கைக்குட்டை சித்தர்
'சாமீ.. ஒரு சந்தேகம். தீர்த்து வைங்க சாமி'
'சொல் மகனே' - என்னுடைய பிரச்னையே என்னன்னு, எனக்கே தெரியாது.. வந்துட்டானுங்க சந்தேகத்தை தூக்கிகிட்டு, மனதில் நினைத்த படியே கேட்டார் சித்தர்.
' சாமீ, உங்களை பார்த்தா நல்லா படிச்சு, நல்ல குடும்ப அநுபவஸ்தரா தெரியுது. எப்படி சித்தர் ஆனீங்க'
'வாழ்க்கைய அனுபவித்து முடிக்கிற ஒவ்வொரு மனிதனும் இறுதியில் அடைய வேண்டிய இடம் இதுதான் என்பதற்கு நான் ஒரு அடையாளம்' - ம்ம்.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன், பெருமூச்சுடன் பதில் வந்தது சித்தரிடமிருந்து.
'அது சரி சாமி.. அதென்ன கைக்குட்டை அடைமொழி, ஏதாவது அர்த்தம் இருக்கா சாமீ?'
'பாத்தா தெரியலையா.. என்னுடைய முழு ஆடையே கைக்குட்டைதான்' - முதலில் நான்கு மொழ வேட்டி போதும்னு இருந்தேன்.. ஈரிழை துண்டு கூட வேண்டாம்.. ஒரு கைக்குட்டை போதும்னு சொல்லிட்டா என் தர்ம பத்தினி.
'ஆண்டவரே..இவ்வளவு எளிமையா இருக்கீங்களே, எனக்கு இன்னொரு சந்தேகம்'
'சொல்லப்பா' - எப்படியோ இன்றைக்கு பொழுது போக ஒரு வழி காட்டிவிட்டான் அந்த உண்மையான ஆண்டவன்.
'உலகம் உருண்டை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எப்படியாவது என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தெய்வமே'
'சரி.. காலங்கார்த்தால உன் சந்தேகத்தை தெரிவித்ததால், உனக்கு நல்ல பதிலை தருகிறேன்.. கை பேசி வைத்திருக்கிறாயா?'
'அதில்லாமலா? அதில்லாமல் யாரும் கழிப்பறை கூட செல்வதில்லையே சாமி!'
'கிடக்கட்டும் சனியன். அதை எடுத்து நான் சொல்லும் மந்திரத்தை பதிவு செய்'
'ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..ஓம்.. ஹரி ஓம்..'
'இதை உன் அழைப்போசையாக சேமித்து வைத்துக்கொள். இதில் என் தவத்தின் வலிமையை உட்செலுத்தி இருக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்தது'
'போய் வா! இன்று மாலை வேளை பூஜைக்கு வந்து சேர்.. உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்'
***
'கும்பிடறேன் சாமி'
'வந்தாச்சா மகனே?'
'சாமி.. நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரலையே சாமி'
'நம்ம பக்த கோடிகள் மாலை வேளை பூஜைக்கு வந்தாச்சா பார்'
'எல்லாம் உங்க தரிசனத்துக்காக காத்திருக்காங்க சாமி'
***
'பெண்ணே உன் எண் என்ன?'
'36-26-.....'
'நிறுத்து.. நிறுத்து.. உன் கைபேசி எண்ணை சொல்'
'98444 44489'
'பக்தா.. அந்த எண்ணை அழை'
'சரிங்க சாமி'
'ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..ஓம்.. ஹரி ஓம்..' - அழைப்பு மணி ரீங்கரித்தது. காலையில் சித்தர் கொடுத்த அதே அழைப்போசை.
'பெண்ணே அந்த அழைப்பு மணி எங்கிருந்து கிடைத்தது?'
'என்னுடைய நண்பன் எனக்கு மிகவும் பிரத்தியேகமாக கொடுத்த பரிசு இது. இமய மலையில் சித்தர்கள், அகோரிகள், பிரபஞ்சவாசிகள் ஒன்று கூடி அற்புதமான நேரத்தில், நடத்திய பூஜையில் கிடைத்த நாதம் இது.'
'இதன் பலன் என்னவென்று சொல்ல முடியுமா?'
'இன்று காலையில்தான் என் நண்பன் ஆஸ்திரேலியாவில் இருந்து எனக்கு அனுப்பி வைத்தான். அதுதான் உங்கள் தரிசனம் கிடைக்க உதவி இருக்கிறது'
'பக்தா.. உனக்கு இன்னும் ப்ளாக் போடும் பழக்கம் போகவில்லையா? பரவாயில்லை. உன் உலக உருண்டை சந்தேகம் தீர்ந்ததா?' - சித்தர் பக்தன் ப்ளாக்கில் அழைப்பு மணி லிங்க் கொடுத்திருப்பான் என்றெண்ணி கேட்டார்.
'என் எண் சாண் உடம்பையும் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் சாமி. என் சந்தேகம் மட்டுமல்ல.. இனி எல்லாமே நீங்கள்தான். எனக்கும் ஒரு கைக்குட்டை கொடுத்து உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் சாமி'
'பக்தா.. என்ன வார்த்தை சொல்லி விட்டாய். எதற்காக இந்த திடீர் முடிவு?'
'குருவே, இன்று உங்கள் தெய்வீக வாக்கை என் வருங்கால மனைவி என்றெண்ணியிருந்த காதலியிடம் கொடுத்தேன். யாரிடமும் கொடுக்க வேண்டாம். ரொம்ப புனிதமானது என்று சொல்லி இருந்தேன். சே.. வாழ்க்கையில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை' - அருகிலிருந்த காதலியை முறைத்துக்கொண்டு சொன்னான்.
'பதற வேண்டாம்.. கொஞ்சம் பொறு.. என் ஞான திருஷ்டியில் பார்த்து சொல்கிறேன்'
'உன் காதலி அமெரிக்காவில் உள்ள தன் தங்கைக்கு கொடுத்த அழைப்போசை அவளது தோழிக்கு கை மாறி..தோழி ஆஸ்திரேலியாவில் உள்ள அவள் அண்ணனுக்கு அதை கொடுக்க, இந்தியாவில் உள்ள தன் காதலிக்கு அவன் அனுப்பி இருக்கிறான்' - சீடனாம் சீடன். இருக்கிறதே சின்ன மடம். அதையும் பங்கு போட வந்துட்டான்.
'என்னை மன்னிச்சிரும்மா, இதுக்கெல்லாமா கோவிச்சுக்குவே?' - கூட வந்திருந்த காதலியை கெஞ்சினான்.
'போ.. போ.. அந்த சாமியார் கிட்டவே போ.. ஒரு கைக்குட்டை கட்டிக்கிட்டு. பக்கம் வந்தியா.. பிஞ்சிரும்'.
'சே.. சே.. எதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். இந்த ரிங் டோனை இப்பவே டெலீட் பண்ணிர்ரேன்'.
'மகனே.. அது டெலீட் பண்ணக்கூடிய ஓசையல்ல..இறை ஓசை. அண்ட சராசரங்களிலும் உன் உடலின் ஒவ்வொரு செல்லிலும் தன்னிச்சையாய் பிறந்து வளரும் ஓசை' - அசரீரி கேட்டது.