அம்மா என்னும்
தெய்வம் தந்த வீடு
நான்
பவானி ஆறு.
ஆற்றங்கரையில் புல்லை அறுத்துக்கொண்டிருக்கும் அம்மாவை பார்க்கிறேன்.
ஏனோ இந்த எண்ணம் மனதில், அம்மா இல்லாத உலகம் எப்படி இருக்கும்? என்னால் அதை தாங்கிக்கொண்டிருக்க முடியுமா?
என்னுடைய முழு உலகம் அம்மா மட்டுமே!
ஆனால், அம்மாவின் உலகம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காட்டிற்கு சென்று விறகு சேகரிக்கிறாள். மதிய உணவு சமையலின்போதே, நெசவு செய்வதற்கான துணை வேலைகளை செய்கிறாள். மதியமும், மாலையும் அடுத்தவர் வீட்டு நெசவு தொழிலுக்கு துணை வேலை செய்கிறாள். கூடவே, வீட்டில் இருக்கும் பால் தரும் எருமைக்கு தேவையான நீர், புல்லை கொடுக்கிறாள். வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து, தன்னுடைய ஏழு குழந்தைகளுக்கான தேவைகளை புரிந்து செய்கிறாள். எத்தனை மணிக்கு தூங்க செல்வாள் என்று எனக்கு தெரியாது.
கணவனின் ஆதரவில்லாமல், சரியான நிதி ஆதாரமில்லாமல், சொந்த வீடில்லாமல் இது எப்படி சாத்தியம்?
பால்யமணம் புரிந்து தனித்திருந்த பெரியம்மா எங்களுக்கு வீட்டை கொடுத்து, ஆதரவாக இருந்தது மலையளவு பலம் அப்போது.
பன்னிரண்டாவது வயதில், பழத்தோட்டம் பேருந்து நிறுத்தத்தில், என்னை அரசு விடுதியில் தங்கி படிக்க அனுப்பும்போது அம்மாவின் கண்களில் வழிந்தது கண்ணீர். இன்றைக்கு அந்த கண்ணீருக்கு ஆயிரம் பொருள் சொல்ல முடியும் என்னால். அன்றைக்கு, படிக்கத்தானே போகிறேன், எதற்கு அழணும் என்றே நினைத்தேன்.
அரசு விடுதி.
பிற்படுத்தப்பட்டோர் வரிசையில் போராடி எனக்கும் ஓரிடம் கிடைத்தது. படிப்பில் போராட வேண்டியதாக இல்லை. வகுப்பில் முதல் இடம் என்பது நான் முயற்சிகள் செய்யாமலே கிடைத்தது, ஆச்சர்யம். அதுவரை ஆறாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில், முதலிடம் பிடிக்க கடின முயற்சி தேவைப்பட்டது. இங்கோ, என்னுடன் படித்த மாணவர்கள், வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அதிகமாக படிப்பை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை என்பதும் உண்மை.
ஆனால், அதிகம் போராட வேண்டி இருந்தது பசி இல்லாமல் இருப்பதற்கு. அதைவிட கொடுமை, சக மாணவர்களின் சகிக்க முடியாத பழக்க வழக்கங்கள். இரண்டும்கெட்டான் பருவத்தில் கொடுக்கப்பட்ட தகாத புத்தகங்கள். இயற்கையாக உடலில் ஏற்பட்ட வளர்ச்சியின் மாற்றங்கள்.
என் உலகம் அம்மாவை விட்டு தனியாக வளர ஆரம்பித்தது.
பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி நாட்கள்.
மீண்டும் அம்மாவுடன்.
வறுமை தேவதையின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது வீடு. இரு சகோதரர்களின் சொற்ப வருமானம். அதுவும், வேலை நிறுத்தம், அது இதுவென்று முழுமையாக வீடு வந்து சேராது.
அம்மாவின் உழைப்பு நின்றபாடில்லை; கொஞ்சம் குறைந்திருந்தது. இயலாமையில் வரும் வார்த்தைகளின் வெப்பம் அதிகம் என்னை சுடும்.
எதற்கு எங்களை பெற்றாய்?
யாரும் தன் அம்மாவிடம் கேட்டுவிடக்கூடாத கேள்வி. கேட்டு விட்டேன். விவரமறிந்து கேட்டேனா அல்லது வெறுப்பின் உச்சியில் இருந்து கேட்டேனா தெரியாது. இன்றைக்கும் என்னை கூனிக்குறுக வைக்கிறது அந்த வார்த்தைகள்.
வேலையில்லாப்பட்டதாரி.
கல்லூரி முடித்து ஒன்றரை வருடங்கள். யார் எதை பேசினாலும், என்னை நோக்கியே பேசுவதாக அர்த்தம் வருகிறது. வாழ்க்கையே அர்த்தம் அற்றதாக தோன்றும்போது, உறவுகள் அனைத்தும் கசப்புதானே.
ஒரு வாரம் முழுக்க உண்ணா நோன்பு, உள்ளுக்குள் அழுதுகொண்டே. அம்மாவுக்கு தெரியும் நான் பண்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று.
என் வெறுமைக்குள் அம்மாவும் அன்று.
வாழ்வில் வசந்தம் வரவும், வளரவும் செய்தது வங்கிப்பணி. இருபது ஆண்டுகள் ஓடி மறைந்தது.
திரும்பிப்பார்க்கிறேன்.
அம்மா தனிமரம்.
அதையே வரமாக ஏற்றுக்கொண்டார்கள். வேடந்தாங்கல் பறவைகளாக பெற்றவைகள் மற்றும் பெற்றவைகள் பெற்றவைகள். வருவார்கள், போவார்கள் உலகெங்கிலிருந்தும்.
மீண்டும் இருபது ஆண்டுகள் ஓடி மறைந்தது. ஞாயிற்று கிழமைகளில் அம்மாவுடன் மகிழ்வுடன்.
'எல்லாம் வெறுத்துவிட்டது, இந்த மீன் சாப்பிடுவதில் மட்டும் ஆசை இருக்கிறது.'
அம்மாவின் நினைவாக மீன் படையலிட்டு, அம்மாவை என் கண்கண்ட தெய்வமாக வணங்குகிறேன்.
[17-04-2018 என்னையும், மண்ணையும் விட்டு பிரிந்த அம்மாவின் நினைவாக]
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
- திருமந்திரம் 189
மத்தளம் போன்ற உடல் ஒன்றிருக்கிறது. அந்த மத்தளத்தை வாசிக்கும் தாளங்களாக இடது மற்றும் வலது சுவாசம் உள்ளது. அந்த உடலை ஐம்புலன்கள் அரசாட்சி செய்கின்றது. அரசராக உயிர் இருக்கிறது. அரசன் நீங்கி விட்டால், மண் வளர்த்த அந்த உடல் மண்ணிலே மறைந்துவிடுகிறது..
பிறந்ததொன்று நிலைப்பதில்லை. யாரும் இதில் விதி விலக்கில்லை.