இறைவன் கொடுத்த பாத்திரமொன்று கைகளில் இருக்கிறது இரவும் பகலும் நிரந்தரமாக நம்முடன் வருகிறது - அது நம்முடன் வருகிறது..
எவ்வளவு உழைத்தாலும் எப்படித்தான் சேர்த்தாலும் நிறைவதில்லை பாத்திரம் நிறைவதில்லை.. எள்ளளவு மனம் போதும் என்றால் மனம் போதும் என்றால் நிறைந்துவிடும் பாத்திரம் நிறைந்துவிடும்..
கடவுள் நமக்கு கொடுக்கும் பாத்திரம் தற்செயலானது அல்ல. எவர் மீதும் விருப்போ, வெறுப்போ கொள்ளும் நிலையில் இறைவன் இல்லை. ஒருவருடைய மண்ணில் வாழ்வென்பது , ஓர் ஆணும் பெண்ணும் கலந்து இன்புறும் நேரத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. அங்கே, ஓர் உயிரை விதைத்து வைப்பதோடல்லாமல், அவ்வுயிருடனே இறுதி வரை பயணிப்பவனும் இறைவனே!
உயர்ந்த வானத்தில் உள்ள இறைவன், ஓர் உயிரை படைக்கும்போது அவனுடைய முந்தைய பிறவிகளின் வினைப்பயனாக, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் அவன் பெற்ற இன்ப, துன்ப நிலையும் கணக்கில் கொள்கிறான். அவன் இந்த மண்ணின் பண்புகளுக்கேற்ப வாழும் காலமும், அதற்கேற்ற உலக வாழ்வும் அமைத்து விடுகிறான். இதை, ஓர் ஆணும், பெண்ணும் அன்புடன் கலந்து இன்புற்றிருக்கும் நேரத்தில் செய்து முடிக்கிறான்.
'அனுபவம்தான் வாழ்க்கையென்றால் நீ யார் என்று கேட்ட மனிதனுக்கு அந்த அனுபவமே நான் என்றான் இறைவன்' - கவியரசர் கண்ணதாசனின் வார்த்தைகள் இவை.
அனுபவம் என்பது புலன்களின் செயல்களால் கிடைப்பது. ஆனால், அந்த ஐம்புலன்களின் அதிகாரியாக செயல்படுவது மனம். மனத்தின் கட்டளைகளால் பெறுகின்ற இன்பமும், துன்பமும் நான்தானே அனுபவிக்கிறேன் என்றால் அது உண்மையல்ல. என்னுடைய உடல் ஒரு கருவி மட்டுமே. உடலை சார்ந்து இன்னொரு உடல் இருக்கிறது. அதுவே, ஒளி உடல். அந்த ஒளி உடலே அனைத்தையும் அனுபவித்து, கர்ம வினைகளாக தன்னுள் கொண்டிருக்கிறது.
திருமந்திரம் - 2123
அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே.
இறைவன் நமக்கு கொடுத்த உடல் பரு உடல், ஒளி உடல் என்று இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. அதில், சுத்தமான உடல் என்பது ஒளி உடல் ஆகும். ஒளி உடல் எட்டு வகையான செயல்களை ஈர்க்கும் தன்மை கொண்டது.
புலன்கள் வழங்கும் உணர்வுகள்:
சத்த - ஒலி
பரிச - ஊறு
ரூப - பார்வை
ரச - சுவை
கந்தம் - மணம்
மனம் அறியும் அனுபவங்கள்:
புத்தி - அனுபவ அறிவு
மான் (மனம்) - செயல் நிலை
ஆங்காரம் - அறிவின் வெளிப்பாடு
உடலின் இரு கூறுகள்:
பரு - ஸ்தூல உடல்
புரியட்ட காயம் - ஒளி உடல்
[புரியாக திரிக்கப்பட்ட நூல்போல், மேற்சொன்ன எட்டு வகையான தன்மைகளும் ஒருங்கிணைந்து இருப்பது சூக்கும உடல் என்னும் ஒளி உடல்]
இப்பொழுது தெரிகிறதா, ஒருவரைப் பார்த்தவுடன் ஈர்ப்போ, வெறுப்போ ஏன் வருகிறதென்று. கர்ம வினைகளால் செயல்படும் நம் ஒளி உடல், அடுத்தவர் சேர்த்து வைத்திருக்கின்ற கர்ம வினைகளுக்கேற்ப அவரது ஒளி உடலைக்காணும்போது விருப்பும், வெறுப்பும் கொள்கிறது.
நெருங்கி
செல்கிறேனா அல்லது விலகி செல்கிறேனா என்று தெரியாமல் பயணப்பட்டுக்
கொண்டிருக்கிறேன். மனையைத் துறந்து, மனைவி, மக்கள், சுற்றத்தார் அனைவரையும்
துறந்து பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். பொறுப்புகளைத் துறந்து, சும்மா
இருக்கும் சோம்பேரிக்கு, முகமூடி 'துறவு' என்கிறார்கள். ஆனால், நான் முழுமையாக நம்பி
செல்லும் இந்தப் பயணம் ஒரு நாள் என் இலக்கை காட்டிக் கொடுக்கும்.
கடலை
நான் நேரில் காண்பேன்.
ஒரு
பக்கம் கடல் என்று ஒன்று இல்லவே இல்லை என்னும் பகுத்தறிவுக்கூட்டம். கடல்தான்
நமக்கு எல்லாமே என்னும் ஆன்மீகக்கூட்டம். இரண்டு கூட்டமும் நாம் அனைவரும் கடலுக்குள்தான் வாழ்கிறோம் என்று அறியாத
கூட்டம்.
கல்வி
நிலையங்களில் யாருமே சொல்லித்தரவில்லை. பாடப் புத்தகமும் இல்லை; பரீட்சையும்
இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விட்டு சென்ற முன்னோர்களின் அறிவுரை மட்டும்
நூல்களில் இருக்கிறது. இன்றைய கல்வி எல்லாமே வேலை வாய்ப்பை நோக்கித்தான்
என்றாகிவிட்டது.
‘நான்
யார்?’ - என்று தெரிந்து கொள்ளும் உரிமை சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனுக்கும்
இருக்கிறது. பிறப்பிலிருந்து இறக்கும் வரை, மெய்யியல் கேள்வி மனதில் எழா வண்ணம் நம்
சமுதாயம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு கொடூரமான சமுதாய சீர்கேடு.
நான்
எப்படியாவது கடலைக் கண்டுபிடித்தாக வேண்டும். வேறு யாருக்காக இல்லாவிட்டாலும்,
எனக்காகநான் கண்டுபிடித்தே தீருவேன்.
யாரும் எனக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை. அடிக்கடி என்னை விழுங்க முயற்சிக்கும்
சுறாக்களின் பார்வையில் படாமல் மட்டும் இருந்தால் சரி. என்னுடைய லட்சியப் பயணம்,
என் இனத்து மீன்களுக்கே தெரியவில்லை, சுறாவை குறை சொல்லி என்ன பயன்.
நிலத்தைப்
போல நீரும் ஒரு பரிமாணம் என்கிறார்கள். கடல் முழுக்க நீரால் நிரம்பி இருக்கும்
என்று நம்புகிறோம். நீருக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நீர் நிறைந்து அலை
அடிக்கும் கடல் எப்படி இருக்கும் என்று தெரிய எத்தனை நாள்கள் ஆகுமோ தெரியவில்லை.
கடலைத்தேடும் என்
பயணம் தொடர்கிறது.
***
*** ***
குறிப்பு:
ஆறறிவு
பெற்று சிந்திக்க தெரிந்த மனிதர்களின் கடவுளைத் தேடும் நிலை, கடலுக்குள் வாழ்ந்து
கொண்டு கடலைத் தேடும் மீனைப் போன்றதுதான். ஆறறிவு கொண்டு ஆராய்வதில், இறை நிலை பரிமாணத்தை
அறிந்து கொள்ள முடியாது. ஒளியும், நாதமும் கொண்ட மின்னலிழைப் பரிமாணமே இறையாக இருக்கலாம்.
'நாத விந்து கலாதி நமோ நமோ'
நாதம் - ஒலி விந்து - ஒளி, ஆதியில் தோன்றியவை.
கண்ணை மூடிக்கொண்டு ஒலியும், ஒளியும் இல்லாத உலகை சிந்தித்துப் பாருங்கள் தெரியும்.
*** *** ***
கடவுள் இருப்பது இங்கே
மாடிக்கு வந்தது ஒரு நிலவு மனதுக்குள் மலர்ந்தது பல கனவு ஒலியாக நானும் ஒளியாக அவளும் ஒன்றி இருப்போம் உயிராக நாளும் பேச்சிலும் மூச்சிலும் புது வெள்ளம் சிவசக்தியை அறிந்தது என் உள்ளம்
*** *** ***
இறைவன்
இருக்கின்றானா? இறைவன் இருக்கின்றானா?
மனிதன்
கேட்கிறான்.. அவன் இருந்தால் உலகத்திலே எங்கே
வாழ்கிறான்?
- ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களில் வாழ்பவர் சகலர்
விளக்கம்:
மெய்யியல் பற்றிய உண்மை அறிய முற்படுவோர்க்கு சித்தர்கள் காட்டிய அருள்நெறி:
மனிதனின் சாத்வீக, சத்திரிய மற்றும் தாமச என்னும் முக்குணங்களை ஆள்வது முப்பத்தாறு பிரதம உண்மைகள். அவைகள், இருபத்தி நான்கு உண்மைகள் ஆன்ம உண்மைகள் என்றும், ஏழு உண்மைகள் வித்தியா உண்மைகள் என்றும், ஐந்து உண்மைகள் சிவ உண்மைகள் என்றும் பிரிவினைப்படும்.
இதில் வித்தியா உண்மைகள் என்பது,
1. காலம் 2. நியதி 3. கலை 4. வித்தை 5. அராகம் 6. புருடன் 7. மாயை
கலை என்பது ஆன்மா கொண்டுள்ள மூல மலமான அறியாமையை கலைக்கக்கூடியது. அறியாமை அகலும்போது, அது மாயையின் பண்பு என்றறியாமல் ஆன்மா தானே முன்னின்று செய்கிறேன் என்று, 'நான்' என்ற அறியாமையை மீண்டும் ஏற்றுக்கொள்கிறது. இதனால் தான் கலையின் மூலம் பெற்ற அறிவுக்கு புறம்பாக, சிற்றறிவின் எல்லைக்குள் நின்று செயல்படுகிறது. இந்த நிலையே, அவரவர் பிறப்பின் கன்மம் என்றறியப்படுகிறது. கலை கற்றுத்தந்த வித்தையின்மீது ஈர்ப்பு ஏற்பட்டு, விரும்பி வித்தைகளை அறிய முயற்சி செய்கின்றது. இந்த விருப்பமே அராகம் என்பது.
மேற்படி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஆன்மா புருடன் என்றறியப்பட்டு, பிறப்பிலிருந்து இறப்பு வரை, மாயையினால் சூழப்பட்டு, மாயா உலக நியதிகளிலிருந்து விடுபடாமல் வாழ்ந்து மறைகிறது.
பள்ளிகளும், கல்லூரிகளும் வித்யாலயா என்றோ கலைக்கல்லூரி என்றழைக்கப்படுவது இதனால்தானோ என்னவோ?
இப்பொழுதென்பது எப்பொழுதும் இல்லை; எப்பொழுதும் இருப்பதுவோ இப்பொழுதே!
பிறவிப்பயனால் காலப்பெருவெளிக்குள் நுழைகிறேன்.
அங்கே நிகழ் காலம் என்னும் மாயா உலகின் அமானுஷ்யப்பெருவெளிக்குள் நிற்கிறேன்.
ஒரு புறம், எக்காரணம் கொண்டும் திரும்பி செல்ல முடியாத, மாயமாக மறைந்துவிட்ட கடந்த காலம். எதிரிலோ, கண்களுக்கோ மற்ற புலன்களுக்கோ, எட்டாத எதிர் காலம்.
இதில் நான் உணரும் உண்மை என்னவென்றால், உடலுடனும், உடலற்றும் கடந்த காலங்களில் நாம் இருந்துகொண்டே இருந்திருக்கிறோம் அல்லதுஇருக்கிறோம்.
திருமந்திரம் - 80
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
திருமூலர் சூக்கும உடலுடன் பல கோடி வருடங்கள், காலப்பெருவெளிக்குள் இருந்ததை 'இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி' என்று குறிப்பிடுகிறார். பின்னர், இறை அருளால் மூலனின் உடலில் புகுந்து, மீண்டும் மனிதப்பிறவி பெறுகிறார்.
சித்தர்கள் முக்காலமும் அறிந்த ஞானிகள். அவர்களுக்கு காலப்பயணம் மிக எளிதாக கை வரப்பட்டிருக்கிறது. போகர் தனது போகர் 7000 என்ற நூலில் காலப்பயணம் செய்ததைப்பற்றிய பாடல்களை எழுதி இருக்கிறார். காலப்பயணத்தில் சந்தித்த முனிவர்களிடம் இருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மருந்து செய்யும் முறையை கற்று வந்திருக்கிறார். எதிர்காலப்பயணம் பற்றிய குறிப்பு எதையும் விட்டு சென்றதாக தெரியவில்லை.
எதிர்காலப்பயணம் பற்றிய குறையை, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில்கள் தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகில் புழக்கத்தில் உள்ள ஆகாய விமானம் முதல் கைப்பேசி வரை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே செதுக்கிய சிற்பங்களில் விட்டு சென்றிருக்கிறார்கள். அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிர்கால பயணம் மேற்கொண்டு, இன்றைய நாகரிகத்தை அன்றே தெரிந்து சிற்பமாக்கி இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய், புதிதாக கட்டிக்கொண்டிருந்த கோயிலின் நுழைவாயில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதை கோயிலின் உட்புற வளாகத்தில் சிற்பமாக செதுக்கி சென்றிருக்கிறார்கள். அந்த அதிசயத்தை பார்க்க விரும்பினால் நீங்கள் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும். அங்கே நீங்கள் காணும் வெளிப்புறம் சிதிலமடைந்த முன்புற வாசல், அச்சு அசலாக உட்பிரகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள சித்திரத்தில் காணலாம்.
காலப்பயணத்தில் கடந்த காலம், எதிர் காலம் சென்று வரும் சாத்தியம் நிகழ் காலத்தில் உண்டு என்னும் உண்மை நமக்கு தெளிவாகிறது.
[சமீபத்தில் OTT-ல் வெளிவந்த BLINK என்னும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட கன்னட திரைப்படம் காலப்பயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.]
இவை அனைத்திலிருந்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டென்றால் அது காலப்பிரயாணம் சாத்தியம் என்பதே.
இனி முக்கியமான ஆய்வுக்கு வருவோம்.
இன்றிலிருந்து முறையாக பயிற்சி செய்து ஒரு பத்து வருடங்களில் நாம் காலப்பயணம் செய்யும் திறனைப்பெறுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அன்றைய நாளில், சோதித்து பார்க்கும் ஆவலில் பத்து வருடம் பின்னோக்கி இன்றைய நாளுக்கு வந்தால், நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பதைப் பார்ப்பேன். பத்து வருடம் முன்னோக்கி இருந்த நான் அந்த உணர்வு நிலையில் இருப்பேன். அதே சமயம், நிகழ் கால வாழ்விலும் எழுதிக்கொண்டிருக்கும் நானும் இன்றைய உணர்வு நிலையில் இருப்பேன்.
இது எப்படி சாத்தியம்?
முறையாக யோகப்பயிற்சி செய்த சித்தர்களுக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.
காலப்பெருவெளியில் எங்கு வேண்டுமானாலும் என்னால் செல்ல முடியும்; உணர்வு நிலையில் இருக்க முடியும். அதாவது, கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று நிலையையும் ஒரே காலத்தில் அனுபவிக்க முடியும்.
முக்காலமும் ஒரு புள்ளியில் நிலை கொள்கிறது. பழைய கால இசைத்தட்டை எடுத்துக்கொள்வோம். அதில் எந்த புள்ளியில் முள்ளை வைக்கிறோமோ அங்கிருந்து இசை கேட்க ஆரம்பிக்கும். அப்படித்தான் மாயை நிலையில் உள்ள காலமும்.
நாம் உறக்கத்தில் இருந்து கண்விழிக்கும் வேளையில், காலப்பெருவெளியில் எந்தப்புள்ளியில் இருந்து வேண்டுமானாலும் விழித்தெழலாம். விழித்தெழுவது எந்த யுகமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
யோசிப்பதற்கே சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. யோசிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் என்னைப்போல் நீங்களும் காலப்பரிமாணத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.
மெய்யியல் பற்றிய உண்மை விளக்கம் தரும் சித்தர்கள், வித்யா தத்துவம் என்று மாயா தத்துவத்தை விளக்குகிறார்கள். மாயா தத்துவத்தின் ஏழு கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காலம்.
கீழ்மை குணம் கொண்ட கயவர்கள் தயங்காமல் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு குழப்பமான சந்தர்ப்ப சூழல் உருவானால், தன்னை விற்றாவது அதன் பலனை அடையத்துடிப்பார்கள்.
தி. மு. க.: பரம எதிரியுடன் கை கோர்த்து, 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்', என்று ஆட்சி அமைக்க துடித்தவர்கள்.
அ. தி. மு. க.: பரம எதிரியுடன் கை கோர்க்க துணிந்ததல்லாமல், 'அவளும் படிதாண்டா பத்தினியல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்று ஆட்சி தலைமை கேட்டு நாடகம் ஆடியவ ர்கள்.
காங்கிரஸ்: வெற்றிக்கு காரணமான கூட்டணிக்கட்சியாக, மாலையிட்ட மன்னனறை செல்லாமல், பாலொடு பழம் தந்து எதிரியுடன் முதலிரவை பகிர்ந்தவர்கள்.
இ.யூ.மு.லீ.: கண்ணில் நீர் பெருக, மாற்றுக்கட்சியில் மந்திரிப்பதவி பெற்று, சிறுபான்மை என்னும் புர்காவை கழற்றி எறிந்தவர்கள்.
வி.சி.க.: சாறுண்ணிகளுடன் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த வாழ்வை மறந்து, பதவிக்காக கூட்டணியில் இருந்து விலகி வக்கணை பேசி நடிப்பவர்கள்.
கம்யூனிஸ்ட்கள்: காசுக்காக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இரு பக்கமும் ஒட்டிக்கொண்டிருக்கும் வெட்டிப்பதர்கள்.
த.வெ.க.: கிடைத்த சந்தர்ப்பத்தை எப்படியாவது அனுபவிக்க, பிறவி குணம் மேலோங்க, எதிரிகளின் கோவணத்தை உருவியதோடல்லாமல், அவர்களின் வெற்றியையே கேள்விக்குறி ஆக்கியவர்கள்.
கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருகின்ற தியானிகளின் கனவு.
சரி, வாங்க நம்ம கனவுலகிற்கு போவோம்.
இன்றைய நாளின் கடமைகள் எல்லாம் முடிந்து விட்டது. இனி தூங்கி கனவு காணலாம்.
கண்ணை மூடினால், மனம் எதை எதையோ கொண்டுவந்து கொடுத்து, பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது.
தூக்கம் என்றால் என்ன? விழிப்பு நிலையில் இருந்து எப்படி உறக்க நிலைக்கு செல்கிறோம்?
விழிப்பும் உறக்கமும் சந்திக்கும் நேரத்தில் என்ன நடக்கிறது?
இமைகளில் அன்றைய நாளின் அனுபவத்தின் பாரம். மன வெளியிலோ வாழ்வில் கடந்து வந்த தூரம். உடலளவில் உலகின் ஆரவாரம் அடங்கிவிடும். ஐம்புலன்களும் இயல்பான குணத்தை இழந்து விடும். உள்ளம் எங்கே செல்கிறது என்று யாருக்கும் தெரியாது. பிறக்கும் முன்னர் உள்ளம் இல்லை. இறந்த பின்னர் உள்ளம் இருக்கப்போவது இல்லை. வாழும் நாட்களிலும் தூக்கத்தில் உள்ளம் இல்லை.
விழிப்பிலிருந்து உறக்கம், இது எப்படி நிகழ்கிறது? உறக்கத்திலிருந்து விழிப்பு எவ்வாறு நிகழ்கிறது?
சிந்தனை நீண்டு கொண்டே இருந்தது.
இன்றைக்கு எப்படியாவது விழிப்பிலிருந்து உறக்கத்திற்கு செல்லும் பாதையை அறிந்து கொள்ள வேண்டும். இந்த இறப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.
உறக்கத்திலிருந்து விழிப்பு நிலை என்பது புதுப்பிறப்பு எடுப்பது போன்றது. விழிப்பும், பிறப்பும் நம் கையில் இல்லை.
தூக்கத்தின் ஆரம்பத்தில் மூச்சுக்காற்று சீராக இயங்க ஆரம்பிக்கிறது. மூச்சு காற்றின் பாதையில் உள்ள தசை நார்கள் தளர்வு நிலைக்கு செல்கிறது. சீராக இயங்கும் காற்று தளர்வு நிலையில் உள்ள தசைநார்களை கடக்கும்போது மெல்லிய ஓசை. இந்த ஓசை காதுக்கு கேட்கிறது. இது நான்கைந்து சுவாசத்திற்கொருமுறை நிகழ ஆரம்பித்தது. விழிப்பு நிலையில் இருப்பதால் காதுக்கு கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சுவாச இடைவெளி குறைய குறைய தொடர் ஓசையாக மாறுகிறது. மனம் விழிப்பு நிலையிலிருந்து நழுவி வேறு ஒரு பரிமாணத்தில் இயங்க ஆரம்பிக்கிறது.
முழுவதும் தூக்கத்தில் ஆழ்வதற்குள், மனதில் தீர்மானித்தபடி, மீண்டும் விழிப்புணர்வு நிலைக்கு வருகிறேன்.
தூக்கமும் விழிப்புமான இந்த கண நேர கால இடைவெளியில் எனக்குள் என்ன நடந்தது?
எண்ணங்கள் திசை மாறாமல் இருக்க சுவாசத்தையே கவனித்துக்கொண்டிருந்தேன். சுவாசத்தை கவனித்துக்கொண்டிருந்த நான், சுவாச சத்தத்தின் ஊடே, இன்னொரு உலகிற்குள் நுழைகிறேன்.
அங்கே, 'நான் ஒரு பள்ளி மாணவன். நண்பனுடன் கோலி விளையாடிக்கொண்டிருக்கிறேன். பள்ளி மணி அடித்தாகி விட்டது. எல்லோரும் வகுப்பறைக்குள் சென்று விட்டார்கள். நானும் போக முயற்சிக்கிறேன். அப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. வீட்டுப்பாடம் செய்யவில்லை. கணக்கு வாத்தியார் ரொம்ப கண்டிப்பானவர். ஒரு கணம் அவரைப்பற்றிய பின்னூட்டம் முழுவதுமாக உணர்வுக்கு வருகிறது. [காலமான] அம்மா கூப்பிடுகிறார்கள். இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை. புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு ஓட வேண்டும். ஓடுகிறேன். மூச்சு வாங்குகிறது.'
மீண்டும் விழிப்புணர்வு நிலையில் படுக்கைக்கு திரும்புகிறேன். சுவாசத்தின் சப்தம் நின்று விட்டது. மூச்சு இன்னும் அடங்கவில்லை. உடலில், ஓடியதனால் உண்டான லேசான வியர்வை பூத்திருந்தது. படபடக்கும் இதயம் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.
நான் என்னும் இந்த உடல் ஓடவில்லை. மனம் ஓடி இருக்கிறது.
எனக்கு பதிலாக என்னுடைய சூக்கும உடல் ஓடி இருக்கிறது. கனவையே நனவாக உடல் அனுபவித்திருக்கிறது.
இங்கே, விழிப்பு நிலை பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
விழிப்பு நிலை என்பது இரண்டு வகையானது. புறவெளி மட்டுமே உணரும் விழிப்பு நிலை; மற்றொன்று அகவெளி மட்டுமே காணுகின்ற விழிப்பு நிலை. சாதாரண நேரங்களில் நாம் இருப்பது புறவெளி விழிப்பு. தியானத்தின் இடையில் நடப்பது அகவெளி விழிப்பு.
பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள் செயல் நிலையில் இருக்கிறது. இது புறவெளி விழிப்பு நிலை. உறங்கும் நேரத்தில் இங்கிருந்து கனவு நிலைக்கு செல்லும்பொழுது, சூக்கும உடலாக மாறி புது உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவோம்.
ஒருவர் தியானம் செய்யும்போது மனம் உள்நோக்கி திரும்புகிறது. அப்பொழுது, பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள், விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்கிறது.
தியான நிலையிலும், விழிப்பு நிலை பரு உடலில் இருந்து நுண்ணுடலுக்குள் செல்கிறது.
விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்ல மனம், புத்தி, அகங்காரம் வழிகாட்டியாக இருக்கிறது. மனமும் புத்தியும் மட்டும் செயல்படும் நிலையில் கனவு நிலை மாறி உறக்கம் உண்டாகிறது. மனமும் புத்தியும் மறைகின்ற பொழுதில் சித்தம் தலை தூக்கி துரியம் எனப்படும் பேருறக்க நிலைக்கு செல்கிறது.
தியானத்தில் வெறும் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. இதுவே சமாதி நிலை.
திருமந்திரம் - 2201
புரியட் டகமே பொருந்தல் கனவு புரியட் டகம் தன்னில் மூன்று கனவு புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி புரியட் டகத்து ஒன்று புக்கல் துரியமே.
புரியட்டகம் என்றால் சூக்கும உடல் அல்லது நுண்ணுடலில் வருவது கனவு. அதாவது பஞ்சபூதங்களின் தன்மைகள், ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின் தன்மைகள் அடங்கி, அந்தக்கரணங்களில் மனம், புத்தி மற்றும் அகங்காரத்தை ஆன்மா ஏற்கும் நிலை கனவு.
தியானத்திலும் இவ்வாறே விழிப்பு நிலையில் கனவு நிகழ்கிறது.
தியானத்தின் தொடர்ச்சியில் நுண்ணுடலில் மனம், புத்தி செயல்படும் நிலை உறக்க நிலையாகும். மனம் புத்தி செயலற்று நுண்ணுடலில் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. அதுவே சமாதி நிலை.
இன்றைக்கு படுக்கைக்கு சென்றதும் முயற்சி செய்து பாருங்களேன்!