Thursday, February 3, 2022

காலத்தை வென்றவன்

காலத்தை வென்றவன் 
நீ.. 
காவியமானவன் 
நீ..


'டாக்டர், எப்படி சொல்றீங்க நான் உயிருடன் இல்லை என்று?' - ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வந்த டாக்டரை கேட்கிறேன்.

'இதோ உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். பேசுகிறேன். உங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்'

டாக்டர் என் இருக்கையை  பார்த்துக்கொண்டிருந்தார், பேசவில்லை. அவர் பேசியதாக நினைத்துக்கொண்டு, அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

நான் உயிருடன் இருப்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும். விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் அமர்ந்திருக்கும் இருக்கையில், என் மீதே யாரோ அமர்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை. மெதுவாக வெளியே வருகிறேன்.

ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வரும் என் உடலைப்பார்க்கிறேன்.

யார் யாரோ,  என் உடலைப்பார்த்து அழுகிறார்கள். எல்லாரும் பனிமூட்டத்தின் இடையில்  இருப்பது போல் தோன்றுகிறார்கள்.

செத்துத்தான் போய்விட்டேன் போலிருக்கிறது.

அப்படியானால், இப்பொழுது நான் யார்?

உயிர் - வெறும் ஆன்மா.

உடலில் இருக்கும்வரை என்னால் உணர முடியாத ஆன்மா.

இந்நாள் வரைக்கும், ஏன் என்னால் உயிர் இருப்பதை அறிந்து அதன் தன்மையை உணர்ந்து  கொள்ள முடியவில்லை. 

அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

ஏன் சாத்தியமில்லை?

உயிர் உடலில் இருக்கும்வரை அதனை மூன்று வகையான  இருள் சூழ்ந்திருக்கிறது.

பரிந்துபார் முதற்பாழில் பூதபூதம் புரியாதவன்தான் வாதியாவான் 
எரிந்துபாரண்டன்பாழ்தேதிட்டாக்க லெட்டெட்டு மறுபத்துநாலாஞ் சித்தன்
முரிந்துபார் மூணாம்பாழ்   புக்கினாக்கால் மூச்சான வாதுபது பிரந்ததானம் 
கரிந்துபார் நால்பரிஞ்ச போகுவிடங்கண்டால் எமனடுங்கிப்போவான் இடம்காட்டிடாமே.

                                                                                                                           - 142 போகர் 7000

1. பஞ்ச பூதங்கள் என சொல்லப்படும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் இவற்றால் ஆன உடலில் உள்ள ஐம்புலன்களின் தன்மைதான்  முதல் இருட்டு.

- இதனை புரிந்து கொள்ள இயலாதவர்கள் கண்டதைப்பேசித் திரிவார்கள்.

2. அறிவு நிலை. கற்று, கேட்டு, அறிந்து, உணர்ந்து, விவாதித்து பெற்ற  அறிவு நிலை இரண்டாம் இருள் நிலை. அறிவே இருளாக மாறிவிட்டது ஆன்மீகத்தில்.

- 64 கலைகள் கற்றிருந்தாலும் அவற்றை எரித்துவிட்டால் சித்தர் நிலை எய்தலாம்.

3. காற்று. சுவாசத்தின் போது உள்ளிழுக்கும் காற்றானது பத்து வகைகளாக பிரிக்கப்பட்டு, உடலில் உள்ள அனைத்து சிற்றறைகளுக்கும் சீராக சென்றிருப்பது  மூன்றாம் பாழ். 

- காற்று  உடலில் சமனத்தன்மை அற்றிருப்பதே அனைத்து உடல் உபாதைகளுக்கும் பிரதான காரணம். 

இம்மூன்று இருட்டினையும் உடலில் உயிர் உள்ளபோதே கடக்க முடிந்தால், அதுவே உயிர் இருக்கும் நிலையை அறிய செய்துவிடும். எமனையும் வெல்ல முடியும்.

முதல் இரண்டு இருட்டு நிலையை நாம் தியானத்தின் மூலம் கடக்க முடியும் என்றால், காற்றான  மூன்றாம் இருளை பிராணாயாமப் பயிற்சியினால் வெல்ல முடியும்.

காற்று என்றால் என்னவென்று பார்ப்போம்.

கால் - காற்று 

பாம்பறியுமாம் பாம்பின் கால். 

பாம்புக்கு காது என்று தனியாக அங்கம் இல்லை. கண்ணே காதாக செயல்படுகிறது. அதனால் பாம்பிற்கு  இன்னொரு பெயர் கட்செவி.  

ஒரு பாம்பின் சீறும் மூச்சுக்காற்றை மற்றொரு பாம்பு அறிந்து கொள்ளும் என்பதே பாம்பறியுமாம் பாம்பின் கால்.

காலன்  - காற்றை ஆள்பவன், எமன்.

மனிதனுக்கு அளவிடப்பட்ட காற்றின் அளவு முடிந்தவுடன், உடலில் இருந்து உயிரை எடுத்துக்கொள்பவன்.

கால காலன் - காற்றினுள் காற்றாய் இருப்பவன், இறைவன்.

மனித மூச்சினில் பிராணனாய் இருந்து உயிர்களுக்கு அருள்பவன்.

உள்நின்று ஒளிரும் உளவாய் பிராணனும் 
விண்நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் 
மண்நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் 
கண்நின்று இயங்கும் கருத்தவன் தானே.

                                                                                                                    - திருமந்திரம் 3040

மண்ணிலே காற்றாய் நிற்பவன் இறைவன். அவ்விறைவனே கதிரவனாகவும், உடலுக்குள் இயங்கும் பிராணனாகவும் இருக்கிறான்.

காலம் - காற்றினை மூச்சாய் கொண்டு உயிர் மண்ணில் வாழும் நாட்கள்.

முப்பாழையும் ஒருவனால் தாண்டி சமாதி நிலைக்கு செல்ல முடியுமானால், அவனே  காலத்தை வென்றவன் ஆவான்.



Monday, January 31, 2022

தமிழன்டா

பழம் நீயப்பா - ஞானப் 
பழம் நீயப்பா - தமிழ் 
ஞானப் பழம் நீயப்பா! 


கண் முன்னே அற்புதம்.

ஒன்பது வகையான அரிய மூலிகை. ஒவ்வொன்றும் ஒரு வகையான  விஷத்தன்மை கொண்டது. முறையாக கட்டி சேர்த்ததில் உருவான நவ பாஷாண சிலை; அது தருவதோ  உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்து. உலக அதிசயங்களில் ஒன்றாகி இருக்கும், சிலையின்  அருமை தெரிந்த மக்களிடம் கிடைத்திருந்தால். நம்மிடம் இருப்பதாலோ என்னவோ, லட்சக்கணக்கான கடவுள் சிலைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது.

இரவில் சிலைக்கு சாற்றப்படும் சந்தனக்காப்பு, சிலையில் கசியும் நீரில் நனைந்து, காலையில் உண்ணக்கூடிய தன்மையில் சந்தனப்பிரசாதமாக வழங்கப்படுகிறது. சிலைக்கு நடத்தப்படும் அபிஷேகங்களும், உடலுக்கு ஊக்கம் தரும் பிரசாத மருந்தாகவே அமைகிறது.

நண்பகல் 12 மணி. 

உச்சிகால பூஜை வேளையில் பழனி முருகன் சன்னிதானத்தில், நிற்கிறேன்.

அடிவாரத்தில் இருந்து யானைப்பாதையில் ஏறிய எனக்கு களைப்போ, வலியோ எதுவும் தோன்றவில்லை. மாறாக, என்னை யாரோ கீழிருந்து, உச்சிவரை தூக்கிக்கொண்டு வந்த மாதிரி ஒரு உற்சாகம். எத்தனையோ முறை மலை ஏறி இருந்தாலும் இது புது அனுபவம் எனக்கு.

படிகளில் ஏறி வரலாம். 

படிகளிலோ, யானைப்பாதையிலோ எற இயலாதவர்கள் வின்ச் எனப்படும் மலை ரயிலிலோ, குடை தூக்கிகளிலோ வரலாம்.

படிக்கட்டில் ஏறும்போது, மொட்டை அடித்து வரும்  பால முருகன்கள், பால வள்ளிகள் செய்யும் குறும்புகள் நம்மை அவர்களுடைய குதூகலத்தில் இணைத்துவிடும்.

மலைக்கோயில் புனரமைப்பு நடப்பதால், வழக்கமான ஆரம்பப்படிகள் அடைக்கப்பட்டு, மலையின் இடதுபுறமிருந்து ஏறும் படிகள் ஆரம்பிக்கிறது.

புனரமைப்பு தொழிலாளர்கள் இந்தியில் பேசிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

தஞ்சை பெரிய கோயிலும் இப்படித்தான் கட்டி இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். பல்லாயிரக்கணக்கான போர்க்கைதிகளால் கட்டப்பட்டது பெருவுடையார் கோயில். உற்றார், உறவினர்களை துறந்து, தோல்வி மனப்பான்மையால் கட்டப்பட்டதாலோ என்னவோ, இன்றளவும் அது ராஜராஜனின் நினைவிடமாகவே அமைந்து விட்டது.

'ஹனுமான் கிதர் ஹை?'

'ஹே பாய். ஹே பாலாஜிக்கா மந்திர்மே.. பழனி சுப்ரமணிக்கா  மந்திர். கணபதிக்கா படா பாய்'

வட நாட்டைப்பொறுத்த மட்டில், முருகன் என்ற கடவுளே அறிமுகம் இல்லாதவர். பிள்ளையாரின் அண்ணனாக அறியப்படும், மணமாகாத  பிரம்மச்சாரி. 

நம்ம மக்களும், கரசேவை செய்ய தங்க செங்கல் எடுத்து சென்று மதராஸிவாலாவாக வரிசையில் நின்று இப்படித்தான் பேசி இருப்பார்கள், ராமனைப்பற்றி. இன்றைக்கும், வட நாட்டினர்க்கு, இராவண வதம்தான் தீபாவளி.

மலைப்பாதை எங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இயற்கை உபாதையை கழிக்குமிடங்கள் என சுத்தமாகவே பராமரிக்கப்பட்டிருந்தது. இது பெரும்பாலான தென்னிந்திய கோயில்களில் இல்லாத வசதி.

தரும தரிசனம், பத்து ருபாய் கட்டணம், நூறு ருபாய் சிறப்பு கட்டணம் என தனித்தனி வரிசைகள். இவ்வளவு மக்கள் கூட்டம் வந்து செல்லும் ஒரு பொது இடத்தை சுத்தமாக பராமரிக்க இதுபோன்ற கட்டமைப்பு  மிகவும் அவசியம் என்றே தோன்றியது.

'கண்ணெ மூடிண்டு நிக்காதீங்கோ. ஆண்டவனை கண்ணார தரிசிச்சு, சேவிச்சுக்கோங்கோ' - அப்படியே ஒவ்வொருவராக வெளியேற்றிக்கொண்டே சொன்னார் பூசாரி.

இந்த அதிசய சிலை போன்று இன்னொன்று இவ்வுலகில் கிடைக்க வாய்ப்பே இல்லை. போகர் சித்தர், செய்த மூன்று சிலைகளில் ஒன்று விஷமாகி அருகில் உள்ள மலைக்கோயிலில் உள்ளது. அதன் பிரசாதத்தை பறவைகள் கூட எடுத்துக்கொள்வதில்லை அதன் விஷத்தன்மையால். மற்றொன்று, பழனி சிலை காலம் முடிந்ததும் தோன்றும் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பழனி தேவஸ்தானமும் அதை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

வெளிப்பிரகாரத்தில் வலப்புறம் இருக்கும் போகரின் ஜீவ சமாதியை தரிசித்துவிட்டு அமரும்போது மணி ஒன்று. 

நீண்ட நாள் ஆசை. குறைந்தது ஒரு மணி நேரமாவது அவர் நினைவில், ஜீவ சமாதி மண்டபத்தில்  அமர வேண்டுமென்று. அது இன்றுதான் சாத்தியமாகியது.

அவர் பூஜித்த மரகத லிங்கம் இன்றளவும் பக்தர்களின் இறை வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மரகத லிங்கத்திற்கு நேர் கீழே போகரின் ஜீவ சமாதியான இடம். அங்கிருந்து, முருகனை பூஜித்து வர குகைப்பாதை  உள்ளதாக கூறுகிறார்கள்.

சரியாக புரிகிறதோ இல்லையோ, போகரின் 7000 பாடல் தொகுப்பை [சப்த காண்டம்] படிக்கும் வழக்கம் எனக்கு. பாட்டின் பொருளுடன் புத்தகம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணினேன்.

போகர் தன் சீனப்பயணத்தின் போது, பெண்களின் உறவால் சக்தியை இழந்திருந்த பொது, காலாங்கி நாதர் என்னும் சித்தர் அவருக்கு மீண்டும் தன்னிலை உணரச்செய்தார்.  போகரின் சீடராக இருந்த புலிப்பாணி சித்தர், போகருக்கு அவர் பெற்றிருந்த  அனைத்து சக்திகளையும் மீண்டும் பெற்றிட  சொல்லித்தந்தார். 

இன்றளவும் புலிப்பாணி சித்தரின் வழித்தோன்றல்கள்தான் போகரின் ஜீவ சமாதியை பராமரித்து வருகிறார்கள். அடிவாரத்தில், புலிப்பாணி சித்தரின்  ஆசிரமமும் இருக்கிறது.

'ஆசிரமத்தில், சப்த காண்டம் புத்தகம் கிடைக்கும். அங்கே கேட்டு பாருங்க' - போகர் சமாதியில் இருந்த அடியவர் கூறினார்.

மனதில் ஒரு திருப்தி.

'புக்ஸ் எல்லாம் தீந்திருச்சு. கீழே அப்புச்சி புக் ஸ்டாலில் கேட்டு பாருங்க. இல்லன்னா, பஸ் ஸ்டாண்டில் ஒரு பழைய புக் ஸ்டால் இருக்கு. அவங்க கிட்ட கிடைக்கும்' - இது ஆசிரமத்தில் கிடைத்த பதில்.

பஸ் ஸ்டாண்டில், தேவஸ்தானத்தின் பஞ்சாமிர்த ஸ்டால் இருக்கு. அங்கே பஞ்சாமிர்தம் வாங்கிக்கலாம். 

திருப்பதிக்கு  லட்டு,  திருநெல்வேலிக்கு  அல்வா மாதிரி பழனிக்கு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், பேரீச்சம்பழம்,நாட்டு சர்க்கரை, ஏலம், நெய் சேர்த்த அமிர்தம். மலை ஏறும் களைப்பிற்கு ஒரு ஸ்பூன் போதும்; களைப்பை போக்கி விடும்.

'சார்.. இங்கே புக் ஸ்டால் எங்கே இருக்கு'

'பாருங்க, அந்த முக்கு கடை'

நான்கைந்து பேரிடம் இதே பதிலைப்பெற்று, பஸ் நுழைவு வாயில் அருகில் இருந்த புக் ஸ்டாலுக்கு போனால்,

'அந்த மாதிரி புக்ஸ் எல்லாம் சென்னையில் மட்டும் கிடைக்கும். நீங்க மதுரையிலும் தேடி பாக்கலாம்'.

போங்கடா நீங்களும், உங்க கடைகளும்.

பழநி.

மனிதன் எண்ணி பார்க்க முடியாத அதிசய சிலை உள்ள அற்புத ஸ்தலம்.

அதை படைத்தவரின் ஒப்புதல் வாக்குமூலமாக அவர் எழுதிய புத்தகம்.

எங்கேயோ, தமிழ் ஆராய்ச்சி நிலையங்களில் செம்மொழி ஆய்வு நடத்தலாம். ஆனால், என்னைப்போன்ற வெகு சாதாரண மக்களுக்கு இது போன்ற புத்தகங்கள்  எட்டாக்கனியானால், முருகன் மாதிரி நாமும் கோபித்துக்கொண்டு மலைமேல் உட்கார்ந்து விடலாம்.

நமக்கு  தோண்டி பார்த்து பெருமை கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, கீழடி மாதிரி. இருப்பதை ஆய்ந்து அதன் பலனை  அனுபவிக்க தெரியாது. ஏனென்றால் நமக்குத்தான்  முன்னோர் தமிழ் தெரியாதே! 

ஆனாலும், தமிழன்டா..

Thursday, January 20, 2022

ஆதியும் நானும்

ஆதியும் நானும் 

மானிடர் ஆன்மா 
மரணம் எய்தாது 
மறுபடி பிறந்திருக்கும் 




"எனக்கு முன்னர் இரண்டு பாதைகள்.

ஒன்று இந்த கலி யுகத்தில் நிலைத்து வாழ்ந்திருப்பது. மற்றது, உடலை நீத்து காற்றில் ஜீவித்திருப்பது.

நான் மண்ணில் பிறப்பெடுத்ததன் கடமை முடிந்து விட்டதென்றெண்ணுகிறேன். நவபாஷாணத்தின் தன்மைகள், நன்மைகளை நான் போற்றி வணங்கும் முழுமுதல் ஆதி சித்தர் முருகப்பெருமானின் திருவுருவாக படைத்தாகிவிட்டது. ஏழு காண்டங்களில் நான் பெற்ற அனுபவத்தின் பலன்களை விளக்கிவிட்டேன்.

இந்த  பழனி மலையிலே, குமரனின் அருகிலே ஜீவசமாதி அடைவதே இப்பிறவியில் நான் பெற்ற பேறு." - போகரின் எண்ண ஓட்டம் இப்படியாக இருந்தது.

போகர் ஏழாயிரம் - 6971 

செல்கவென்றால் எந்தன்முறை பாடுபோலே ஜெகதலத்தில் சிலகாலம் நீரிருந்து 
புல்கவே வையகத்தைத் தான்மறந்து புகழான சமாதிமுகம் ஏவநன்று 
வில்கவே கலியுகத்தில் இருந்துமென்ன விட்டகுறை இருந்தாலும் என்னலாபம்
அல்லலது  நெடுநாளு மிருந்தால்தான் வப்பனே தேகமது மண்ணாய்ப்போமே.

                                                                                                               
"என்னைப்போல் நீங்களும் இந்த பூமியில் வாழ்ந்திருந்து, விரைவாக சமாதி நிலை எய்துவது நல்லது. வெற்றிகளை  ஈட்டினாலும், இன்னும் முடிக்க வேண்டிய கடமைகள் இருந்தாலும், நீண்ட நாட்கள் வாழ்ந்தாலும் அவை துன்பம் தரும் நாட்களாகத்தான் இருக்கும். ஒரு நாள் இந்த உடல் மண்ணாகிப்போகும்." - எனவே உடல் இருக்கும்போதே சமாதி நிலைக்கு செல்லுங்கள் என்று மக்களுக்கு போதிக்கிறார்.

சமாதி என்றால் என்ன?

ஆதியில் நம் உயிர் தோன்றிய நிலைக்கு சமமாக இருப்பது. 
இது எப்படி சாத்தியம்? வழி முறை என்னவென்று திருமூலர் விளக்குகிறார்.

திருமந்திரம்-534

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
                                                                                                   

வாழ்வினை முறையாக வாழ்வதன் மூலம், எட்டு வகை  யோகத்தின் வழிமுறையை நாம் அறியலாம் :

            1. இயமம் 
            2. நியமம் 
            3. ஆசனங்கள் 
            4. பிராணாயாமம் 
            5. பிரத்தியாகாரம் 
            6. தாரணை 
            7. தியானம் 
            8. சமாதி 

மேற்சொன்ன வழிகளில் சமாதி நிலையை அடையலாம்.

இங்கே  இன்றியமையாத இரண்டு விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்று மானிட  உடல். இரண்டாவது சமாதி.

உடலில்லையேல் சமாதி நிலை அடைய முடியாது. அது தேவர்களுக்கும் சாத்தியமில்லாதது. மனிதனல்லாத எந்த உயிரிக்கும்  சாத்தியமில்லாதது சமாதி நிலை.

டல் மட்டுமே மண்ணாகிப்போகும். ஆன்மாவுக்கு   அழிவில்லை.

மானிடர் ஆன்மா 
மரணம் எய்தாது  
மறுபடி பிறந்திருக்கும் 

ஆனால், மறுபிறப்பிலும் மனிதனாய் பிறக்க வேண்டும் என்ற கட்டாயம் அதற்கு இல்லை.

மனிதப்பிறப்பெடுத்துள்ள நாம் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

திருமந்திரம்-132 

பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி 
பெற்றார் உலகில் பிறவாப்  பெரும்பயன் 
பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு 
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
                                                                                       


சமாதி நிலையை அடையப்பெற்றவர்கள், ஆதி நிலையில் இருந்த உயிர் தன்மையை பிரிய மாட்டார்கள். மீண்டும் பிறக்க மாட்டார்கள். இறைவனின் ஆனந்த மன்றத்தில் என்றும் இணைந்திருப்பார்கள். உலக நடப்புகளில் இணைந்திருக்க மாட்டார்கள்.

*** *** ***












Friday, January 7, 2022

ஒளி நினைவுகள்

என் நினைவுகள் 

எல்லாம் ஒளியாக 




 'சார்.. ப்ளீஸ், என்னை விட்ருங்க.. கொல்லாதீங்க..'  - இருபத்தி நான்கு வயது இந்துவின் குரல் கெஞ்சியது.

'சார்.. ப்ளீஸ், என்னை விட்ருங்க.. கொல்லாதீங்க..' - தூக்கத்தில் அலறிக்கொண்டெழுந்தாள் ஒன்பது வயது பிருந்தா.

பக்கத்தில் படுத்திருந்த அம்மாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. 

மறுபடியுமா?

'எத்தனையோ சிகிச்சைகள், மாந்த்ரீகம் செய்தும், மகளின் வேதனை தீரவில்லையே ஆண்டவா.. மகளைக்காப்பாற்று..' என்று  வேண்டுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை அம்மாவிற்கு.

காலையில் முதல் வேலையாக மகளை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்றவளுக்கு, அங்கேயும் ஒரு சோதனை.

சந்தோசமாக கோயில் மணியை அடித்த பிருந்தாவின் பின்மண்டையை இடித்து சென்றது வெண்கல மணி.

மயங்கி விழுந்தவளை, தண்ணீர் தெளித்து எழுப்பியபோதுதான் அந்த அதிர்ச்சிகரமான கேள்வி வந்தது பிருந்தாவிடமிருந்து.

'நீங்கள் யார்? நான் எங்கிருக்கிறேன்?' 

'விளையாடாதே, பிருந்தா.. நான் அம்மா.. நாம் கோயிலுக்கு வந்திருக்கிறோம்'

'இல்லை, நான் பிருந்தா இல்லை. என் பெயர் இந்து'

'உங்களை எல்லாம் நான் பார்த்ததே கிடையாது' - பிருந்தாவின் கண்களில் இருந்த மிரட்சி அவள் பொய் சொல்லவில்லை என்று சொல்லியது.

இரவு நல்ல தூக்கம் இல்லாததால் குழந்தை ஏதோ கனவில் வந்ததை உளறுகிறது, என்றெண்ணியவாறே வீட்டுக்கு அழைத்து வந்தாள்  அம்மா.

முன்பின் பழக்கமற்ற மூன்றாவது மனிதர்களிடம் பழகுவதுபோல் இருந்த பிருந்தா, தன்னுடைய நினைவுகளை சொல்ல ஆரம்பித்தாள், பெற்றோரிடம்.

'என் பெயர் பிருந்தா. எனக்கு இருபத்தி நான்கு வயசு. ரொம்ப அழகாக இருப்பேன். ஹைதராபாதில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன்.' - தொடர்ந்தாள் பிருந்தா.

'மேனேஜர் விக்ரம் சார், எப்பொழுதும் என்னையே சுற்றிக்கொண்டிருப்பார்'

'ஒரு முறை, ஒரு பைலை எடுத்துக்கிட்டு அவருடைய வீட்டுக்கு வர சொன்னார். நானும் கொண்டு போனேன். அங்கேதான், என் கழுத்தை நெரித்து கொன்று விட்டார்' - விக்கி விக்கி அழுதாள் பிருந்தா.

இதற்கு மேலும் பொறுக்காத பெற்றோர்கள், பிருந்தா அடையாளம் காட்டிய, இந்துவின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தை காட்டி, விக்ரமை சட்டத்தின் வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள்.

மேலே சொன்னது கதையல்ல நிஜம், சென்ற வாரம் ஆந்திராவில் நடந்தது. செய்திகளில் பெண்ணின் படத்துடன் பரபரப்புடன் பேசப்பட்டது.

இனி நம் சிந்தனைக்கு..

இந்து கொல்லப்பட்டவுடன், உயிர் அவள் உடலைப் பிரிந்துவிட்டது.

புதைத்த இடத்தை உயிர் பார்த்தது எப்படி? புலன்வழி உணர்வுகள் உடலோடு முடிந்து விட்டதே!

உயிர் காற்றில் கலந்திருக்கும் என்பது நாம் அறிந்த உண்மை. உயிரை சுற்றி ஒளி வடிவில் நினைவிருக்கும் என்பது நம்புவதற்கு கஷ்டமான உண்மை.

என் நினைவுகள்                                                                                                                                                     எல்லாம் ஒளியாக..

                                                                          - கவியரசு கண்ணதாசன்  

எடுத்த  அத்தனை ஜென்மங்களின்  நினைவுகளின்  சேமிப்பு, ஒலியும்  ஒளியுமாக  உள்ள உயிராக,  நம்முடன் தொடர்கிறது.

உளங்கொளி யாவதென் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாநின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி யாயத்து ளாகிநின் றானே.

                                                                                                - திருமந்திரம் 2641

உள்ளத்தின் ஒளியாக உடலின் உள்ளே இருப்பது உயிர். உள்ளம்தானே  நினைவுகளின் சேமிப்பு பெட்டகம்.

உள்ளத்துக்குள்ளே ஓளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுகமில்லை கண்ணா 

                                                                                 - கவியரசு கண்ணதாசன் 





Friday, December 31, 2021

போனால் போகட்டும் போடா







    வந்தது தெரியும் 
    போவது எங்கே 
    வாசல் நமக்கே தெரியாது
                                                         - கவியரசு கண்ணதாசன் 

மனித வாழ்வின் ஆரம்பமாக  உயிர் வந்தது தெரியும். 

உயிரின் ஆதி பிறப்பு தெரியுமா?

யாருக்குமே தெரியாது.

எங்கிருந்தோ  வந்தாய்..  
எங்கேயோ  போய்க்கொண்டே இருக்கிறாய்..   
எங்கே சென்றடைவாய்? 

இதுவும் யாருக்கும் தெரியாது.

எலும்புக்கும், சதைக்கும் மருத்துவம் உண்டு. 
உயிருக்கு மருத்துவம் உண்டா? உயிரின் மகத்துவத்தை பகுத்தறிந்தோர் உண்டோ?

    எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் 
    இதற்கொரு மருந்தைக் கண்டேனா?

உயிரின் அளவை சொல்லும் திருமூலர், அதன் ஆதி பிறப்பையும், பயணிக்கும் தன்மையையும், இறைமைக்கு ஒப்பாக்குவதால், நாம் தள்ளி நின்றே உயிரை கவனிக்க வேண்டியவராகிறோம். 

ஆனால், உயிரின் உள்ளொளியை நம்மால் காண முடியும் என்று அறுதியிட்டு சொல்கிறார்.

காண கிலாதார் கழிந்தோடிப் போவார்கள் 
நாண  கிலாதார் நயம் பேசி விடுவார்கள் 
காண கிலாதார் கழிந்த பொருளெல்லாம் 
காண கிலாதார் கழிகின்ற வாறே.

                                                                    - திருமந்திரம் 761

உயிரின் உள்ளொளியை காணாதவர்களின் உள்ளொளியும் அவரைப்போலவே மறைந்துவிடும். வெட்கம் கெட்டவர்கள் இவர்கள்,  எதற்கும் உதவாத சாத்திரம் பேசி நேரத்தை வீணடிப்பவர்கள்.

உயிரை வளமாக்க,  உடலை  உரமாக்க  சொல்கிறார்.

இருப்பினும், என்புதோல் போர்த்த உடல், உயிருக்கான தற்காலிக புகலிடம் மட்டுமே.

    வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த 
    மண்ணில் நமக்கே இடமேது 

பற்பல யுகங்களாய் தொடரும் உன் உயிர், எத்தனையெத்தனை  பரு உடல் பெற்றிருக்கும்? அத்தனையும் உனக்குள் உறையும் உயிருக்கு தெரியுமல்லவா?

உன்னுடலில் இருக்கும் உயிருக்கு முக்காலமும் தெரியும்; பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் தெரியும்.

உயிரின் கதவை 
தட்டுங்கள் திறக்கப்படும் 
கேளுங்கள் தரப்படும் 

புலன்களின் ஆளுமையில் உள்ள உடலையும், உயிரையும் இணைக்கும் பாலம் உள்ளம். உள்ளத்தில்  புலன்வழி வரும் எண்ணங்களை பதப்படுத்தி, உயிர் வழி செலுத்திப்பாருங்கள்.

அங்கே அற்புதக்காட்சியை காணலாம். ஒலியும், ஒளியுமாக உயிரின் திருநடனம் காணலாம்.

காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங்  கருத்தில் இருந்திடில் 
காணலு மாகுங் கலந்து வழிசெயக் 
காணலு மாகுங்  கருத்துற நில்லே.
                                                                                                   - திருமந்திரம் 1352 

எண்ணங்கள் ஒன்றுபட நின்றிட உயிரின் ஒளியை காண்பதுடன், உயிரின் செயல்கள் மற்றும் நம்மை வழிநடத்தும் தன்மையையும் காணலாம்.

2021 போனால் போகட்டும் போடா..

இனிய ஆங்கில புத்தாண்டு 2022 நல்வாழ்த்துகள்!













 







Wednesday, September 29, 2021

அற்றதொன்றழிவற்றது

அற்றதொன்றழிவற்றது  


பிறக்கு முன்னே இருந்த 
உள்ளம் இன்று வந்ததடா..
இறந்த பின்னே வரும் 
அமைதி வந்து விட்டதடா..






இன்று நாம் இறைநிலை தியானம் செய்வோம்.

அமைதியான இடத்தில வசதியாக அமர்ந்து கண்களை மூடி மனதினை ஒரு நிலைப்படுத்துங்கள்.

பூமியில் நீங்கள் பிறந்த தினத்தை நினைவில் கொண்டு வாருங்கள்.

அங்கிருந்து ஒரு வருடம் பின்னோக்கி காலப்பயணம் செல்லுங்கள். 

பிறக்கு முன்னர் எங்கிருந்தோம்? 

எங்கிருக்கிறீர்கள் இப்பொழுது?

இறந்த பின்னர் எங்கு செல்வோம்?

இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை காண முயல்வோம்  இன்று.

அம்மாவின் வயிற்றில் சேருமுன்னர், நிச்சயம் அந்த ஊரில்தான் நீங்கள் இருந்திருக்க முடியும்.

எப்படி இருந்தீர்கள்?

காற்றில் ஜோதியாக கலந்து, ஒரு காரணப்பொருளாக  இருந்திருக்கிறீர்கள் என்று திருமந்திரம் சொல்கிறது.

திருமந்திரம்-388

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை 
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை 
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே. 
                                                                      
நீரினை ஆதாரமாக கொண்டு இயங்கும் சுவாதிஷ்டான சக்கரத்தில் கலவி  இன்பம் உண்டாகும் வேளையில் உடலில் இறைக்கனலின் ஜோதி உண்டாகும். அந்த ஜோதியில் ஒலி  வடிவான  சிவமும், ஒளி வடிவான சக்தியும் புதிய உயிரினை உண்டாக்கி நீரினைத்  தாங்கி இயங்கும் இந்த பூமியில் பிறக்க வைப்பார்கள்.

ஒரு சந்தேகம்.

காற்றில் கலந்திருந்த உயிர், தந்தையை கடத்தியாக கொண்டு எவ்வாறு ஒரு காரியப்பொருளாக  தாயை சென்றடைந்தது?

இறையருள்,  எங்கெங்கும் வியாபித்திருப்பதோடல்லாமல், உயிருடன் இருக்கும் மனிதனை எப்பொழுதும் சூழ்ந்திருக்கும்.  பெற்றோரின் புலனுணர்வுகள்  ஐக்கியமாகும்  தருணத்தில், அகவிழிப்பு நிலையும், புறவிழிப்பு நிலையும் ஒன்றிய நிலையில்  உயிர்களின் பரிமாற்றம் வாயு நிலையில் நடைபெறுகிறது.

இப்படியாக பிறந்த நாம்,  உடலை ஆதாரமாக கொண்டு இந்த மண்ணில் உயிர் வாழ்கிறோம்.

இறக்கும்போது, இந்த உயிர் எப்படி பிரிகிறது? அது எங்கே செல்கிறது? 

திருமந்திரம்-134

புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல் 
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும் 
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு  ஒழிந்தால் 
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
                                                                          
புரை விடப்படாத பாலில் உள்ள நெய்போல் உடலில் இருப்பது  உயிர் என்பதை உணரக்கூடிய ஞானிகளின் உடம்பை நீங்கி செல்லும் உயிர், வாயுவாகி பரம்பொருளின் ஜோதியில் கலந்து விடும்.

ஜோதியில் உதித்த உயிர் ஜோதியில் கலந்து விடுகிறது.

அப்ப.. நாமெல்லாம்?

புளிய மரமோ, முருங்கை மரமோ தலை கீழாக தொங்க வேண்டியதுதான், அடுத்த பிறப்பு வரை.

அப்புறம்.. 

அப்புறமென்ன.. இதே சங்கிலித்தொடர்தான்,  நம்முடலிலும் பரமன், உயிராக உள்ளான் என்ற ஞானம் வரும்வரை.

அது சரி, அதென்ன தலைப்பு, அற்றதொன்றழிவற்றது?

இல்லாத ஒன்றை அழிக்க முடியாது.

அழிவற்ற ஒன்று  இறைநிலை. 

இறைநிலை என்று ஒன்று  இல்லை என்று சொல்பவர்களுக்கு, இல்லாத ஒன்றுதான், ஆனால் அழிக்க முடியாத ஒன்று  என்று சொல்லலாம்.  

+++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++













Monday, August 9, 2021

காற்றின் காதல்

யாரும் வாழப்பாடும் காற்றும்                                                                                         நானும் ஒன்றுதானே                                                                                                              இன்ப நாளும் இன்று தானே 


புயலாக  நானிருந்தேன்.                                                                                                      கடலாக அவளிருந்தாள்.                                                                                                              காதலை சொன்னேன்,                                                                                                        சுனாமியாக மறுதலித்தாள்.

நினைவுக்கனல் ஏற்றி, 
தென்றலாக மாறிநின்றேன். 
எனக்குள் சங்கமித்தாள்,
சாரலாக குளிர்வித்தாள்.

காற்றினை நீர் ஏற்காது. காற்றினுள் நீர் கரைந்து  நிற்கும். 

எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றை தண்ணீருக்குள் செலுத்தி நிறுத்திவிட   முடியாது. ஆனால், தண்ணீரைவிட மிக மெலிதாக வெப்பம் கூடுதலாக  தென்றல் இருக்கையில், தண்ணீரை உறிஞ்சி எடுத்து தன்னுள் வைத்துக்கொள்ளும்.

நீர்.. நெருப்பு.. காற்று.

மனித உடலிலும் இந்த  முக்கிய மூன்று அம்சங்கள்  பொதிந்திருக்கிறது.

காற்றடைத்த பை நம்  உடல். உடல் முழுதும் சென்றுவர அதற்கு எழுபத்திரண்டாயிரம் பாதைகள். 

இந்த பாதைகளில் ஏற்படும் அடைப்புகள், தடைகளே உடலின் ஆரோக்கிய கேட்டிற்கு முதல் காரணி ஆகிறது. 

    வாயுப்பிடிப்பு என்று சாதாரணமாக சொல்லி கடந்து செல்கிறோம்.

காற்று புக முடியாத பாதைகளிலும் நீர் புகுந்து விடுகிறது.

    நீர் கோர்த்துக்கொண்டது என்று இன்னொரு காரணமும் சொல்லிக்கொள்கிறோம்.

காற்றும், நீரும் ஏற்றுக்கொள்ளாத பொழுது, வெப்பம் தோன்றிய இடத்திலே  குவிய ஆரம்பிக்கிறது.

    கட்டிகளாகவும், கொப்பளங்களாகவும் தோலில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

உடலின் பாதைகள் அடைபட்டு, உபாதைகள் ஏற்படுவதை தடுக்க சித்தர்கள் பல எளிய வழி முறைகளை சொல்லி சென்றுள்ளார்கள். ஆனால், அவைகள் பாட்டு வடிவில் இருப்பதால், நிகழ் கால மக்களுக்கு அதன் பொருள் புரியாமல் அவ்வரிய வழிகாட்டுதலை தவிர்த்து வருகிறோம். வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லாமல் அவர்களுக்கு பெருந்தீங்கு இழைக்கிறோம்.

திருமூலர், நாம் அனிச்சையாக விடும் மூச்சுக்காற்றை, பயிற்சியாக  இடது மூக்கில் உள்  இழுத்து, சற்று உள்  நிறுத்தி, வலது மூக்கு வழியாக விடவும், இதனையே மாற்றி மாற்றி செய்ய சொல்கிறார்.

வாமத்தால் ஈரெட்டு மாத்திரை பூரித்தே 
ஏமுற்ற முப்பத் திரண்டும்  இரேசித்துக் 
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு 
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

                                                                                                       - திருமந்திரம் 573

[பதினாறு மாத்திரை அளவு உள்ளிழுத்தல் - பூரகம். அறுபத்திநான்கு மாத்திரை உள்நிறுத்தல் - கும்பகம். முப்பத்திரண்டு மாத்திரை வெளிவிடுதல் - இரேசகம்] 

இப்படி மூச்சுப்பயிற்சி செய்வதால்  என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பூரகம்
உள்ளிழுக்கும் காற்றில் நம் உடல், உயிர் இரண்டிற்கும் அத்தியாவசியத் தேவையான பிராண வாயு இருக்கிறது. 

கும்பகம் 
1. சுவாசித்த காற்றை உள் நிறுத்தும்போது, அந்த வாயு முதலில் உடலின் வெப்பத்தை ஏற்று சூடாகிறது. 

2. இந்த சூடான காற்று, அடைபட்ட பாதைகளில் உள்ள நீரினை தன்னில் கிரகித்துக்கொள்கிறது. 

3. காற்று அடைபட்ட பாதையை தகர்த்துக்கொண்டு உட்செல்கிறது. 

இரேசகம் 
வெளியேறும் காற்றில், உடலின் அதிகப்படியான வெப்பமும், ஈரமும் வெளியேறி விடுகிறது.
 
இதனையே பிராணாயாமம் என்றும் நாம் அறிகிறோம்.

உபாதைகள் பாதைகளாக மாறும்போது உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் 
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதில் ரேசகம் 
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.

                                                                                          - திருமந்திரம் 568  


எச்சரிக்கை: 
நன்கு தேர்ந்த ஆசிரியர்களிடம், முறையாக கற்க வேண்டிய பயிற்சி மூச்சுப்பயிற்சி. எதிர்மறை விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, நாமே முறையற்று செய்யும்போது.





 

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...