வேகடை
மனசுக்குள்ளே ஒரே குடைச்சல்.
வேகடைன்னா என்ன?
சித்தர் பாடல்கள், இலக்கிய பாடல்கள், அகம், புறம்னு கெடச்சத படிச்சு புரிஞ்சிக்க முயற்சி செய்றேன். அப்பப்ப, எழுதவும் செய்றேன்.
வேகடைங்கிற வார்த்தை எனக்கு எப்படி சிக்காம போச்சு?
ஒரு பொண்டாட்டி புருஷன வேகடைன்னு சொன்னா, அது கண்டிப்பா திட்டுற வார்த்தையாத் தானே இருக்கணும்.
பாசிப்பயறு சுண்டல் சாப்பிடும்போது, ஒண்ணு ரெண்டு பயறு வேகாம இருக்கும், கவனிச்சிருப்பீங்க. இந்த வேகாத பயறு மாதிரி இருக்கிறததான் வேகடைன்னு சொல்லி இருப்பாளோ?
இதுக்குமேல நான் எங்கே வேகப்போகிறேன். வேகடையாவே இருந்துட்டு போறேன்.
இல்ல, வேற ஏதாவது அர்த்தம் இருக்குமோன்னு தெரிஞ்சிக்க ஆர்வம்.
சரி, நம்ம குலதெய்வத்தை கேட்டுப்பார்ப்போம்னு, கேட்டா கூகுள் சாமி மொதல்ல வேகாலம்ங்கிற வார்த்தைக்கு கூட்டிட்டு போகுது.
இதென்னடா வம்பாப்போச்சு, இப்படி ஒரு வார்த்த தமிழில் இருக்கான்னு பார்த்தா, ஒரு சிறுகதைல, 'எனக்கு வேகாலம் வந்திடும் பாத்துக்கோ..'-ன்னு ஒரு பொண்ணு இன்னொரு பெண்ணிடம் கோபமா சொல்லுது.
வேகாலம்னா கோபமா, எரிச்சலா?
அது கிடக்கட்டும், நம்ம கதைக்கு வருவோம்.
மறுபடியும் முயற்சித்ததில், வேகடைன்னா 'polishing gems' - மணியின் மாசு நீக்குதல். கம்பராமாயணத்தில் கம்பர் உபயோகித்த வார்த்தை.
இவ்வளவு உயர்வா சொல்லியிருக்க வாய்ப்பே இல்ல ராஜான்னு மனசு சொல்லுது. ஏன்னா, நான் செஞ்ச காரியம் அப்படி.
'கடைக்காரன் கிட்ட லிஸ்ட குடுத்துட்டு, லார்ட் லபக்குதாசு மாதிரி நின்னுருப்பே. அவனும், இது ஒரு வேகடைன்னு தெரிஞ்சிகிட்டு வேணும், வேண்டாங்கிறத எல்லாம் போட்டு அனுப்பிட்டான்.'
'லிஸ்ட்ல இருக்கிறத போட்டானான்னு கூட பாக்க வக்கில்ல. வாங்கிட்டு ஆட்டிட்டு வந்துட்டே.'
சார், நாட்டு தக்காளி ஒரு கிலோ வாங்கினதை கடைக்காரன் என்னுடைய பையில் போடாமல் விட்டுவிட்டான். பில் போடும்போது அதுக்கும் சேத்து பில் போட்டுட்டான்.
வீட்டுக்கு வந்ததும் அடுத்த அஞ்சு நிமிஷத்துல, நான் தூண்டில்ல சிக்குன மீன் மாதிரி மாட்டிகிட்டேன்.
மறுபடியும் போய் வாங்கிட்டு வந்திட்டேன். லிஸ்ட்ல இருந்த ரெண்டு எலுமிச்சை மிஸ் ஆனது ரெண்டு நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது. என்ன மூடோ தெரியல, ஃபயரிங் ஒண்ணும் நடக்கல.
நாற்றம் என்ற சொல் நறுமணத்தை குறித்ததோர் காலம். இன்றைக்கு அதே வார்த்தை பேச்சு வழக்கில் தரும் அர்த்தமே வேறு. அப்படித்தான் வேகடையும் மாறியிருக்கும்.
நமக்கென்ன, காசா பணமா, நல்லதையே எடுத்துக்குவோம்.
சரி, இனி மெயின் பிக்சருக்கு வருவோம்.
அறிவு நிலை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் என்றாலும், குடும்பம் என்று வரும்போது பொண்டாட்டிகள் அறிவு நிலையும் கணவன்கள் அறிவு நிலையும் சுத்தமாக மாறுபட்டுதான் இருக்கிறது. அது படைப்பின் ரகசியம். எனவே, அதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம்.
இங்கே மறுபடியும் மும்மலங்களைப்பற்றி பேசியாக வேண்டும்.
மூல மலம் ஆணவம். ஆணவம் என்றால் இருள் சார்ந்த நிலை அல்லது அறியாமை. இரண்டாவது மாயை. மாயையே அறியாமையை சற்று விலக்கும் கருவி. கருவிக்கு துணையாக இருப்பது கலை. கலையின் மூலம் அறிந்துகொள்வது வித்தை.
இப்படியாக அறியாமை இருள் விலக விலக அறிவு நிலை மேம்பட்டு வாழ்க்கைக்கு வழிகாட்டியாகிறது.
'கலைக்கல்லூரி' அல்லது 'இளங்கலை' என்று நிறைய முறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருமுறையாவது கலை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள முயன்றிருக்கிறோமா? கலை என்றால் அறியாமையை விலக்கும், வித்தையை கற்றுக்கொள்வது.
நான் சொல்ல வந்ததெல்லாம் வித்தியா தத்துவங்களில் சொல்லப்படும் வார்த்தைகள்தான், கலை, வித்தை மற்றும் மாயை என்பவை.
அறியாமையை அகற்றும் அறிவு நிலை ஒவ்வொரு மனிதருக்கும் வேறு வேறு நிலையில் இருக்கும்.
ஐம்புலன்களால் அனுபவிக்கும் அறிவுநிலை ஐந்து. அனுபவ அறிவின் மூலம் உணரப்படும் ஆறாம் அறிவு. முன்னோர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மூலம் பெரும் ஏழாம் அறிவு. படிப்பினால் கிட்டும் எட்டாம் அறிவு. மற்றவர்களிடம் கலந்து கருத்துகளை பரிமாறி பெரும் ஒன்பதாம் அறிவு. இவை அனைத்துக்கும் பற்று கோடாக இருப்பது இறை என்னும் பத்தாம் அறிவு. இவ்வாறாக அறிவு நிலையை சிந்தித்து, அறிவினை பெரும் வழி வகை தெரியாமல் உயிர்கள் அழிந்து போகின்றன.
திருமந்திரம்-741
உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறேழும்
கற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்று அறியாது அழிகின்ற வாறே.
இனிமேல்தான் உச்ச கட்டமே!
நான் சொல்லப்போவது விபரீத அறிவு. மனித குலமே சிக்கி இருக்கும் மாய வலைப்பின்னல் இது.
ஒருவர் அறிவு நிலையில் எந்த கட்டத்தில் இருந்தாலும், விபரீத அறிவால் தாக்கம் பெறாதவர்கள் என்று யாரும் இல்லை.
1. ஒரு செயலைப்பற்றிய அறிவு நிலையில், முழுமை பெறாமல் இருக்கும் அறியாமை.
2. 'என்னுடையது' என்ற எண்ணத்தில் அறிவு நிலையில் பிறழ்வது.
3. 'எனக்கு ரொம்பவும் பிடிக்கும்' என்னும் காரணத்தினால் அறிவை ஒத்தி வைப்பது.
4. 'எனக்கு பிடிக்கவே பிடிக்காது' என்று ஒதுக்கும் பொது உண்மை அறிவையும் ஒதுக்குவது.
5. மரண பயம் கூடவே இருந்து அறிவுக்கு ஒவ்வாத செயல்களை செய்வது.
இந்த விபரீத அறிவுதான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கிறது.
நிறைய நூல்களை கற்று, அவற்றில் உண்மை பொய்களை ஆராய்ந்து, அறிவு நிலை முழுமை பெறாமல் 'இறை என்று ஒன்று இல்லை' என்று அறுதியிட்டு கூறும் அதே விபரீத அறிவுதான், ஏதும் தெரிந்து கொள்ள முயலாமல் 'எல்லாம் அவன் செயல்' என்று சரணாகதி அடைபவர்க்கும்.
*** *** *** *** ***
பின் குறிப்பு:
பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில் ஐந்து வகையான மனக்கிலேசங்கள் உண்மை அறிவு நிலைக்கு எதிரானவை என்று வகைப்படுத்தி இருக்கிறார். அதாவது விபரீத அறிவின் அம்சங்கள்.
1. அவித்யா - அறியாமை
2. அஷ்மிதா - தனது
3. ராகம் - விருப்பம்
4. துவேஷம் - வெறுப்பு
5. அபிநிவேஷம் - மரண பயம்