உணர்வது உள்ளம் அன்றி பெருவிரல் அல்ல. அதாவது உடல் என்பது உள்ளம் இடும் வேலைகளை செய்யும் ஒரு கருவியே.
உள்ளத்திற்கான நினைவூட்டல்களை செய்வது புலன்கள். மனித வாழ்வு புலன் வழி ஆரம்பித்து புலன் வழியே முடிந்தும் போய்விடுகிறது. உடலுக்குள் மிக முக்கியமான ஜீவநாடி ஒன்றிருப்பதை உணர்வதே இல்லை. அதுதான் உள்ளத்தையும் உடலையும் இணைக்கும் பாலம். அந்த ஜீவநாடி ஒடுங்கி விட்டால் உடலுக்கும், உள்ளத்துக்கும் வேலை இல்லை.
உடலில் ஜீவநாடியாக இருப்பது உயிர். உயிருக்கு உன்னைப்பற்றிய உண்மைகள், உனக்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள் முழுவதும் தெரியும்.
மனிதன் தன்னைப்பற்றிய உண்மைகள் தனக்கே தெரியும் என்றாலும், அதைப்பற்றிய உணர்வே இல்லாமல் வாழ்ந்து மறைவது எப்படி நடக்கிறது? அதை யார் செய்வது? வேறு, யார் உயிரை எப்பொழுதும் பற்றி இருக்கும் இறைதான்.
மண்ணில் மனிதனைப்படைக்கும்போதே, உடலின் புருவ மத்தியில் குடியேறும் இறைவன், அவனுடைய பல பிறவிகளின் நினைவுகளை அப்பொழுதே அழித்தும் விடுகிறான்.
கண்ணின்று காட்டி களிம்பு அறுத்தானே..
இதுதான் பிறப்பின் உண்மை நிலை என்றால் எனக்குள் இருப்பது எனக்கு தெரியவே தெரியாதா?
ஏன் தெரியாது? முயன்றால் முடியாததென்றொன்றுண்டா!
உன்னுயிரில் இருந்து நினைவுகளை அழித்தவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். உள்ளம் உடலை இயக்குகிறதென்றால், உயிர் உடலுக்கும், இறைக்கும் இணைக்கும் பாலமாகவும் இருக்கிறது. இந்த உண்மையை உயிர் அறிந்து கொள்ளாமல் இருக்கும் வேலையை உள்ளம் பார்த்துக்கொள்கிறது.
உயிர் என்றாவது ஒருமுறை உண்மைகளை சொல்ல வேண்டிய காலம் வந்தால், உள்ளத்திடம்தானே சொல்ல முடியும். எனவே, உள்ளத்திடமே சரணடைந்து விடலாம்.
'உள்ளமே, உள்ளமே எப்பொழுதும் புலன் வழி செல்லாமல், உயிரிடம் என் கதையை கேட்டு சொல்' - என்று கேட்டுப்பார்ப்போம்.
புலன் வழி வரும் எண்ணங்கள் சீர்பட சீர்பட, உள்ளம் உயிரை அறிய முற்படும். மேகங்கள் விலகிய நிலவாய் உயிர் பிரகாசிக்க ஆரம்பிக்கும். உயிருடன் இணைந்திருக்கும் இறையும் வெளிப்படும்.
யாரும் கேட்காமலே உன்னுடைய உயிரின் காலப்பயணம் வெளிப்படும்.
ஏழுலகும், விண்ணும் அவற்றில் வாழும் அனைத்து உயிர்களும் தன்னுள் கொண்ட முழுமையான அண்ட சராசரமும், அவற்றின் குணங்களும், பழமையான வேதங்களும், உலகைப்படைத்த ஆதி பகவனையும் அறிந்த ஆதி யோகியான சிவபிரான் என் கண்களின் உள்ளே அன்றி வேறெங்கும் இல்லை.
திருமந்திரம் - 1871
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்ட சிவனும்என் கண்அன்றி இல்லையே.
நாம் ஒன்று தேடப்போய் நமக்கு ஒன்று கிடைத்துவிட்டது பாருங்கள். உன்னுடைய உயிர்ப்பயணம் மட்டுமல்ல, ஏழுலகும் வசப்படும் சக்தி உன் கண்களுக்கு இடையில் வசிக்கும் இறைவனிடம் இருக்கிறது. அவன் உன் உயிரோடு கலந்திருக்கிறான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
இறை நிலையில் நின்று உயிர் இயங்க ஆரம்பித்தால், உள்ளத்திற்கு உயிரின் பயணப்பாதை தெளிவாகப்புலப்படும்.
இறை நிலையில் முக்காலமும் உணர்ந்த ஞானிகள் சாதாரண மக்களின் எதிர்காலத்தை தங்களின் அறிவுப்பார்வையில் அறிந்து சொல்வதும் இப்படித்தான்.
*** *** *** *** ***
Thursday, October 10, 2024
மறுசுழற்சி
மறுசுழற்சி
மீன் தொட்டியில் வண்ண மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன, சில மீன்கள் வேகமாகவும், சில மீன்கள் மெதுவாகவும்.
மீன்களின் கழிவுகள் நீரின் அடியில் சேர்ந்திருந்தது.
மீன்களுக்கு கழிவறை, உணவறை, பள்ளியறை என்று அனைத்தும் அந்த நீருக்குள்தான். யோசிக்க, யோசிக்க மீன்களை நினைத்து அனுதாபமாக இருந்தது. மீன்தொட்டியில் உள்ள மீன்கள் மட்டுமல்ல, கடலில் மீன்கள் இருந்தாலும் இதே நிலைதான் என்று எண்ணம் விரிந்து கொண்டே போனது.
மனிதனுக்கு மட்டும் நல்ல தெம்பூட்டும் புதிய காற்று, தெளிந்த நீர், வகை வகையான தானியங்கள், பழங்கள், தேன், இறைச்சி, போதாதற்கு போதை தரும் மது வகைகள். மனைவி, மக்கள், நண்பர்கள், உறவினர்கள், ஒரே இனம், ஒரே ஜாதி என்று ஆண்டு அனுபவிக்க ஏராளமான காரணிகள்.
கொஞ்சம் நில்லுங்கள். என்ன சொல்ல வந்தேன்.. புதிய காற்று?
ஆதியில் பூமி தோன்றிய நாள் முதல் இருப்பது காற்று. பூமியில் காற்று குறையவும், நிறையவும் வாய்ப்பில்லை. புதியதாக காற்றைத் தயாரிக்க எந்த அறிவியலும் சொல்லித்தரவில்லை.
இந்த வினாடி, நாம் சுவாசிக்கும் காற்று, பல பல கோடி உயிர்கள், நாயோ, நரியோ, பூனையோ யானையோ சுவாசித்த காற்றின் மறு சுழற்சிதானே!
தெளிந்த நீர். நீர் மட்டும் ஆதியில் இருந்ததைவிட கூடவும், குறையவும் கூடுமோ?
பல உயிர்கள் நீரினை உண்டு, வெளியேற்றியதன் மறு சுழற்சிதானே நாம் உட்கொள்ளும் நீர். செயற்கையாக மறுசுழற்சி செய்த நீரினை செடிகளுக்கும், சுத்தம் செய்வதற்கும் உபயோகிக்கிறோம்.
ஆனால், நாம் குடிக்கும் நீர், மீன்கள் மற்றும் பல கோடி உயிரினங்கள் உபயோகித்து வாழ்ந்த நீரின் மறுசுழற்சிதானே.
எண்ணிலடங்கா உயிர்கள் மண்ணில் பிறந்து, வாழ்ந்து மண்ணிலே மக்கி மறைந்த மண்ணில் விளைந்த தானியங்கள், கனிகள், காய்கள், கிழங்குகள் என உண்டு மகிழ்கிறோம்.
இதில், தொட்டியில் உள்ள மீன்களைப்பார்த்து பரிதாபம் கொள்வதில் என்ன ஆகப்போகிறது.
நம் உயிரே பல பிறவிகளை கடந்து வந்த மறுசுழற்சிதானே!
கடந்த பிறப்பில் தாயாக இருந்தவள் இந்த பிறப்பில் அவள் மகளுக்கே மகளாக பிறக்கலாம். யார் தீர்மானிப்பது, யார் வயிற்றில் யார் பிறப்பதென்று?
இங்கே ஒரு முக்கியமான உருமாற்றத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
முதலில் மறுபிறப்பு என்ற ஒன்று உண்டா என்பது. மற்றொன்று, மீண்டும் பிறந்தால் மனிதனாகவே பிறப்போமா என்பது.
திருமூலர் மீண்டும் தான் மறுபிறப்பெடுக்குமுன், சுத்த வெளியில் ஒளி உடலில் எண்ணற்ற கோடி வருடங்கள் இருந்ததாகவும், வானிலுள்ள தேவர்கள் அவரை போற்றித் துதிக்கும் வகையில் இருந்ததாகவும், நந்தியம்பெருமானின் காலடியில் இருந்ததாகவும் சொல்கிறார்.
திருமந்திரம்
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
'நீயோ சித்தர் பரம்பரை. பிறவிச்சுழலில் சிக்கிய மறுபிறப்பாளர்கள் என்பது முன்னர் மண்ணில் வாழும்போது தவம் மேற்கொள்ளாதவர்கள். எப்படி உனக்கு மறுபிறப்பு கிடைத்தது?' - என்று யாரும் கேட்குமுன்னரே பதிலையும் தருகிறார்.
'இறைவன் தன்னைப் பற்றி உலகறிய செய்து, தவ வாழ்வின் மெய்ப்பொருளை உணர்த்த, தமிழில் பாட சொல்லி மறுபடியும் படைத்துவிட்டான்' - என்கிறார்.
திருமந்திரம்
பின்னை நின்றுஎன்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.
அடுத்து வருவதுதான் திருப்பமே.
உயிருக்கு மரணமில்லை, மீண்டும் மீண்டும் பிறந்திருக்கும்.
உண்மை. உயிருக்கும் ஒரு ஆரம்பம் இருந்திருக்க வேண்டுமல்லவா? அதுவும் காலத்தைப்போல், 'எப்பொழுது ஆரம்பித்தது? எப்பொழுது முடியும்?' என்ற முடிவற்ற எல்லை நோக்கி பயணிக்கிறது.
ஆதியில் இறைவன் தோன்றிய கணமே, உன்னுடைய உயிரும் தோன்றி விட்டது. உயிருடன் இச்சா சக்தி இணைந்தே தோன்றி இருக்கிறது. இச்சா சக்தி இல்லை என்றால், உயிருக்கு வேலையே இல்லை. உயிரும், இச்சா சக்தியும் இறைவன் இருப்பதை அறிவதில்லை. ஒரு வேளை இறைவனை அறியும் பட்சத்தில் உயிரும், இச்சா சக்தியும் இறையுடன் கலந்து விடும்.
திருமந்திரம்
பதி பசுபாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசுபாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதி அணுகிற் பசுபாசம் நிலாவே.
சரி, நாம் நம் உயிரின் மறுசுழற்சிக்கு வருவோம்.
நம் உயிர், ஆதியில் இறைவன் தோன்றும்போதே அவனுடன் தோன்றியது. பல பல கோடி ஆண்டுகள், பலவிதமான உடல்களைப் பெற்று இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறது.
தொடர்ந்து நம் உயிர் மறுசுழற்சிக்கு ஆட்பட்டிருக்கிறது.
போனது போகட்டும், இனி வருவதைப்பார்ப்போம்.
மரணம் எப்படி நிச்சயமோ, மறுபிறப்பும் நிச்சயம் என்று அறிந்து கொண்டோம். மீண்டும் பிறந்தால் குறைந்தபட்சம் மனிதனாக பிறக்க வேண்டும். வாழ்வாங்கு வாழ்ந்து தேவர் ஆவதெல்லாம் சாத்தியமில்லை. பதிமூன்று வருடங்கள் அஷ்டாங்க யோகம் செய்து, சித்தர் ஆவதெல்லாம் நமக்கு முடியுமா என்ன?
இறைவன் மீண்டும் உன்னைப் படைக்கும்போது நீ இந்தப்பிறவியில் செய்த நல்வினை, தீவினைக்கேற்ப உடலைத்தருகிறான்.
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு.. ..
உன் உயிரின் மறுசுழற்சியை நீதான் தீர்மானிக்கிறாய். மனிதனா, மாடா, நாயா என்பதை பூமியில் வாழும்போது நீ செய்யும் கர்ம வினைகள்தான் தீர்மானிக்கிறது.
இறைவன் மறுசுழற்சியை செய்து முடிக்கிறான்.
அஷ்டே..
*** *** *** *** *** ***
Monday, October 7, 2024
அறநிலையம்
அறநிலையம்
'கோயிலுக்கு போவதால் பயனொன்றுமில்லை. பகுத்தறிவிற்கு ஒவ்வாத, கல்லை வணங்கினால் உன் கஷ்டங்கள் தீர்ந்து போகாது.' - என்னும் ஒரு கூட்டம்.
'இறைவனை வணங்கு. கல்லானாலும், மரமானாலும் கடவுளாக எண்ணி வணங்கு. ஆலயம் தொழுவது சாலமும் நன்று.' - இப்படி ஒரு கூட்டம்.
சாதாரண மக்கள் இந்த இரண்டு கூட்டத்தில் ஒன்றில் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் அவர்களை அறியாமலே நடந்தேறிவிடுகிறது.
'இல்லை', 'இருக்கு' என்ற அறிவின் விவாதமே முடிவற்று, வாழும் வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விடுகிறது. இந்த விவாதமே ஒருவித பயத்தை உண்டாக்கி, அந்த பயமே இரு சாரார்க்கும் தங்கள் கொள்கைகளை உறுதிப்படுத்தும் ஊன்றுகோலாகிப் போகிறது.
மனிதன் பயமற்ற வாழ்க்கை வாழவே முடியாதா?
ஏன் பயமற்ற வாழ்க்கை வாழ முடியாது?
பிறக்குமுன் சொந்தமேது, சொத்து ஏது அல்லது ஆசைதான் ஏது? பிறப்பெடுத்த கணத்தில் இருந்து சொந்தம், சொத்து, ஆசைகள் மனிதனிடம் ஒட்டிக்கொள்கிறது. பிறப்பிற்கு முன்னர் காரணப்பொருளாய் இருந்த உயிர், பிறப்பெடுத்தவுடன் உடலுக்குள் நின்று காரியப்பொருளாய் மாறிவிட்டது. அத்தனைக்கும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் பிறப்பெடுத்த உடலுக்கு இருக்கிறது.
ஆசைகள்தான் துன்பத்தின், பயத்தின் ஆணிவேர் என்கிறார் திருமூலர்.
ஆசையை விட்டொழியுங்கள். அது நீ வணங்கும் ஈசனோடு சேரும் ஆசையாக இருந்தாலும் விட்டுவிடுங்கள். ஆசையினால் வருவது துன்பம். ஆசையின்மையால் வருவது ஆனந்தம்.
திருமந்திரம் - 2615
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
எதன் மீதும் உள்ள பற்று நீங்கும் போது கூடவே பயமும் நீங்கி விடுகிறது.
நீங்கள் நேசிக்கும் ஒருவர் எங்கு உங்களை விட்டு நீங்கி விடுவாரோ என்ற பயம், அவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்று உள்ளவரைதான். பற்று நீங்கினால், அவருடைய எந்த செயல்களும் உங்களை பாதிக்காது. பயமும் இருக்காது.
இறைவனோடு இருக்கும் பற்றை அவிழ்ப்பதற்கும் வழி சொல்லுகிறது திருமந்திரம்.
உன்னுடைய உடலே கோயில். உள்ளமே அங்குள்ள ஆலயம். வாயே ஆலயத்தில் உறையும் இறைவனின் கோபுர வாசல்.உன்னுடைய உயிரே சிவலிங்கம். ஐந்து புலன்களும் கோயிலின் மணி விளக்குகள்.
திருமந்திரம் - 1823
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானாற்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
இங்கே, கடவுள் இருக்கு, இல்லை என்ற கேள்வியே எழவில்லை.
இறைப்பற்றற்ற, பயமற்ற மூன்றாம் நிலை, தெளிந்த நிலை.
சாதாரண மக்களுக்கு இந்த தெளிவு நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான் பகுத்தறிவுவாதிகளும், ஆத்திகவாதிகளும் தங்களின் தலையாய கடமையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
கோயில் என்பது அறநிலையம். இன்னொருவகையில் சொல்வதானால், சாதாரண மக்களுக்கு அறம் கற்பிக்கும் தொடக்கப்பள்ளி. மேற்படிப்பு படித்து பட்டம் பெற்றவர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு கற்பித்து வழிகாட்ட வேண்டுமானால் செல்லலாம்.
இவ்வாறு இருப்பவர்கள் உடலிலே இறைவனே குடிகொள்வான்.
திருமந்திரம் - 2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீர்அனல் காலொடு வானுமாய்
விண்ணும் இன்றி வெளிஆனோர் மேனியே.
பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் தாண்டி விண்ணும் தடையாக இல்லாமல் இருப்பவர் உடலில், உண்ணும் உணவின் உணர்வாகவும், உடலாகவும், உயிராகவும் யோகத்தை கொடுக்கக்கூடிய கடவுள் குடி இருப்பார்.
*** *** *** *** ***
Friday, September 20, 2024
கண்ணா லட்டு தின்ன ஆசையா?
கண்ணா லட்டு தின்ன ஆசையா?
ஜருகண்டி.. ஜருகண்டி..
திருப்பதிக்கே மொட்டை அடித்து விட்டார்கள்.
ஒன்றும் கெட்டுவிடவில்லை. ஒருவருக்கும் உடல் நலனில் பாதிப்பில்லை. மண்ணுக்குள் விளைந்ததால் வெங்காயம் சாப்பிடாதவர்கள்தான் லட்டை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்பார்கள். மற்றவர்களுக்கும் பிரசாதமாய், திருப்பதி சென்று வந்த பெருமையை பறைசாற்ற கொடுத்திருப்பார்கள்.
இது சரியா, தவறா என்ற புலன் விசாரணைக்குள் நாம் செல்ல வேண்டாம். இது கொண்டு வந்திருக்கும் அரசியல் மற்றும் ஆன்மீக சலனங்களை மட்டும் பார்ப்போம்.
அரசியலை விடுவோம். கொஞ்சம் பின்னோக்கி போனால், ஆரம்பம் முதலே லட்டு தயாரிப்பு இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று முடித்து விடுவார்கள்.
இந்த ஆன்மீகவாதிகள், பகுத்தறிவுவாதிகள் ஆட்டம்தான் சுவையாக இருக்கும்.
பசு உண்ணும் புல்லும், புண்ணாக்கும்தான் உடலில் பாலாகவும், கொழுப்பாகவும் மாறி இருக்கிறது. பாலில் நெய்யும், கொழுப்பில் எண்ணையும் கிடைக்கிறது. இரண்டையும் கலந்து லட்டு செய்திருக்கிறார்கள்.
'இது பெரிய தீட்டு. பரிகாரம் செய்யாமல் கோயில் நடை திறக்கக்கூடாது.' - என்று ஆன்மீகவாதிகள் கிளம்புவார்கள்.
நமக்கே சாமி இல்லை, பூதம் இல்லை. இது அடுத்தவன் வீட்டு விவகாரம், என்று சும்மா இருக்க மாட்டார்கள் பகுத்தறிவுவாதிகள்.
'கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி லட்டே கோவிந்தா.. உங்க கோவிந்தனால ஒண்ணும் புடுங்க முடியாது.'
பன்னிரண்டு மணி நேரம், பதினெட்டு மணி நேரம் வரிசையில் நின்று வெங்கடேசனைத் தரிசித்து, புனிதமான பிரசாதமாக எண்ணி வாங்கிய லட்டு மாட்டு கொழுப்பில் தயாரானது என்று தெரிய வரும்போது பக்தர்கள் மனம் தளர்ந்து போவது இயற்கையே.
அதற்குத்தான், திருமூலர் இப்படி சொல்கிறார்:
படமாடக் கோயில் பகவற்கு ஒன்றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றீயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இறைவனை படமாக வைத்து வணங்கும் கோயிலில் உள்ள தெய்வத்துக்கு நீங்கள் பொருட்களை கொடுப்பதால், எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை. அதுவே, எளிய மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் பொருளானது நேராக அந்த இறைவனுக்கே சென்று சேர்ந்துவிடும்.
இப்படி எளியவர்களுக்கு உதவுவதால் நேரமும் மிச்சம், மனதிற்கும் நிம்மதி.
திருப்பதிக்கு லட்டு; பழனிக்கு பஞ்சாமிர்தம்.
'லட்டுக்கு நெய் வார்த்த அதே மகாப்பிரபுதான் பஞ்சாமிர்தத்திற்கும் நெய் வார்த்திருக்கிறார்.'
நல்ல வேளை, இந்த செய்தி இட்டுக்கட்டியது என்று தெரிவித்துவிட்டார்கள்.
என்ன கொடுமை சரவணா?
*** *** ***
கல்லிலே கலைவண்ணம்
கல்லிலே கலைவண்ணம் எனக்கு தீப ஆராதனை. இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...
-
உயிரின் பயணம் முடிவதில்லை மனிதனுக்குள் இறைவன் ஒளித்து வைத்த ரகசியம்.. உயிரின் பயணப்பாதை உனக்குத் தெரியும் என்று உனக்குத் தெரியாது மனித...
-
கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஜருகண்டி.. ஜருகண்டி.. திருப்பதிக்கே மொட்டை அடித்து விட்டார்கள். ஒன்றும் கெட்டுவிடவில்லை. ஒருவருக்கும் உடல் நலனில்...
-
உணவே உயிர் சமீப கால இளவயதினரின் மரணங்கள் சமுதாயத்திற்கு பெரிய சவாலை விட்டு செல்கிறது. மரணங்களுக்கான காரணம் என்னவென்று தெளிவாக யாராலும் சொ...