Thursday, August 31, 2023

கிரியாவூக்கி - சிவசக்தி

கிரியாவூக்கி - சிவசக்தி 


[சொன்னது: நிலவில் வெப்பம் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ்.  இருந்தது: +50 டிகிரி செல்சியஸ். சொன்னது: தண்ணீர் உறைந்து இருக்கிறது. இல்லாதது: மேகங்கள்]

இந்திய நேரம் மாலை 6 மணி. 23 ஆகஸ்ட் 2023.

உலகமே வியந்து வானத்தை பார்த்துக்கொண்டிருந்தது தொலைக்காட்சியில்.

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

வாழ்த்துகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்ந்த அனைத்து சக தோழர்களுக்கும். நீங்கள் கொடுத்த பரிசு அளப்பரியது.  தொடரும் உங்கள்  முயற்சிகள் வெற்றி பெறட்டும்.  

சந்திரயான் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது.

தரை இறங்கிய  இடம், சிவசக்தி.

இனி சிவசக்தி பற்றி கொஞ்சம்  ஆய்வு செய்து பார்ப்போம்.

முதலில் கிரியாவூக்கி என்றால் என்னவென்று சொல்லி விடலாம்.

தானெந்த மாற்றமும் அடையாமல், தன்னை சார்ந்தவர்களின் செயலாற்றலை ஊக்கப்படுத்துவதே கிரியாவூக்கி. இதை ஆங்கிலத்தில் CATALYST என்று சொல்வார்கள்.

சிவன் ஒரு கிரியாவூக்கி. 

சிவம் என்பது ஞானம் மற்றும் நாதம். தனித்து இயங்காது.

சக்தி என்பது கிரியா சக்தி. விந்து எனப்படும் ஒளி வடிவானவள். சிவத்துடன் சேர்ந்து இயங்குபவள். இவளுடன் இணைந்திருப்பது இச்சா சக்தி என்னும் ஆசை.

சிவமும் சக்தியும் சேர்ந்து இயங்குவதே சிவசக்தி.

நாதத்தில் விந்துவும் அதாவது ஒலியில், ஒளி இயல்பாகவே கலந்தியங்கும் தன்மை உள்ளது. இடி, மின்னலை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இவ்வாறான ஒலியும், ஒளியுமாக கலந்து, நாதவிந்துக்களில் தீதற்று அகம்வந்த  சிவசத்தியாக நம் உடலில் கலந்திருக்கிறது. இந்த சிவசக்தியே, பேதித்து  ஞானங்கிரியை பிறத்தலால், உடல் இன்பத்தை தூண்டி ஆசையை தோற்றுவிக்கிறது. அந்த இச்சையின் தோற்றமே உடலில் விந்தாக, வித்தாக மலர்கிறது.

திருமந்திரம் - 382

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற்று அகம்வந்த  சிவசத்தி என்னவே 
பேதித்து  ஞானங்கிரியை பிறத்தலால் 
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.

இங்கே நாம் முப்பத்தாறு தத்துவங்களின் அங்கமான சிவ தத்துவங்களைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 

சிவ தத்துவங்கள் ஐந்து. 

அவை முறையே, 1. ஞானம் 2. கிரியா சக்தி 3. சுத்த வித்தை 4. ஈஸ்வரம் 5. சதாசிவம் எனப்படும். 

ஞானத்துடன் சேர்ந்த கிரியாசக்தி சிவசக்தி. இந்த சிவசக்தியில் ஞானம் மிக்கு இச்சை குறைவாக இருப்பின் அது சுத்த வித்தை, ஞானிகளை சாரும். இச்சை அதிகமாக  இருந்தால் ஈஸ்வரம், நம்மைப்போன்றோரை சாரும். ஞானமும் இச்சையும் சமமாக  இருந்தால் அது சதாசிவம், யோகிகளை சாரும்.

இந்த சிவசக்தி உடலில் நின்று இயங்கும் இடம் சுழி முனை எனப்படும் நெற்றி ஆகும். இதனையே சந்திர மண்டலம் என்று அனைத்து சித்தர்களும் எடுத்து சொல்லி இருக்கிறார்கள். இங்கே உற்பத்தி ஆவது அமிர்தம் அல்லது சோமப்பால். இதனையே சிவயோகிகள் உண்டு சமாதியில்  லயித்திருப்பார்கள்.

இச்சா சக்தியின் மிகுதியால் உண்டாகும் விந்து, வாதித்த இச்சையில் வந்தெழும் விந்து, புதிய உயிர்களை உருவாக்கும் திறன் கொண்டது.

கீழ் நோக்கி பாயும் தன்மை கொண்ட விந்துவை, கீழே சென்று வீணாகாமல் மறித்து மேலே ஏற்ற வேண்டும். அதற்கு, வற்ற அனலைக் கொழுவி, மூச்சுக்காற்றைக் கொண்டு மூலாதார நெருப்பில் விந்துவை மேலே சுழுமுனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.  பின்னர் தியானத்தில், துற்ற சுழிஅனல் சொருகிச் சுடர்உற்று,  சுழுமுனையில் நிலைத்திருக்க, முழு நிலவின் அமுதை,  முற்ற மதியத்து அமுதை, சிவயோகியர் உண்டு தியானத்தில் களித்திருப்பார்கள்.

திருமந்திரம் - 1949

வற்ற அனலைக் கொழுவி மறித்தேற்றி 
துற்ற சுழிஅனல் சொருகிச் சுடர்உற்று 
முற்ற மதியத்து அமுதை முறை முறை 
செற்று உண்பவரே  சிவயோகி யாரே.

சிவசக்தியில் அமிர்தம் உருவாகட்டும். உலகம் முழுவதும் அதன் பலனை அனுபவிக்கட்டும்.

வாழ்க இஸ்ரோ! வளர்க அதன் பணி!!

*** ***




Tuesday, August 15, 2023

ஆதித்யா - சூரிய வெப்பமானி


ஆதித்யா - சூரிய வெப்பமானி  



ஆதித்யா - சூரிய வெப்பமானி

மட்டிட்டது அறிவியல். மட்டற்றது ஆன்மிகம்.

அறிவியலின் எல்லை ஆறறிவுக்கு உட்பட்டது. ஆன்மீகத்தின் எல்லை மனித அறிவுக்கு அப்பாற்பட்டது.

சூரியனின் எரிபொருள், ஹைட்ரஜன்  என்று  சொல்லும் அறிவியல், உயிரின் எரிபொருள் என்னவென்று சொல்ல முடியவில்லை.

ஒரு நாள் வரலாம்.. அது பிரளய காலமாக இருக்கலாம். சூரியனின் எரிபொருள் தீர்ந்து போகலாம், அறிவியல் அனுமானப்படி. சூரியகாந்தப்புயல் கோள்கள் தோறும் வீசலாம். உயிரினமே அற்ற மயான கிரகமாகக்கூட பூமி மாறலாம். 

ஆனால், மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் உயிரினத்தின், உயிர்காந்தப்பற்று மாறவே மாறாது. உயிரின் உள்ளே கனன்றுகொண்டிருக்கும்  இறைக்கனல்  தீரவே தீராது. 

ஆதித்யா L1: சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக செல்லும் விண்கலம். பூமிக்கு வாசற்படியில் இருக்கும் நிலவில், என்ன இருக்கிறதென்று சொல்ல  முடியாத அறிவியல், இங்கிருந்து வெறும் பதினைந்து  லட்சம் கிலோமீட்டரில் நிலை நிறுத்தப்படும் ஆதித்யா  L1, அதைவிட தொண்ணூற்றொன்பது மடங்கு தள்ளி,  பூமியிலிருந்து பதினைந்து கோடி கிலோமீட்டர்  தள்ளி இருக்கும் சூரியனை ஆய்வு செய்யப்போகிறது. சூரியனின் உள்வெப்பநிலையும், ரொம்ப அதிகமில்லை.. ச்சும்மா..  ஒன்றரை கோடி டிகிரி செல்சியஸ்தான். இதுவும்  அறிவியல் ஆய்வில் அறிவித்த  செய்திகளே!

படிப்பதற்கே நகைச்சுவையாக தோன்றும் இந்த செய்தி, சூரியனின் எரிபொருள் உண்மையை உலகுக்கு உரைக்குமானால், இஸ்ரோவின் முயற்சி  வெற்றிபெற மனித குலம் வாழ்த்த வேண்டும்.

ஆன்மிகம் காட்டும் வழியை பாருங்கள்.

ரொம்ப அதிகமில்லை ஜென்டில்மேன். ஜஸ்ட், ஒரு பன்னிரண்டு அங்குலம். ஆய்வு செய்தாலே போதும். உயிரின் எரிபொருளை, ஆய்வு செய்து  அறிந்து கொள்ளலாம்.

வாருங்கள், அது  எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.

நாம் சுவாசிக்கும் காற்று எட்டு விரற்கடை தூரம் உள் சென்று,  பின்னர்  திரும்புகிறது. இடது நாசி வழியாக செல்லும் காற்று  சந்திர கலை. இரவைக்குறிக்கிறது. வலது நாசி வழியாக செல்லும் காற்று சூரிய கலை. இது பகலைக்குறிக்கிறது.

பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவுள்ளது. இங்கே பன்னிரண்டு என்பது தூரத்தையும், ஆனை என்பது சுவாசிக்கும் காற்றையும் குறிப்பிடுகிறது. பகல் இரவு என்பது இரு நாசிகள் வழியாக சென்றுவரும் காற்று. 

எட்டு விரற்கடை எப்படி பன்னிரண்டாகலாம்? இந்த கேள்வி நமக்குள் எழுவது நியாயமானதே. அதனால்தான் பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன் என்கிறார் திருமூலர்.

எட்டு விரற்கடை அளவே உள்ளே சென்று திரும்பும் மூச்சுக்காற்று. வெளியேறும் வாயுவை உள்முகமாகவே  மேலும் நான்கு விரற்கடை மேலேற்றி கொண்டு செல்ல வேண்டும். 

முதலில் நாம் சுவாசிக்கும் காற்றில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

மூச்சுக்காற்றில் உள்ளது பத்து வகையான வாயுக்கள். குறிப்பாக இரண்டு வாயுக்களைப்பற்றி தெரிந்துகொள்வோம். ஒன்று பிராணன் மற்றொன்று  அபானன். பிராண வாயு உயிருடன் இணைந்து மேல்நோக்கி செல்லும் தன்மை உடையது. அபான வாயு கீழ் நோக்கி செல்லும் தன்மை உடையது, உயிர் வித்துக்களை வெளிசெலுத்த உந்து சக்தி தந்து  புதிய  உயிரை உருவாக்குவதுதான்  இதன் வேலை. இவ்வாயுவை மேல்நோக்கி எழுப்பும்போது, கூடவே, உயிர் சக்தியான விந்து சக்தியும் மேலே செல்ல ஆரம்பிக்கும்.

இரு வாயுக்களும் மூலாதாரத்தில் சந்திக்கின்றன. இவ்வாறு சந்திக்கும் வாயுக்கள் தங்கள் வேலை முடிந்ததும் மூக்கு வழியாக வெளியேறி விடுகிறது.

இவ்வாறு வெளியேறும் வாயுவை மூச்சுப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சியின் மூலம் உள்முகமாக திருப்பி மேலும் நான்கு விரற்கடை சுழுமுனைக்கு மேலேற்ற வேண்டும். ஆக, எட்டு விரற்கடை சென்று திரும்பும் மூச்சுக்காற்று இப்போது பன்னிரண்டு விரற்கடை.

இவ்வாறாக  பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்,  பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே.  தியானத்தின் மூலம் இரு வாயுக்களையும் சுழுமுனை நாடி வழியாக சுழு முனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு, மூன்று நாடிகளும் ஒன்றாய் இணைந்து செயல்படும்.

திருமந்திரம் 577

பன்னிரண்டு ஆனைக்குப் பகல்இர வுள்ளது
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன் 
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின் 
பன்னிரண்டு ஆனைக்குப் பகல்இரவு இல்லையே. 

நாம் சுவாசிக்குக் காற்று,  கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்  ஓடுவர் மீளுவர், உள்ளும் வெளியும் போய்  வந்து கொண்டிருக்கும். இது பன்னிரண்டு அங்குலமும் செல்லும், பன்னிரண்(டு) அங்குலம் நீடுவர். எட்டு அங்குலத்தில் திரும்பும் இக்காற்று, எண்விரல் கண்டிப்பர், நான்கு விரற்கடை சேர்ந்து பன்னிரண்டு விரற்கடை ஆனால்,  நால்விரல் கூடிக்கொளின் கோல அஞ்செழுத்து ஆமே, அதுவே நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் பலனாகும்.

திருமந்திரம் 576

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் 
ஓடுவர் மீளுவர் பன்னிரண்(டு) அங்குலம் 
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் 
கூடிக் கொளின்கோல அஞ்செழுத்து ஆமே.

மூலாதாரத்தில் இருந்து எழும் இறைக்கனலுக்கு எரிபொருள் நாம்  சுவாசிக்கும் காற்று. சுவாசிப்பது நின்று விட்டால், உயிர் உடலை விட்டு நீங்கி விடுகிறது.

சூரியனுக்கு எரிபொருள் ஹைட்ரஜன், அது சரி. சூரியனை முதலில் பற்ற வைத்தது யார்? உயிருக்கு எரிபொருள் பிராண வாயு. பிராண வாயுவை எரிக்கும் அல்லது தூண்டும் கனல் எது?

அதுவே உயிருக்குள் கரைந்திருக்கும் இறைக்கனல். உடலெங்கும் பரவி இருக்கும் இறைக்கனல், பிராணவாயுவுடன் சேர்ந்து சிற்றறைகளில் உள்ள சத்தினை எரிக்கிறது. இதுவே உடலின் ஆற்றலாகவும், வெப்பமாகவும் இருக்கிறது.

 ஆனால் இறைக்கனலின் மூலம் யாருக்குத்தெரியும்?

*** *** ***




Saturday, August 12, 2023

வாழ்ந்தாக வேண்டும்

வாழ்ந்தாக வேண்டும்  


வாழ்ந்தாக வேண்டும்.

தன்னை விரும்பிய பெண்ணின் காதலை நேரடியாக ஏற்காமல்,  விளையாட்டாக மறுத்ததன்  விளைவு அவளின் மரணம். அவளில்லாத வாழ்வு மரண வேதனையை  தந்தாலும், உயிருடன் வாழ்ந்து இப்பிறவிக்கடன் தீர்க்க வேண்டிய கட்டாயம், கதாநாயகனுக்கு.

வாழ்ந்தாக வேண்டும்.  வா.. வா.. கண்ணே!

காதல் கைகூடியவன்  கூட இந்தப்  பாடலை கேட்டால் ஒரு நிமிடம் கரைந்து போவான்.

ராசாத்தி.. ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது.  

இனி அவனது வாழ்க்கையில் எந்த பற்றும் இல்லை. பற்றற்ற வாழ்வில் உடலில் உயிர் உள்ளவரை வாழ்ந்தாக வேண்டும். உயிருக்கும் உடலுக்கும் உள்ள பந்தத்தை வாழ்ந்துதான் தீர்த்தாக வேண்டும்.

வெந்ததை தின்று வேளை வரும்போது போய் சேரலாம்  என்றிருப்பவர்களுக்கு எதுவும் தேவை இல்லை.

இந்த பிறவி கிடைத்ததற்கு, வாழும் நாட்களில் உயிரை இறை நிலைக்கு கொண்டு செல்ல எண்ணுபவர்கள் அதற்கான முயற்சியை செய்துதான் ஆக வேண்டும் 

வாழ்வது என்று முடிவாகிவிட்டால், ஆரோக்கியமாக உடலையும், மனதையும் வைத்து வாழ வேண்டும். இறைவன் இணையடி  சேரும் வண்ணம் இறையருள் பெரும் வழியில் வாழ வேண்டும்.

அது அவ்வளவு எளிதல்ல.

இங்கேதான், பல பிறவிகளில் உயிர் பெற்று வந்த கர்ம வினைகள் செயலுக்கு வருகின்றது. மும்மலமான  ஆணவம், கன்மம், மாயை என்ற மாய  வலைப் பின்னலை  மனிதன் அறிய முற்படுகிறான். ஒவ்வொரு படி முன்னேற்றமும் பல படிகள் பின்னோக்கி தள்ளும்.

காமம் எப்படி மண்ணில் பிறப்பெடுத்த அனைவருக்கும், அது தேவர்களானாலும் சரி, பொதுவாக உள்ளதோ அதேமாதிரி மும்மலமும் அனைவருக்கும் பொதுவானதே. மும்மலங்களால் உயிர்வர்கம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. தன்னை உணர்ந்து இறை நிலைக்கு செல்ல  மனிதர்களுக்கு இது மூன்று படிக்கற்களாக இருக்கிறது.   

அவர்களை,

1.விஞ்ஞானாகலர்
2. பிரளயாகலர்
3. சகலர்

என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

மூன்றாவது அல்லது  இறையை அணுகி இறுதி நிலையில் இருப்பவர்களுக்கு அடுத்த பிறவி கிடையாது. இவர்கள் பிறவிப்பெருங்கடல் நீந்தியவர்கள். மும்மலங்களில் ஆணவ மலம் மட்டும் கொண்டவர்கள். இம்மாதிரியான மூன்றாம் படிநிலை  அடைந்தவர்கள்  விஞ்ஞானாகலர்.

இரண்டாம் படியில் ஆணவம், கன்மம் என்னும் இரு மலங்களைக்கொண்டவர்கள் பிரளயாகலர் ஆவார்கள். இவர்களின் பிறவிகள், அடுத்த பிரளய காலம்  வரை தொடர்ந்திருக்கும்.

முதல் படியில் உள்ள நாமெல்லாம் மும்மலங்களில் சிக்கியவர்கள். தொடர்ந்து பிறவிச்சுழலில் சிக்கி சீக்கி அடிப்பவர்கள். அதனால்தான் நம்மை சகலர் என்றழைக்கிறார்கள்.

இம்மூன்று உயிர்வர்கத்தின் வேற்றுமைகளை திருமூலர் தெளிவாக விளக்குகிறார்.

விஞ்ஞானர் நால்வரும்  என்னும் நான்கு வகை குணங்கள் இவை:

1. ஆணவ மலம் மட்டும் கொண்டவர்கள் 

2. மறுபிறப்பற்றவர்கள்

3. சுத்த மாயையில் செயல்படுபவர்கள் 

4. பிறவியிலே ஆணவ மலம் கொண்டவர்கள் என ஒரு வகையும், சகலராக மும்மலம் கொண்டவர்களாக  பிறந்து, ஆணவ மலம் மட்டும் உள்ளவர்களாக  தங்களை உயர்த்திக்கொண்டவர்கள். 

மெய்ப்பிரள யாகலத்து  அஞ்ஞானர் மூவரும்  என்று பிரளயாகலரின் மூன்று குணங்களை சொல்கிறார்.

1. ஆணவ மலம், கன்ம மலம் மட்டும் கொண்டவர்கள் 

2. பிரளய காலம் வரை இவர்களின் பிறவிச்சுழல் தொடரும்

3. சுத்த மாயையில் செயல்படுபவர்கள் 

சகலத்தின் அஞ்ஞானர் மூவரும் என்று சகலரின் மூன்று குணம் சொல்கிறார்.

1. ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்னும் மும்மலம் கொண்டவர்கள் 

2. பிறவிச்சுழலில் இருந்து மீள முடியாதவர்கள் 

3. அசுத்த மாயையில் நின்று  செயல்படுபவர்கள் 

ஆகும் பதின்மராம் விஞ்ஞான ராதிகள் வேற்றுமை தானே என்று மூன்று வகை உயிர்வர்கத்தின் வேற்றுமைகள் பத்து என்று  விவரித்து கூறுகிறார்.

திருமந்திரம் 493

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்(து)
அஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின் 
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் 
விஞ்ஞான ராதிகள் வேற்றுமை தானே.

விடிவே இல்லையா சகலருக்கு? பிறவிப்பெருங்கடல் நீந்தி இறையடி சேரவே  முடியாதா?

முடியும்.

தொடர் ஆன்ம முன்னேற்ற முயற்சியால், சகலராக பிறப்பெடுத்திருந்தாலும், விஞ்ஞானாகலர்  நிலைக்கு செல்ல முடியும்.

தெய்வமே முடியாதென்று சொன்னாலும், தீவிர முயற்சி அதற்கான பலனைக்கொடுக்கும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக்  கூலி தரும்.

என்னும் வள்ளுவரின் வாக்கு பொய்க்காது.

*** *** ***
இம்மாதிரியான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முகநூல் தமிழ் குடில்  குழுவில் இணைந்து கொள்ள வரவேற்கப்படுகிறீர்கள்.

தமிழ் குடில் | Facebook





Tuesday, August 8, 2023

காற்றுக்கென்ன வேலி

 காற்றுக்கென்ன வேலி




காற்றுக்கென்ன வேலி

முப்பது வயது கூட நிரம்பவில்லை. சென்ற வருடம் சென்னை ஆணழகன் பட்டம் பெற்றவர். உடலை பராமரிப்பதில் அதீத ஆர்வம் உள்ளவர். அவரது திடீர் மறைவு ஒரு அதிர்ச்சி செய்தியை விட்டு செல்லுகிறது.

உடலை கவனித்தால் மட்டும் போதாது. உடலை சார்ந்திருக்கும் உயிரையும் சமமாக கவனிக்க வேண்டும் என்ற செய்திதான் அது.

உடம்பு அழிந்தால் கூடவே உயிரும் அழிந்து விடுகிறது. இந்த உண்மை பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கூட தெரியும். உடலை ஆரோக்கியமாக வைக்க உடற்பயிற்சி வகுப்புகளை வைக்கும் பள்ளி கால அட்டவணை உயிர்ப்பயிற்சிக்கென்று எதுவும் வைக்கவில்லை. உடலும், உயிரும் இணைந்து ஆரோக்கியமாக செயல்பட்டால்தான் மனிதனின் வாழ்வு சிறப்படைய முடியும்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் என்னும் திருமூலர் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்கிறார். உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடலை வளர்த்தேன் என்னும் அவர் அந்த உபாயம் திடம்பட மெய்ஞ்ஞானம் சேர வேண்டும் என்கிறார்.

திருமந்திரம் 724

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் 
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் 
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

உடலை வளர்ப்பதற்கு மெய்ஞ்ஞானம் சேருவதா?  

நமக்கு தெரிந்தது உடலை வளர்க்க நல்ல சத்தான உணவு மற்றும் சீரான உடல் உழைப்பு, உடல் பயிற்சிதான்  தேவை. அதென்ன மெய்ஞ்ஞானம்? 

கொஞ்சம் ஆழமாக பாடலைப்புரிந்து கொள்ள வேண்டும். உயிர் வளர்த்தேனே என்னும்போது, உயிரை வளர்ப்பதன் மூலம் உடம்பை வளர்த்தேன் என்கிறார்.

உயிரை வளர்க்கும் உபாயம்தான் மெய்ஞ்ஞானம் சேருவது.

அந்த உபாயம்தான் காற்றைக் கொண்டு உயிரை உடலுடன்  கட்டுவது.

காற்றிற்கு வேலி போட்டு  எதையும் கட்ட முடியுமா? அல்லது எதையும் சுமக்க முடியுமா? 

அனைத்து  அறிவியல் விதிகளை மீறியதுதானே இயற்கை. காற்றிற்கு வேலி போட்டு  உயிரையும் கட்டலாம், பூமியையும் சுமக்கலாம்.

மூச்சு நின்னா போச்சு உசுரு, அது சரி. அதெப்படி பூமிய சொமக்கும்னு யோசிக்கிறீங்களா? 

இப்ப நீங்க, சந்திரயான் கூட நிலவுக்கு போய் இறங்குனீங்கன்னு வச்சுக்குங்க. அங்கிருந்து பூமியப்  பாருங்க. 

பூமியை சுத்தி என்ன இருக்குது? 

காத்துதானே? 

அப்ப, காத்துதானே பூமிய சொமக்குது?

சரி இப்ப, உசுர எப்படி காத்து  கட்டி வச்சிருக்குன்னு பாப்போம்.

ஒரு மனிதன் எவ்வளவு நேரம் சாப்பாடில்லாமல் உயிரோடு இருக்க முடியும். சமீபத்தில், நிலநடுக்க இடிபாடுகளுக்கிடையே சிக்கிய ஒரு மனிதனை 48 நாட்கள் கழித்து உயிரோடு காப்பாற்றியிருக்கிறார்கள். 

ஆனால், மூச்சு விடாமல் ஒருவரால் ஒன்றிரண்டு நிமிடம்  இருப்பது கூட கடினம். அப்படிப்பட்ட மூச்சை பற்றி சற்று யோசித்து பார்ப்போம்.

நாம் சுவாசிக்கும் காற்றானது, பத்து வகையாக பிரிந்து உடல் இயங்க காரணியாக இருக்கிறது. அதை தச வாயுக்கள் என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக பிராணன், அபானன் என்னும் இரண்டு  வாயுக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டு வாயுக்கள் உயிரை கட்டி வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

சுவாசத்தின் போது இரு மூக்கு துவாரங்களில் காற்று உடலுக்குள் செல்கிறது. இடது மூக்கு வழியாக செல்லும் காற்று  இடைகலை அல்லது சந்திரகலை, குளிர்ச்சியானது. வலது மூக்கு வழியாக செல்லும் காற்று பிங்கலை அல்லது சூரியகலை  ஆகும். இது சூடானது. சந்திரகலை மூச்சு வலது கால் பெருவிரல் சென்றடையும். சூரியகலை மூச்சு இடது கால் பெருவிரல் சென்றடையும். இவை இரண்டும் சந்திக்கும் மையப்புள்ளியே சுழுமுனை நாடி அல்லது அக்னி நாடி ஆகும். இந்த இடத்தையே, உயிரின் மையப்புள்ளியான  மூலாதாரம் என்றும் சொல்வார்கள்.

அக்னி நாடியில்தான் மேல்நோக்கி செல்லும் தன்மையுடைய  பிராணனும், கீழ்நோக்கி செல்லும் தன்மையுடைய  அபானனும் சந்திக்கின்றன. இவ்விரு வாயுக்களையும் சுழுமுனை நாடி வழியாக சுழு முனைக்கு கொண்டு செல்ல வேண்டும். உடம்பு அழியாதிருக்க, காற்றைக்கொண்டு  உயிரைக்  கட்டி வைக்கும் முறை இது. 

சந்திரகலை, சூரியகலை மூச்சை  திருமூலர் மூன்று மடக்கு உடைப்பாம்பு இரண்டு எட்டுள என்கிறார். அதாவது, உள்ளிழுத்தல், உள்நிறுத்தல், வெளியேற்றுதல் என்ற மூன்று நிலைகளை கொண்ட மூன்று மடக்குள்ள, எட்டு அங்குலம் நீளமுள்ள இரண்டு பாம்புகள் என்கிறார்.

இந்த இரண்டு பாம்புகள் தரும் பிராணன், அபானன் என்னும் வாயுக்களை பன்னிரண்டு அங்குலம் மேலேற்றி நெற்றியில் உள்ள சுழுமுனைக்கு கொண்டு செல்ல இயந்திரம் ஒன்றிருக்கிறது, அதன் பெயர் சுழுமுனை நாடி என்பதை, ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்தான் என்று சொல்கிறார். 

கீழ்முகமாக இவ்விரு வாயுக்களையும் செல்ல விடாமல் அக்னிநாடியில் கட்டி மேலே கொண்டுசெல்ல வேண்டும் என்பதை, நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட்டு,  இயந்திரம் மூலம் பன்னிரண்டு அங்குலம் மேலேற்றி  சுழுமுனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்விரு வாயுக்களை மேலேற்றுவதற்கான வழிமுறைதான் தியானம்.

இவ்வாறு தியானத்தின் மூலம் மெய்ஞ்ஞானம் அடைபவரின்  உடம்புக்கு அழிவு கிடையாது என்பதை, ஊன்றி இருக்க உடம்பு அழியாதே என்கிறார்.

திருமந்திரம் 728

மூன்று மடக்குஉடைப் பாம்புஇரண்டு எட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்தான்
நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட்டு
ஊன்றி இருக்க உடம்புஅழி யாதே.

*** *** ***

இம்மாதிரியான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முகநூல் தமிழ் குடில்  குழுவில் இணைந்து கொள்ள வரவேற்கப்படுகிறீர்கள்.

தமிழ் குடில் | Facebook





Saturday, August 5, 2023

உயிர் உடல் உள்ளம்

 உயிர் உடல் உள்ளம் 



உயிர் உடல் உள்ளம் 

சமீப காலங்களில் மூளை சாவு என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். மூளை சாவு என்றால்  உயிர் இருக்கிறது; ஆரோக்கியமான உடலும்  இருக்கிறது. ஆனால் இனி உடல், உயிரின் ஆணைகளை ஏற்று செயல்படாது. இருப்பினும் இறந்தவரின் உடலின் உறுப்புகளை  தேவைப்படுபவர்களுக்கு, உதிரி பாகங்களை  இயந்திரங்களுக்குப்  பொருத்துவதுபோல்   பொருத்தி செயல்பட வைக்கலாம்.

நாம் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய செய்திகள் இங்கே இருக்கிறது.

1. உடலில் உயிரும், இயங்குவதற்கு தேவையான சக்தி இருந்தும், உடல் இயங்க தேவையான கட்டளைகள் உடலுக்கு சென்றடையவில்லை.

2.  இறந்தவரின் அங்கங்கள் மாற்று  உயிருள்ள உடல்களில் பொருத்தப்பட்டால் செயல்பட ஆரம்பிக்கிறது.

முதல் நிகழ்வில், மூளையிலிருந்து பெறப்படும் ஆணைகள் உடலில் செயல்படும்  உறுப்புகளுக்கு  [கர்மேந்திரியங்கள்]  சென்றடையவில்லை. இந்த ஆணைகளை எடுத்து செல்லும் உள்ளம் [அந்தக்கரணங்கள்] இங்கே செயல்படும் நிலையில் இல்லை. இங்கே மூளைக்கும் உள்ளத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடலுடனும், உயிருடனும் மூளையால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இரண்டாம் நிலையில், மாற்று உடலின் உள்ளம் இடும் ஆணைகளை பெற்று இறந்தவரின் அங்கங்கள் செயல்படும் நிலைக்கு செல்கிறது. இங்கே மூளையின் ஆணைகளை ஏற்று உள்ளம், உடல், உயிர் மூன்றும் இணைந்து செயலாற்றுகிறது.

மேற்சொன்ன விளக்கத்திலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். உள்ளம் என்ற ஒன்று இல்லாவிட்டால் ஒன்றுமில்லை. உள்ளமே நம் அனைத்து உலக அனுபவ உணர்வுகளுக்கு  பிரதானம்.

அதனால்தான் திருமூலர் உள்ளத்தை முதலில் வைக்கிறார். உள்ளம் பெருங்கோயில் என்கிறார்.  ஊனுடம்பு ஆலயம் என்று  உடலை இரண்டாவதாக குறிப்பிடுகிறார். கோயிலுக்குள்ளே இருக்கும் ஆலயம் என்கிறார். உயிரைக்குறிப்பிடும்போது, தெள்ளத்  தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம், கருவறைக்குள்ளே மையமாக இருந்து, கோயில்  அனைத்துக்கும் மூலமாக நின்று செயலாற்றும் சிவலிங்கம் என்கிறார். கோயில் கோபுர வாசலை, வள்ளல் பிரானாற்கு வாய் கோபுர வாசல், மனித உடலில் உள்ள வாய் என்று குறிப்பிடுகிறார். உயிர், உடல், உள்ளம் மூன்றும் சேர்ந்து ஆற்ற வேண்டிய செயல்களுக்கு நுழைவு வாயிலாக வாய் இருக்கிறது. மனித உடலை அவனுக்கு விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு திருட்டுத்தனமாக  இருந்து ஆட்டுவிக்கும் ஐந்து புலன்களை, கள்ளப்புலனைந்தும் காளா மணி விளக்கே, கோயிலில் மணி மற்றும் விளக்குகள் என்கிறார். அவன் குணாதிசயங்களை காட்டி கொடுத்துவிடும் என்றும் அறிகிறோம்.

மேலோட்டமாக பார்த்தால், நம்முடைய ஒவ்வொரு செயலும், நாமே செய்வது போல் தோன்றும் . ஆனால், ஒவ்வொரு செயலுக்கும் அடித்தளமாக இருப்பது புலன்கள். கோயிலின் மணி ஓசை கோயில் இருப்பிடத்தை காட்டிவிடும். எரியும் விளக்குகள் அங்குள்ள பொருட்களை தெளிவாக காட்டி நிற்கும். இப்படித்தான், மனிதனின் குணங்களை இந்தப்புலன்கள் அவனது நடவடிக்கைகளை கொண்டு காட்டி கொடுத்துவிடும்.

புலன்களில் உள்ள அறியும் ஆற்றலை இந்திரியங்கள் என்று குறிப்பிடுகிறோம். கண்களால் பார்க்கிறோம், வாயால் சுவைக்கிறோம் என்றால் பார்வை, சுவை என்பது அறியும் ஆற்றல். இந்த இந்திரியங்களுக்கு புறச்செயல்கள் மற்றும் அகச்செயல்களை அறியும் ஆற்றல் இருக்கிறது. ஆனால், தொடர்ந்து உடலுக்கு வெளியே நடக்கும் செயல்களிலேயே உள்ளம் நிலைத்திருக்கும்படி செய்து, உள்ளே இருக்கும் இறைநிலையை அறிய முடியாமல் செய்வதால் இவைகள் கள்ளப்புலன்கள் என்று சொல்லப்பட்டது.  

திருமந்திரம் 1823

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் 
வள்ளல் பிரானாற்கு வாய் கோபுர வாசல் 
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம் 
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.


இங்கே மறைந்துள்ள இச்சா சக்தியின் தன்மையை நாம் புறந்தள்ளி விட்டு செல்லக்கூடாது.

புலன்களின் மூலம் பெறப்படும் செய்திகளை மனம்  இச்சையாக மாற்றி மூளைக்கு எடுத்து செல்கிறது. இச்சையை செயல்படுத்தும் எண்ணங்களை மூளை  முதலில் உயிருக்கு  தெரிவிக்கிறது.  இங்கே உயிருக்கு தன்முனைப்பு எதுவும் இல்லை. அதாவது இது தேவை, தேவை இல்லை என்று சொல்லும் தன்மை உயிருக்கு கிடையாது.

ஒவ்வொரு மனிதனின் குணத்திற்கு ஏற்ப  இச்சா சக்தி இருக்கும். இச்சா மிகுந்திருந்தால் அது  ஈஸ்வர நிலை. இச்சா சக்தி குறைந்திருக்கும், சுத்த வித்தை என்னும் நிலையிலோ, இச்சா சக்தி சமன நிலையில் இருக்கும் சதாசிவ நிலையிலோ புலன்களின் ஆளுமை குறைந்திருக்கும்.

இங்கிருந்து புறப்படும் எண்ணங்களே கர்மேந்திரியங்களை செயல்பட வைக்கிறது.

புலன்களை வெல்ல முடியாத நிலையில், புலன்களுக்கு அடிமையாகி, ஒருவன்  செய்யும் காரியங்களே அவனது  அடையாளமாக மாறிவிடுகிறது.

*** *** ***

இம்மாதிரியான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகநூல் குழுவில் இணைந்து கொள்ளலாம்.

தமிழ் குடில் | Facebook





Post settings
Labels
No matching suggestions

Options ப்படையாக இருப்பது புலன்க

Wednesday, July 26, 2023

காமம் உயிரின் ஒட்டுண்ணி

காமம் உயிரின் ஒட்டுண்ணி



காமம்.

காமம் என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயம் பெண்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருகண் 
நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.

                                                                             - திருக்குறள் 1091

காண்போரை அப்படியே விழுங்கி உண்ணக்கூடிய கண்களையுடைய இவள் பார்வையில் இரண்டு செயல்களை நடத்திக்காட்டும் நோக்கம் உள்ளது. ஒன்று  அவளைக் கண்ட தலைவனை  காம நோய்க்குள்ளாக்குவது. மற்றொன்று    காம நோய்க்கு உள்ளான தலைவனுக்கு   மருந்தாக அமைந்து அவனது காம நோயைத் தீர்ப்பது.

மொத்தத்தில் காமம் என்றால் பெண், பெண் சார்ந்த உணர்வுகள், உறவுகள். பெண்ணிடம் பெரும் இன்பம். 

இவை  மட்டும்தானா காமம் என்பதன் பொருள்?

இல்லை. நிச்சயமாக இல்லை.

காமம் என்றால் இச்சா சக்தி. ஒன்றின்மேல் இச்சை, அது பெண்ணின் மீது கொள்ளும் காதலாக இருக்கலாம், குழந்தையின் மேல் வைக்கும் பாசமாக இருக்கலாம், மனை, மாடு என்று பொருட்களின் மீது கொள்ளும் பற்றாக இருக்கலாம்.

இந்த இச்சா சக்தி உயிரோடு கலந்து இருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதனை தொடர்ந்து இயங்க செய்யும் பேரியக்க இச்சா சக்தியே காமம்.

நின்ற பராசத்தி நீள்பரன் தன்னோடு 
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும் 
நின்றறியும் கிரி யாசத்தி நண்ணவே 
மன்றன  வற்றுள் மருவிடுந் தானே.

                                                                          - திருமந்திரம் 1136

சிவத்தை தன்னுள் கவர்ந்திருக்கும்  சக்தி, ஞானமும் இச்சையுமாக இயங்குவாள். இங்கு உருவாகும் கிரியா சக்தி என்னும் ஆக்க செயல்கள் உடலின்  அனைத்து செயல்களுக்கும் ஆதாரமாக இருக்கும். 

இச்சை சார்ந்த காமம், கிரியா சக்தியால் செயலாக உருவாகும் நிலை இது.

காமம் எவ்வாறு மனிதனிடம் உண்டாகிறது?  ஒருவருக்கொருவர் எப்படி  மாறுபடுகிறது என்று இனி பார்க்கலாம்.

மண்ணில் உடலெடுத்த புத்தன், இயேசு, காந்தி போன்ற மஹான்களும்கூட  காமத்திலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் அல்ல.  நாம் புனிதமாக கொண்டாடும் அத்தனை குருமார்களும், ஏன்?  சித்தர்களும்கூட   இந்த இயற்கை  விதிக்குள் அடங்கியவர்களே.

இந்த  இயற்கை விதியை சற்று கூர்ந்து கவனிப்போம்.

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் 
பதியினைப் போல்பசு பாசம் அனாதி 
பதியினைச் சென்று  அணுகாப் பசுபாசம் 
பதிஅணுகில் பசு பாசம் நிலாவே.

                                                           - திருமந்திரம் 115

இப்பாடலில், பதி என்பது ஆதியில் தோன்றிய இறையைக் குறிக்கும். பசு என்பது மண்ணில் பிறக்கும் உயிரினை சுட்டுகிறது. பாசம் என்பது உயிரினை கட்டி வைத்திருக்கும் தளையை, அதாவது காமத்தை குறிக்கிறது.

இங்கே, இறை தனியாகவும், உயிரும் காமமும் இணையாக  காட்டப்படுகிறது. இம்மூன்றும் ஆதியில் சுயம்புவாக தோன்றியவைகள். உயிர், காமத்தின் பிடியில்  கட்டுண்டு இறையை சென்றடைய முற்படுவதில்லை. ஒருவேளை, முயற்சி செய்து இறையை சென்றடைந்தால், உயிரும் காமமும் இறையுடன் கலந்துவிடும்.

உயிரும் காமமும் இணைந்து பயணிப்பவை. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. உடலில் உயிர் உள்ளவரை காமமும் அதனுள் கரைந்திருக்கும்.

இன்னொரு கோணத்திலிருந்தும் இந்த உண்மையை நாம் உறுதி செய்து கொள்ளலாம். உயிர்கள் மண்ணில் தனக்கான உடலில்  பிறப்பெடுக்கும்வரை ஆகாயத்தில்  இருக்கின்றது. 

பஞ்ச பூதங்களில் ஒன்றான, ஆகாயம்  உயிர்களுக்கு வழங்கும் குணங்கள் ஐந்து. அவை முறையே, 1. காமம் 2. குரோதம் 3. லோபம் 4. மதம் 5. மாச்சரியம்  என்பவை ஆகும். எனவே, உயிர்கள் வானத்திலிருந்து மண்ணில் பிறக்கும்போது இந்த ஐந்து குணங்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டே வருகிறது.

இதையே, திருமந்திரப்பாடல் 113 உறுதி செய்கிறது.

விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து 
உண்ணின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்  
கண்நின்றுக்  காட்டி களிம்புஅறுத் தானே.

வானத்திலிருந்து உயிரை கொண்டுவரும் இறைவன், அந்த உயிரின் விதிக்கேற்ப உடலைத்தருகிறான். அந்த உடலுக்கு தன்னுடைய குளிர்ச்சியான  பாதங்களை தலை உச்சியில் வைத்து, உடலுக்குள் பேரொளியாய் திகழ்கிறான். முந்தைய பிறவிகளின் நினைவுகளை  அடியோடு அழித்தும்  விடுகிறான்.

உயிரோடு காமம் கலந்திருக்கும் உண்மையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் சுத்த தத்துவங்கள் எனப்படும் சிவ தத்துவங்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சிவ தத்துவங்கள் உயிரையும், உயிரை இணைக்கும் இச்சா  சக்தியையும் மிக விரிவாக நமக்கு எடுத்துரைக்கிறது.

சிவ தத்துவங்கள் ஐந்தும் உயிரில் ஒன்றியிருப்பவை. அவை முறையே, நாதம், விந்து, சுத்த வித்தை, ஈஸ்வரம் மற்றும் சதாசிவம்.

நாதம் என்பதை, ஞானமாக, ஓம் என்னும் பிரணவ ஒலியாக கொள்ளலாம். விந்து என்பதை கிரியா சக்தியாக ஒளியாக கொள்ளலாம்.  கிரியா சக்தி எப்பொழுதும் இச்சா சக்தியுடன் இணைந்து இயங்குகிறது. 

இந்த இச்சா சக்திதான், காமமாக வெளிப்படுகிறது.

ஞானம் மிகுந்து  கிரியா சக்தி குறைந்திருப்பது சுத்த வித்தை. கிரியா சக்தி மிக்கிருப்பது  ஈஸ்வரம். இரண்டும் சம நிலையில்  இருப்பது  சதாசிவம்.

காமம் உடலில் தானாக இயங்காது. அதன் அடிப்படை ஆசை. ஆசையின் அஸ்திவாரம் பாசம் அல்லது பொருட்கள். ஆசை காமத்தின் தூண்டுகோல். பெண்ணின் மீது ஆசை. பெற்ற பிள்ளைகளின் மீது ஆசை. மனை, மாடு என பொருட்களின் மீது ஆசை. ஆசையின் கிரியாஊக்கி ஐம்புலன்கள்.

ஆசை காமத்தின் தூண்டுகோல் எனில் ஆசை எவ்வாறு உண்டாகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஐம்புலன்களின் வேலையே அதுதானே என்கிறீர்களா?  சரிதான்.

ஐம்புலன்களின் மூலம் பெறப்படும் செய்திகள் ஆசையாக மாறுவதையும் கவனிக்கவேண்டும். 

கண்ணெதிரே ஒரு அழகிய பெண் தோன்றுகிறாள்.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் 
ஒண்தொடி கண்ணே உள.

                                                                                           - திருக்குறள் 1101

அவளைக் கண்களால் கண்டு மகிழவும், அவள் பேசுவதை காதால் கேட்டு கிறங்கவும், அவள் அதரங்களை சுவைத்தறியவும், அவளை மூச்சுக்காற்றால் முகர்ந்து உயிரை உயிர்ப்படைய செய்யவும்  மேலும் அணைத்து உறவில் உடல் சுகம் பெறவும் என ஐம்புலன்களும் அனுபவிக்கும் இன்பம், கவர்ந்திழுக்கும்  குணங்கள் பெண்ணிடமே உள்ளது.

பெண்ணைக்கண்டவுடன் முதலில், புலனுணர்வுகள்  அவளைக்கண்ட செய்தியை உயிருக்கு அனுப்புகிறது. செய்தி ஆசையாக மாறி காம நிலைக்கு எடுத்து செல்கிறது. 

குறிப்பு: காமத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. இரு பாலினமும் காமத்தை சமமாகவே  எதிர்கொள்கிறது.

இது எவ்வாறு ஒரு மனிதனிடம் நிகழ்கிறது?

கண்கள் பார்த்தவுடன், கண்களின் பொறிவாயிலாக செயல்படும் நாடிகள் இந்த செய்தியை மனதிற்கு கொண்டு செல்கிறது. வலது கண் வாயிலாக  புருடன் என்னும் நாடியும், இடது கண் வாயிலாக  காந்தாரி என்னும் நாடியும் உள்ளது. நாடி என்றால் செய்தியை கடத்திச்செல்லும் கடத்தி என்று வைத்துக்கொள்ளவும்.

மனம் அவள் அழகானவள் என்ற செய்தியை உயிருக்கு தெரிவித்தவுடன், அவளை அடையும்  ஆசை உண்டாகிறது. இடையில் மாயை என்னும் தத்துவம் இருக்கிறது. ஆசை என்னும் மயக்க நிலையில் உள்ள உயிர், மாயை இடை நிற்பதைக்கூட அறியாமல்  ஒதுக்கித்தள்ளி விடுகிறது.

இந்த ஆசையே காமத்தின் ஆணி வேர். 

இங்கே செயல்படுவது, இச்சா சக்தி மிக்கு ஞான சக்தி குறைந்த ஈஸ்வர நிலை. பொதுவாக சாதாரண மக்கள் எனப்படும் நாமெல்லோரும் ஈஸ்வர நிலையில் இருப்பவர்களே.

ஆசை காமமாக மாறி, செயல்படும் நிலைக்கு செல்வது அவரவர் குணாதிசயத்தை பொறுத்தது. ராஜஸ  குணம், சாத்வீக குணம் மற்றும் தாமஸ  குணம் என்னும் மூன்று குணத்திற்கு ஏற்ப காமம் செயல்படும். காலம், நியதி என்ற வித்யா தத்துவங்கள் இவர்களின் குணத்திற்கேற்ப காமத்தை முன்னிறுத்தும்.

பெண்ணைப்பார்த்தவுடன் உயிருக்கு செய்தி சொன்ன மனதிற்கு, கட்டளை வருகிறது காமத்திடமிருந்து, 'அவளை அடைய வேண்டும்' என்று.

மீண்டும் ஒருமுறை நிலைமையை சீர்தூக்கி பார்க்கும் வாய்ப்பு மனதிற்கு கிடைக்கிறது. மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என நான்கு நிலைகளில் செயல்படும் மனம், காமம் என்று வந்துவிட்டால் உடனடி செயல்பாட்டில் இறங்கிவிடுகிறது. இங்கே அறிவு நிலை மங்கி விடுகிறது.

மனதிலிருந்து பிறக்கும் ஆணை, ஞானேந்திரியங்கள் எனப்படும், மெய், வாய், கண், மூக்கு, தோல்-க்கு சென்றடையும். கூடவே கர்மேந்திரியங்கள் எனப்படும் கால்கள், கைகள், வாய், கருவாய், எருவாய் செயல்பட ஆணைகள் சென்றடையும்.

மேலே, விளக்கியதிலிருந்து காமத்தை வென்றவர் யாருமில்லை, வெல்லப்போகிறவர் யாருமில்லை  என்ற இயற்கை விதி புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

இதில், ஆச்சர்யம் என்னவென்றால் யாரெல்லாம் கிரியா சக்தியை விழித்தெழச்செய்து ஆக்கபூர்வமாக செயலாக்கம் நடத்துகிறார்களோ, அவர்களுக்கு அதே அளவான இச்சா சக்தி எனும் காம உணர்வும்  இருக்கும். காமத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும், கட்டவிழ்த்துவிடுவதும்  அவர்களின் பிறப்பின் குணாதிசயமே அன்றி வேறல்ல.

அப்படியானால், காமம் இல்லாமலே இருக்க முடியாதா என்ற கேள்வி வருகிறது. ஆமாம், காமம் இல்லாமல் இருந்தால் அது ஜடப்பொருளுக்கு சமம். யாரும் ஜடமாக இருப்பதை விரும்ப மாட்டார்கள் மண்ணில் உயிரோடு இருக்கும்வரை. 

ஆனால், காமத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அதற்கு மீண்டும் சிவ தத்துவத்தை நினைவு கொள்வோம்.

ஞானம் அதிகமாகவும் கிரியா சக்தி குறைவு நிலை சுத்த வித்தை. ஞானம் குறைவாகவும் கிரியா சக்தி அதிகமாகவும் உள்ள நிலை ஈஸ்வரம். இரண்டும் சமமாக உள்ள நிலை சதாசிவம்.

 கிரியா சக்தியின் அளவை குறைப்பதன் மூலம் நாம் காமத்தின் வெளிப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவரலாம். அதாவது, எந்த ஊக்கம் தரும் செயலோ, முயற்சியோ செய்யாமல் இருந்தால் போதும், கிரியா சக்தியின் அளவு குறைந்துவிடும்.  இது இம்மாதிரியான எதிர்மறை விளைவுகளையே உண்டுபண்ணும்.

இது சரியான வழி அல்ல.

சரியான வழி ஞான சக்தியை அதிகரிப்பதுதான். 

ஞானம் என்னும் சிவ சக்தி, உடலைப்பொருத்த மட்டில் உயிர் அல்லது பிராணன் என்றாகிறது. நாம், பிராண சக்தியை அதிகரிப்பதன் மூலம் காமத்தின் தன்மையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

எனக்கு தெரிந்த வரையில், முறையாக பிராணாயாமம் செய்வது ஒரு வழி என்றால் இரண்டாவது வழி காயகல்ப பயிற்சி. முறையான குருவிடம் பயிற்சி பெறுவதன் மூலம் இது நம் அனைவருக்கும் சாத்தியமே.

*** *** ***

பின் குறிப்பு: தமிழில் ஆர்வம் உள்ளவர்கள், திருக்குறள், திருமந்திரம் மற்றும் சித்தர் பாடல்கள் மூலம் நம் பிறப்பின் பொருளறிய ஆர்வம் இருப்பின், தமிழ் குடில் என்னும் முகநூல் குழுவில் இணையலாம்.









 

 


Friday, July 7, 2023

ஊடல் கொண்ட பெண்மை


ஊடல் கொண்ட பெண்மை 




திருக்குறள்: 1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் 
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொங்கி வரும் காட்டாற்று வெள்ளத்தில் குதிக்கும் ஒருவர், எப்படியும் வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் வழியை அறிந்து வெள்ளத்தில் குதிப்பார்.

அவ்வண்ணமே,

தலைவன் முன்னிலையில், எப்படியும் தன்னுடைய ஊடல் பொய்த்து விடும்,  என்று தெரிந்தும், தலைவி ஏன் ஊடல் கொள்ள வேண்டும்?

 

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...