Tuesday, February 23, 2021

கேளுங்கள் தரப்படும்

கேளுங்கள் தரப்படும்

என் மனத்தில் ஒன்றைப்பற்றி 
நான் நினைத்ததெல்லாம் வெற்றி 
நான் இனிப்பறிக்கும் மலர் அனைத்தும்
மணம் பரப்பும் சுற்றி                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

    

இறைக்கனலை திருமந்திரத்தில்,  

தேடினேன் வந்தது..
நாடினேன் தந்தது..

***

'ரொம்ப குளிருது. ஃபேன நிறுத்திரு..'
என்னைப்பார்த்து புற்று நோய் சிகிச்சையில் இருந்த  அக்கா சொன்னார்கள்.

காற்றோட்டமில்லாத மருத்துவ அறை. மாலை நேர புழுக்கம் வேறு. அறையில் ஃபேன் போட்டுக்கூட வியர்த்து கொட்டியது.

எப்படி இது சாத்தியம். ஒரு உடலுக்கு குளிர்ச்சி; மற்றொன்றுக்கு வெப்பம்.

புற இறைக்கனல் இரு உடலுக்கும் ஒரே அளவில் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
எனவே, அக  இறைக்கனலில்தான்  மாற்றம் இருக்க வேண்டும். 

புறக்கனல் எரித்து வெப்பம் கொடுக்கும் சிற்றறையில் உள்ள சத்தின் [எரிபொருள்] அளவு ஒரு உடலில் இல்லாமலும், மற்றொன்றில் இருப்பதும்தான் காரணம்.


அண்ணல் உடலாகி அவ்அனல் விந்துவும் 
மண்ணிடை மாய்க்கும் பிராணன் ஆம்விந்துவும் 
கண்ணும் கனல்இடைக் கட்டிக் கலந்துஎரித்து 
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.

                                                                                         - திருமந்திரம் 1951

இறைவனே உடலாக உருவெடுத்து, அங்கே சக்தியாக, அகக்கனலாக விளங்கும் வித்தினையும், உடலுக்கு உயிரூட்டும் பிராணனாக உள்ள புறக்கனல் வித்தினையும் நெற்றிக்கு நடுவில் வைத்து எரித்தால், அதுவே அமிர்தமாக, யோகிக்கு தேவையான உணவும், உணர்வும் ஆகும்.

யோகிக்கு மட்டும் இந்த பேறு கிடைக்குமா அல்லது  மற்றவர்கள் யார், யாருக்கு இந்த பேறு கிடைக்கும் என்பதனையும் திருமூலர் விளக்குகிறார்.


யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் 
போகியும்  ஞான புரந்தரன் ஆவோனும் 
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும் 
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

                                                                                               - திருமந்திரம் 1950

உடலின் உணர்வுகளால்  உந்தப்பட்டு, மோக வயப்பட்டு இல்லற இன்பத்தில் ஈடுபட்டாலும், மேலே சொன்ன யோகியர்களும், உலகை உணர்ந்த ஞானிகளும், மற்றவர் நலனில் அக்கறை கொண்ட சித்தர்களும், உலக போக வாழ்வில் உள்ள இல்லறத்தாரும், ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி  வழங்குபவர்களும், முறையாக அகக்கனல், புறக்கனலை  நெற்றிக்கு நடுவில் எரித்து அமிர்தம் உண்ணுவார்கள் என்றால் அவர்களும் உயிர் வித்தினை அழியாமல் காப்பவர்களே.

குறிப்பு: 
நாம் அனைவரும், போக வாழ்வில் உள்ள இல்லறத்தார் கணக்கில் வருபவர்கள். நாமும் அமிர்தம் உண்ண முயற்சிக்கலாம்; முடியும், முறையாக பயிற்சி செய்தால்.  வாருங்கள் அகக்கனலையும், புறக்கனலையும் இணைக்கும் வழிதனை,  திருமூலர் திருமந்திரத்தில்  சொல்வதை கேட்டே தெரிந்து கொள்வோம்; பயிற்சி செய்வோம்.

இறைக்கனல்: 5                                                                                         தொடரும்..

Friday, January 22, 2021

மூச்சுக்காற்று

மூச்சுக்காற்று 

கொஞ்சம் விலகி 
நின்ற போதும் 
இந்த இதயம் தாங்கவில்லை 



அமைதி.. அமைதி.. அமைதி..

அமைதியாக, வசதியான இடத்தில் அமரவும்.

ஒரு நிமிடம் உங்கள் மூச்சுக்காற்றை உற்று கவனியுங்கள்.

அமைதியான சூழ்நிலையில் இருப்பதால், மூச்சுக்காற்று சீராக உள்ளும், புறமும் சென்று வந்து கொண்டிருப்பதை உணர முடியும்.

உள்ளே சென்றதும், வெளியேறுவதும் அதே காற்றா  அல்லது முன்னர் சுவாசித்த காற்றா?  சுவாசித்த காற்றில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?

உள்ளிழுத்த காற்றில் ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு, பிரதானமாக இருந்தது. வெளியேறும் காற்றில் கார்பன்-டை-ஆக்சைட் என்னும் அபான வாயு பிரதானமாக இருக்கிறது.

அறிவியல் ரீதியாக பார்த்தால், கார்பனை எரிக்க ஆக்சிஜனை   உபயோகப்படுத்தினால், அது கார்பன்-டை-ஆக்சைடாக மாறும்.

Carbon  + Oxygen  =  Carbon dioxide 

 அதாவது, நாம் உள்வாங்கிய காற்றில் இருந்த ஆக்சிஜன் நம் உடலுக்குள் எரிக்கப்பட்டிருக்கிறது. எங்கே எரிப்பு  நடந்திருக்க சாத்தியமிருக்கிறது?

அடிப்படையில், ஒரு பொருளை எரிக்க நெருப்பு வேண்டும். அது, மனித உடலுக்கு அகக்கனல், புறக்கனல் என்னும் இருநிலையில் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது.

குறிப்பு: இங்கே நான் புறக்கனல் எனக்குறிப்பிடுவது, எப்பொழுதும் நம் உடலை சூழ்ந்திருக்கும் இறைக்கனல் ஆகும். புறத்தில் கிடைக்கும், சூரிய   வெப்பம் அல்ல.

அகக்கனல் என்பதை நாம் உண்ணும் உணவை சத்தாக மாற்றும்  கனலாக கொள்ளலாம். இது மணிப்பூரகம் என்று அறியப்பட்ட தொப்புள் பகுதியில் உள்ளது. அகக்கனல் எப்படி நம் உடலுக்கு வந்தது என்பதை திருமந்திரம் சொல்வதை பார்ப்போம்:

வேயின் எழுங்கனல் போலஇம் மெய்எனும் 
கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி 
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் 
தோயமதாய் எழும் சூரியன் ஆமே.

                                                                                                - திருமந்திரம் 116

மூங்கில்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு நெருப்பை உண்டாக்குவதுபோல்,
தாயினும் மேலாக கருணை புரியும் இறைவன், நம் உடலில்  சூரியனைப்போல் எழுந்து அகக்கனலை கொடுக்கின்றான்.

அகக்கனல் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை, உடலின் ஒவ்வொரு சிற்றறைக்கும் அதன் தன்மைக்கும், தேவைக்கும்  ஏற்ப  எடுத்து செல்கிறது. அந்த சத்து, எளிதில் எரியக்கூடிய தன்மையில் கார்போஹைட்ரேட் /குளுக்கோஸ் நிலையில் இருக்கிறது.

மூச்சுக்காற்றில் கிடைக்கும் ஆக்சிஜன் எரிப்பது குளுக்கோஸில் இருக்கும்  கார்பனைத்தான்.

Glucose Chemical Compound Structure: C6H12O6 

தொடர்ந்து நம் உடலுக்கு வெளியில் இருந்து  கிடைத்துக்கொண்டிருக்கும் கனலை, புறக்கனல் என்று சொல்கிறோம்.  இந்த புறக்கனல் தொடர்ந்து உடலை சூழ்ந்து கனலை வழங்கிக்கொண்டுள்ளது.

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே 
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா 
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் 
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

                                                                                        - திருமந்திரம் 117

சூரியனின் ஒளிக்கற்றை பஞ்சை சூழ்ந்து சுட்டெரித்துவிடும். ஆனால், புறக்கனல் எனப்படும் ஒளிக்கற்றை உடலை சூழ்ந்திருந்தாலும் உடலை சுடாது. எந்தப்பொருளும் சூரியன் முன்னர் சுட்டு சாம்பலாவதுபோல், எந்த   மாயையும் புறக்கனல் முன் நிற்க முடியாது.

அகக்கனல் சிற்றறையில் சேர்த்து வைத்துள்ள சத்தினை, புறக்கனல் என்னும் நெருப்பு சூழ்கிறது. நாம் உள்வாங்கிய காற்றில் இருந்த ஆக்சிஜன் புறக்கனலுடன் சேர்ந்து அங்கே ஆகுதி நடக்கிறது.

இந்த ஆகுதியில் கிடைக்கும் ஆற்றலினால், நம் உடல் இயங்குகிறது. 

உடலின் இயக்கம் 96 தத்துவங்களாக [காரணிகள்] பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றின் செயல்பாட்டிற்கும்,  இந்த ஆற்றலே அடிப்படையாக அமைகிறது.

சிந்தனைக்கு:

உடலின் அனைத்து பாகங்களும், ஒரே  சீரான வெப்ப நிலையில் இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? எங்கிருந்து இந்த வெப்பம் உருவாகிறது, எப்படி பயணிக்கிறது?

இறைக்கனல்: 4                                                                                           தொடரும்.. 


Tuesday, January 19, 2021

சங்கிலித்தொடர்

சங்கிலித்தொடர்

என்தெந்து நின்னனு  மறது 
பதுக்கிரலாறெ..   
இன்னெந்து நின்னனு  அகலி
நானிரலாறெ..   





என்றென்றும் உன்னை மறந்து வாழ்ந்திருக்க மாட்டேன் - அகக்கனல்.           இனி என்றும் நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்                -  புறக்கனல்.

நாம் உண்ணும் உணவை, ஏழு வகை தாது சத்துக்களாக மாற்றும் வேலையை  அகக்கனல் செய்கிறது. சத்துக்களை எரித்து, ஆற்றலாக மாற்ற புறக்கனல் துணை நிற்கிறது.

நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இங்கே இருக்கிறது. அகத்தையும், புறத்தையும் இணைக்கும் சங்கிலித்தொடர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

விழித்திருக்கும் நேரமும், உறங்கும் நேரமும் அல்லது உயிருள்ள ஒவ்வொரு கணமும் அகக்கனலும், புறக்கனலும் எவ்வாறு நம் உடலுடன் தொடர் இணைப்பில் இருக்கிறது?

இணைக்கும் சக்தியை திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்:

அண்ட சராசரங்களும், எல்லையற்ற பேரண்டப் பெருவெளியும் உருவாக வித்துவாக இருக்கும் விந்து, புறக்கனலாக திகழ்கிறது. அதுவே, ஐம்பூதங்களின் காரிய மாயையில் சிக்கியுள்ள  உடலில்  அகக்கனலாக உருவெடுத்து நிற்கிறது. 

வீயம தாகிய விந்துவின் சத்தியால் 
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்ப 
காயஐம் பூதமும் காரிய மாயையில் 
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே.

                                                              - திருமந்திரம் 1928

வித்து ஒன்றுதான். சங்கிலித்தொடராக இருக்கும் கனலின் தன்மையே மனித உடலின் செயல் திறனாக இருக்கிறது. இந்த வித்தின் தன்மையையும் கீழ்க்கண்டவாறு திருமூலர் விளக்குகிறார்:

தூய வெண்மை நிறத்தில் ஒளிரும் தன்மையையும், தன்னுள்ளே சீரான ஒலியையும் கொண்டுள்ள விந்து, உடலில் எங்கும் நிறைந்துள்ளதுபோல், புறத்திலும் பரவி நிற்கிறது. இங்கேதான், சக்தியும் சிவமும் உறைந்துள்ளதை மகிழ்வுடன் உணர்ந்து வாழ்பவர்களுக்கு, வாழ்நாள் கூடும், வீடுப்பேறடையவும் கூடும்.

புறம்அகம் எங்கும் புகுந்தொளிர் விந்து 
நிறம்அது வெண்மை நிகழ்நாதம் செம்மை 
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் 
திறனொடு வீடளிக்கும் செயல் கொண்டே.

                                                              - திருமந்திரம் 1929

அகம், புறம் இணைத்து நம் உடலை பாதுகாக்கும் முறையை அறிந்து, போற்றி, அதன் வழி நடக்க திருமந்திரம் நல்ல வழிதனை காட்டி உள்ளது. 

தொடர்ந்து எழுதுகிறேன்...

இறைக்கனல்: 3                                                                                      தொடரும்..








Sunday, January 10, 2021

நெருப்பு டா..

நெருப்பு டா.. 

நெருப்பு டா.. 
நெருங்கு டா.. 
முடியுமா?



நெருப்பு டா..

உன் உள்ளும், புறமும் நெருப்பு டா..

அடிவயிற்றில் உனக்குள் கனன்று கொண்டிருப்பது அகத்தீ; பிரபஞ்சத்தில் இருந்து  உனக்கு வந்து கொண்டிருப்பது புறத்தீ [இறைக்கனல்]. இறைக்கனல் வேறு, சூரியக்கனல் வேறு.

அகத்தீ அளவு மாறும் தன்மை கொண்டது. புறத்தீ அளவு மாறாதது, பிறவி முழுதும் தொடர்ந்து ஒரே சீராக பிரபஞ்சம் வழங்கிக்கொண்டிருப்பது.

நம் உடலின் ஒவ்வொரு சிற்றறைக்குள்ளும், இக்கனல்களின் சந்திப்பு இடைவிடாமல்  நடந்து கொண்டே இருக்கிறது. இச்சந்திப்பில் கிடைக்கும் ஆற்றலினால் தான், உடலின் அனைத்து இயக்கங்களும் நடந்து கொண்டிருக்கிறது. உடலின் இச்சை செயல்கள், அனிச்சை செயல்கள், சோர்வு, தூக்கம், விழிப்பு என்று  அனைத்திற்கும் மூல காரணம் இக்கனல்களின் சந்திப்பே. எந்த கணத்தில் இந்த சந்திப்பு சங்கிலி அறுபடுகிறதோ, அந்த கணத்தில் உடல் உயிரற்றதாகி விடுகிறது.

குழந்தையாக இருக்கும்போது  கிடைக்கும் அதே அளவு புறக்கனல், உடல் உயிரை விடும் வரை கிடைத்துக்கொண்டிருக்கிறது. முதலில், உடல் முழு வளர்ச்சி பெற உதவும் இக்கனலின் ஆற்றல், நாட்பட நாட்பட, உலக நாட்டங்களின் பால் செல்லும் ஐம்புலன்களின் எண்ண ஓட்டங்களுக்கேற்பவும், இனப்பெருக்கத்திற்காகவும்  செலவிடப்படுகிறது.

இறைவன் இப்பிரபஞ்சக்கனலை, பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிருக்கும்  வழங்குவதை திருமூலர் இவ்வாறு கூறுகிறார்:

சூரியனின் ஒளியை குவித்தால், அந்த  வெப்ப ஆற்றல்  சூழ்ந்துள்ள பஞ்சினை எரித்து விடும். ஆனால், அதே மாதிரியான பிரபஞ்சக்  கனலை குவித்து, உடலென்னும் பஞ்சினை சுட்டுவிடாமல் வழங்கிக்கொண்டுள்ளான். அதே நேரத்தில், சூரியனின் சந்நிதியில் வைக்கும் பொருள் சுடப்பட்டு அதன் தன்மை மாறுவது போல்,  மனிதனை படைக்கையில், உடலுக்குள் இருக்கும் முந்தைய பிறவிகளின் பற்று, பந்தங்களையும் எரித்து விடுகிறான்.

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சை சுட்டிடா 
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் 
சூரியன் தோற்றமுன்  அற்ற மலங்களே.

                                                                                - திருமந்திரம் 117


அகத்தீ என்னும் அகக்கனல் எப்படி உடலுக்கு இறைவன் வழங்கியுள்ளான் என்பதனையும், திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்:

ஏழுலகையும் படைத்த இறைவன், எங்கும் கனல் மிகுந்து போகாமல் அளவோடு வைத்தான். உடலுக்குள்ளும் தங்கும் கனலின் அளவை அறுதி செய்தான். திருமந்திரம் என்னும்  தமிழ் மறையின் உள்ளே, கனலின்  முழுப்பொருளையும் அனைவரும் அறியும் அளவிற்கு முழுமையாக  வைத்தான்.

அங்கிமிகாமை வைத்தான் உலகு ஏழையும் 
எங்கும்மிகாமை வைத்தான் உடல் வைத்தான் 
தங்கிமிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமிகாமை வைத்தான் பொருள் தானுமே.

                                                                                                - திருமந்திரம் 87


என் குறிப்பு:

திருமந்திரப்பாடல்களுக்கு நான் கொடுத்துள்ள விளக்கம், சரியோ, தவறோ தெரியாது. ஆனால், பாடல்களின் பொருள் அவரவர் நுண்ணறிவிற்கு ஏற்ப மாறுபடும் என்பது மட்டும் உண்மை.  எனவே, பாடல்களின் விளக்கம் உங்கள் அறிவுக்கு மாறுபட்டால் பொறுத்தருளவும்.

மகிழ்ச்சி..

இறைக்கனல்: 2                                                                                  தொடரும்..







Sunday, January 3, 2021

ஆலங்காய் - நிலா

ஆலங்காய் - நிலா 

உள்ளமெலா மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ  
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் 
வெண்ணிலவே சிரிக்காயோ 



மாதுளங்காயானாலும் 
என்னுளங்காயாகுமோ?

பெண்ணே! உன்னுடைய உள்ளம் கனியாமல் இருந்தாலும், என்னுள்ளம் கனியாமல் இருக்குமா?

அட.. அட.. இப்படியும் ஒரு பாடல் இன்னொரு மொழியில் பிறக்க முடியுமா? கவியரசு கண்ணதாசனின் உள்ளம், தமிழால் கனிந்ததால், தமிழுக்கு மகுடம் சூட்ட, நமக்கு கிடைத்த அற்புதமான பாடல்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 

- திருக்குறள் 423

தமிழ் கண்ணதாசனுக்கு கிடைத்த பொருள். தமிழின் மெய்ப்பொருளை தன்  அறிவினில் உணர்ந்து படைத்ததனால் எந்த நிலையினிலும் அவனுக்கு மரணமில்லை.

இதையே இன்னொரு வகையாக விளங்கிக்கொள்ளலாம். அதாவது, ஒவ்வொருவரும் தன்னுடைய அறிவு நிலைக்கேற்ப பொருளை உணர்ந்து கொள்கிறார்கள், ஆன்மீக வழி செல்பவர்களும் சரி, நாத்திக வழி பின்பற்றுபவர்களும்  சரி. எண்ணற்ற அறிவு நிலை பொக்கிஷங்களை  தன்னுள்ளே கொண்டுள்ள தமிழ், அதன் மெய்ப்பொருளை உலகிற்கு வெளிப்படுத்தாமைக்கு இதுவே முழு முதல் காரணம்.  

வெட்டிப்பேச்சுக்களும், விதண்டா வாதங்களும் தன்னுடைய நேரத்தை வீணடிப்பதல்லாமல் சமுதாயத்தின் நேரத்தையும் செலவழிக்க வைக்கிறது. இந்த சாபக்கேட்டை முதலில் நாம் உணர்ந்து அதை விலக்கிக்கொள்ள பழக  வேண்டும்.

தங்கம் வேண்டுமென்றால், மண்ணைக்குடைந்துதான் ஆக வேண்டும்; சகதிகளையும், இடைவரும் இடற்கண்களையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். சகதிகளை மட்டும் அலசிக்கொண்டிருந்தால் பலனும் சகதியாகத்தானே இருக்கும்.

பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதனும் படித்து, உணர்ந்து கொள்ள வேண்டிய நூல் திருமந்திரம். தமிழில் உள்ள அற்புத சொத்து. நாம் படிப்பதோடு நில்லாமல், உலகோர்க்கு எடுத்து சொல்ல வேண்டிய உயிர் மந்திரம்.

தமிழில் திருமந்திரம் எப்படி வந்தது என்பதை  திருமூலர் இப்படி சொல்கிறார்:

மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பவர்கள், முந்தைய பிறவியில் முயன்று தவம் செய்யாதவர்கள். பின்னர் நீ எப்படி பிறவி பெற்றாய் என்று திருமூலரை கேட்பவர்களுக்கு, இறைவன் என்னை நன்றாக படைத்தது, இப்பிறவியில் இறைநிலையை அனைவரும் அறிந்து கொள்ளுமாறு, தமிழில் தெளிவாக   எடுத்து சொல்வதற்கே, என்கிறார். 

பின்னை நின்றுஎன்னே பிறவி பெறுவது 
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர் 
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.

- திருமந்திரம் 81

தமிழை படிக்கிறோம்..பேசுகிறோம்..கேட்கிறோம்.. எழுதுகிறோம். உணர்வதற்கு திருமந்திரம். இதுவே தமிழனாய் பிறந்ததற்கு நாம் பெற்ற  பெரும் பேறு.


இறைக்கனல்:1                                                                                           தொடரும்..

Sunday, December 6, 2020

புத்தி

புத்தி  

பாவம் என்ற 
கல்லறைக்கு பல வழி 
என்றும் தர்மதேவன்   
கோவிலுக்கு ஒரு வழி 




மனம் - புத்தி - அஹங்காரம் - சித்தி 

இந்த நான்கு தத்துவங்கள் உடலின் பிரதம தத்துவங்களான 36 தத்துவங்களில் வரும் ஆன்ம  தத்துவங்களில் அந்தக்கரணம்  என்று அறியப்படுகிறது. 

ஐம்புலன்களால் தொடர்ந்து வரும் செய்திகள் எண்ணங்களாக மாறி உடலின் சக்தியை ஆக்கிரமித்துக்கொள்கிறது. மனம், கனவுகளற்ற உறக்கம் தவிர்த்து,  மற்ற நேரங்களில் எண்ணங்களால் புடை சூழப்பட்டு, உடலின் ஆற்றலை  தொடர்ந்து உபயோகித்து கொண்டு  உள்ளது. 

நம் பட்டனுபவம், படிப்பனுபவம், கேள்வி அறிவு, குரு வழி காட்டுதல் மற்றும் கரு வழி செய்திகளுமாக மனம் அடுத்த கட்ட புத்தி என்னும் அறிவு நிலையை அடைகிறது.

அறிவுநிலை மிக மிக, தன்னிச்சையாக அஹங்காரம் தலை தூக்கி நிற்கிறது.

சித்தி நிலை செல்வதென்பது சாதாரண மனிதர்களால் இயலாத காரியம்.

இதனையே ஷீரடி சாய்பாபா உபதேசத்தில், ஆன்மீக நாட்டமுள்ள ஏழ்மையிலுள்ள மனிதனால், தன் வீட்டு நிலைப்படியை தாண்டி செல்ல முடியாது என்று சொல்கிறார். இங்கு ஏழ்மை என்பது அஹங்கார நிலைப்படி.

அஹங்காரம்தான் அத்தனை அலட்சியங்களுக்கும் ஆணி வேர்!

திருமூலரோ, தொடர்ந்து உங்கள் சிந்தையில், மனித குலத்தின் தேவனை, நிலைபெற  நினைப்பதன் மூலம் உலக வாழ்வின் துன்பங்களில்  இருந்து தப்பி சித்தி நிலை அடையுங்கள்  என்கிறார்.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 
நன்றே நினைமின் நமன்இல்லை நாணாமே 
சென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே.

                                                                              - திருமந்திரம் 2104

திருவள்ளுவரும் தன் பங்கிற்கு அறிவு நிலையில் இருந்து, ஒன்றினை அறிந்து கொள்வதெப்படி என்று கோடி காட்டுகிறார்.

யார் சொன்னார்கள் என்பதனை விட்டு  விட்டு, என்ன சொன்னார்கள் அதன் உட்பொருளென்ன என்று அதனின் உண்மை நிலை தெரிந்து கொள்வதே அறிவு.

குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

உண்மை நிலை அறியாமல், வெறும் பட்டறிவு அனுபவமே போதும், அதை வைத்தே அனைத்தையும் தீர்மானிப்பது என்பது வெறும் அறிவற்ற செயல்.



Monday, November 23, 2020

கனவு ஏன் வந்தது?

கனவு ஏன் வந்தது?

நீல நயனங்களில் 
ஒரு நீண்ட கனவு வந்தது 
அதன் கோல வடிவங்களில் 
பல  கோடி நினைவு வந்தது! 



 

'அரச மண்டபம் போன்ற தோற்றம். கோயிலாகவும் இருக்கலாம்.

அந்த மண்டபம் முழுதும் மரகதப்பச்சையில் ஒளிரும் தீபங்கள்.  மனிதர்களுக்கு மாற்றாக பச்சை வண்ண பாம்புகள்  சீரான இருக்கைகளில் அமர்ந்திருந்தது. அவைகளுடன், நானும் இருப்பது போன்ற உணர்வு.

எந்த உரையாடலும் இல்லை. ஆனால், அனைவருக்கும் செய்தி பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது.'

ஏழு வயதில், என்னுடைய நினைவில் நின்ற முதல் கனவு. பயந்துபோய், வியர்த்து அலறிக்கொண்டெழுந்தது இன்னும் என் நினைவில் பசுமரத்தாணிபோல் இருக்கிறது.

கனவு ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது? கண்டது எப்படி?

ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறால் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில் மாயைதானே.
                                                                                  - திருமந்திரம் 2197     

உடல், மனம்  இயங்கு தன்மையை மொத்தம்  96 வகைகளாக பிரித்து, அதன் செயல்பாட்டினிற்கேற்ப உடல் இயக்கம் பெறுவதை கூறுகிறார்கள். இதில் 36 தத்துவங்கள் பிரதம தத்துவங்கள் என்று அறியப்படுகிறது. மற்றவை சார் தத்துவங்கள்.

ஆறாறு என்று 36 தத்துவங்களை குறிப்பிடும் திருமூலர், அதில் 25 தத்துவங்கள் அமைதி நிலையில் இருக்கும்போது, நனவில் நனவு, அதாவது   முழு உணர்வு நிலை. மேலும்  ஐந்து தத்துவங்கள் அமைதி நிலை கொள்ளும்போது, உணர்வுடன் கூடிய  கனவு  நிலை. மீதமுள்ள ஐந்து தத்துவங்களையும்  விட்டு விட, நனவின் இறுதி நிலையான உறக்கத்திற்கு சென்று விடுகிறது. இந்த நிலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது வெறும் மாயை மட்டுமே.  

சரி, இப்பொழுது நீங்கள் கண்ட கனவுக்கு வருவோம். எப்பொழுதாவது, உங்கள் கனவும், நிஜ வாழ்வும் ஒன்றி போனதுண்டா? 

பாஸ்போர்ட் கூட எடுக்காத, வெளி நாடு செல்வது  பற்றி எண்ணியே  பார்த்திராத   கால கட்டத்தில்,  பன்னாட்டு விமான நிலையத்தில்,  என்னை ஆஸ்திரேலியா வழியனுப்பும் கனவு எனக்கு வந்தது.

எதிர்காலம் பற்றி கனவு வருவது எப்படி சாத்தியம்?

வானியலில் இதுவரை அறியப்படாத ரகசியம் கருந்துளை [Blackhole]. காலப்பயணம் செய்யக்கூடியது. அதே கருந்துளை நமக்குள், மூலாதாரத்தில் உள்ள குண்டலினி. இது பல கோடி வருடங்கள் முன்னும், பின்னும் பயணம் செய்த அனுபவம் கொண்டது. கனவுகளில் நம்மை ஆட்கொண்டு தன் காலப்பயணத்தில் ஒரு துளியை காட்டி செல்வது  ஒன்றும் ஆச்சரியம் இல்லைதானே! 

மனித உடல் உயிர் தத்துவங்கள் 

பூதம்: 5
தத்துவங்கள்: 96 [பூதமைந்தில்]

பிரதம தத்துவங்கள்: 36 [உடல் கருவி]
சார் தத்துவங்கள்: 60

பிரதம தத்துவங்கள் 

ஞானேந்திரியங்கள்                                                                           5
[கண்,  காது, மூக்கு, வாய், மெய்]
கர்மேந்திரியங்கள்                                                                             5
[வாய், கை, கால், கழிவுறுப்பு, பிறப்புறுப்பு]
பூதங்கள்                                                                                                  5
[ நிலம், நீர்,நெருப்பு,  காற்று, ஆகாயம்]
தன்மாத்திரைகள்                                                                                5
[சப்தம், ஸ்பர்ஷம், ரூபம், ரசம், கெந்தம்]
புத்தி                                                                                                           4
[மனம், புத்தி, ஆங்காரம், சித்தி]
வித்யா  தத்துவங்கள்                                                                          7
[காலை, நியதி, கலை, வித்தை, ராகம், புருடன், மாயை]
சிவ  தத்துவங்கள்                                                                                 5
[சுத்த வித்யா, ஈஸ்வரம், சாதாக்கியம் அல்லது சதாசிவம், சக்தி, சிவம்] 












கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...