மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும்
"எனக்கு முன்னர் இரண்டு பாதைகள்.
ஒன்று இந்த கலி யுகத்தில் நிலைத்து வாழ்ந்திருப்பது. மற்றது, உடலை நீத்து காற்றில் ஜீவித்திருப்பது.
நான் மண்ணில் பிறப்பெடுத்ததன் கடமை முடிந்து விட்டதென்றெண்ணுகிறேன். நவபாஷாணத்தின் தன்மைகள், நன்மைகளை நான் போற்றி வணங்கும் முழுமுதல் ஆதி சித்தர் முருகப்பெருமானின் திருவுருவாக படைத்தாகிவிட்டது. ஏழு காண்டங்களில் நான் பெற்ற அனுபவத்தின் பலன்களை விளக்கிவிட்டேன்.
இந்த பழனி மலையிலே, குமரனின் அருகிலே ஜீவசமாதி அடைவதே இப்பிறவியில் நான் பெற்ற பேறு." - போகரின் எண்ண ஓட்டம் இப்படியாக இருந்தது.
"என்னைப்போல் நீங்களும் இந்த பூமியில் வாழ்ந்திருந்து, விரைவாக சமாதி நிலை எய்துவது நல்லது. வெற்றிகளை ஈட்டினாலும், இன்னும் முடிக்க வேண்டிய கடமைகள் இருந்தாலும், நீண்ட நாட்கள் வாழ்ந்தாலும் அவை துன்பம் தரும் நாட்களாகத்தான் இருக்கும். ஒரு நாள் இந்த உடல் மண்ணாகிப்போகும்." - எனவே உடல் இருக்கும்போதே சமாதி நிலைக்கு செல்லுங்கள் என்று மக்களுக்கு போதிக்கிறார்.
சமாதி என்றால் என்ன?
ஆதியில் நம் உயிர் தோன்றிய நிலைக்கு சமமாக இருப்பது.
இது எப்படி சாத்தியம்? வழி முறை என்னவென்று திருமூலர் விளக்குகிறார்.
வாழ்வினை முறையாக வாழ்வதன் மூலம், எட்டு வகை யோகத்தின் வழிமுறையை நாம் அறியலாம் :
1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி
மேற்சொன்ன வழிகளில் சமாதி நிலையை அடையலாம்.
இங்கே இன்றியமையாத இரண்டு விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒன்று மானிட உடல். இரண்டாவது சமாதி.
உடலில்லையேல் சமாதி நிலை அடைய முடியாது. அது தேவர்களுக்கும் சாத்தியமில்லாதது. மனிதனல்லாத எந்த உயிரிக்கும் சாத்தியமில்லாதது சமாதி நிலை.
உடல் மட்டுமே மண்ணாகிப்போகும். ஆன்மாவுக்கு அழிவில்லை.
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும்
ஆனால், மறுபிறப்பிலும் மனிதனாய் பிறக்க வேண்டும் என்ற கட்டாயம் அதற்கு இல்லை.
மனிதப்பிறப்பெடுத்துள்ள நாம் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருமந்திரம்-132
பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகில் பிறவாப் பெரும்பயன் பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
சமாதி நிலையை அடையப்பெற்றவர்கள், ஆதி நிலையில் இருந்த உயிர் தன்மையை பிரிய மாட்டார்கள். மீண்டும் பிறக்க மாட்டார்கள். இறைவனின் ஆனந்த மன்றத்தில் என்றும் இணைந்திருப்பார்கள். உலக நடப்புகளில் இணைந்திருக்க மாட்டார்கள்.
'சார்.. ப்ளீஸ், என்னை விட்ருங்க.. கொல்லாதீங்க..' - இருபத்தி நான்கு வயது இந்துவின் குரல் கெஞ்சியது.
'சார்.. ப்ளீஸ், என்னை விட்ருங்க.. கொல்லாதீங்க..' - தூக்கத்தில் அலறிக்கொண்டெழுந்தாள் ஒன்பது வயது பிருந்தா.
பக்கத்தில் படுத்திருந்த அம்மாவுக்கு தூக்கிவாரிப்போட்டது.
மறுபடியுமா?
'எத்தனையோ சிகிச்சைகள், மாந்த்ரீகம் செய்தும், மகளின் வேதனை தீரவில்லையே ஆண்டவா.. மகளைக்காப்பாற்று..' என்று வேண்டுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை அம்மாவிற்கு.
காலையில் முதல் வேலையாக மகளை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்றவளுக்கு, அங்கேயும் ஒரு சோதனை.
சந்தோசமாக கோயில் மணியை அடித்த பிருந்தாவின் பின்மண்டையை இடித்து சென்றது வெண்கல மணி.
மயங்கி விழுந்தவளை, தண்ணீர் தெளித்து எழுப்பியபோதுதான் அந்த அதிர்ச்சிகரமான கேள்வி வந்தது பிருந்தாவிடமிருந்து.
'நீங்கள் யார்? நான் எங்கிருக்கிறேன்?'
'விளையாடாதே, பிருந்தா.. நான் அம்மா.. நாம் கோயிலுக்கு வந்திருக்கிறோம்'
'இல்லை, நான் பிருந்தா இல்லை. என் பெயர் இந்து'
'உங்களை எல்லாம் நான் பார்த்ததே கிடையாது' - பிருந்தாவின் கண்களில் இருந்த மிரட்சி அவள் பொய் சொல்லவில்லை என்று சொல்லியது.
இரவு நல்ல தூக்கம் இல்லாததால் குழந்தை ஏதோ கனவில் வந்ததை உளறுகிறது, என்றெண்ணியவாறே வீட்டுக்கு அழைத்து வந்தாள் அம்மா.
முன்பின் பழக்கமற்ற மூன்றாவது மனிதர்களிடம் பழகுவதுபோல் இருந்த பிருந்தா, தன்னுடைய நினைவுகளை சொல்ல ஆரம்பித்தாள், பெற்றோரிடம்.
'என் பெயர் பிருந்தா. எனக்கு இருபத்தி நான்கு வயசு. ரொம்ப அழகாக இருப்பேன். ஹைதராபாதில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன்.' - தொடர்ந்தாள் பிருந்தா.
'மேனேஜர் விக்ரம் சார், எப்பொழுதும் என்னையே சுற்றிக்கொண்டிருப்பார்'
'ஒரு முறை, ஒரு பைலை எடுத்துக்கிட்டு அவருடைய வீட்டுக்கு வர சொன்னார். நானும் கொண்டு போனேன். அங்கேதான், என் கழுத்தை நெரித்து கொன்று விட்டார்' - விக்கி விக்கி அழுதாள் பிருந்தா.
இதற்கு மேலும் பொறுக்காத பெற்றோர்கள், பிருந்தா அடையாளம் காட்டிய, இந்துவின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தை காட்டி, விக்ரமை சட்டத்தின் வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள்.
மேலே சொன்னது கதையல்ல நிஜம், சென்ற வாரம் ஆந்திராவில் நடந்தது. செய்திகளில் பெண்ணின் படத்துடன் பரபரப்புடன் பேசப்பட்டது.
இனி நம் சிந்தனைக்கு..
இந்து கொல்லப்பட்டவுடன், உயிர் அவள் உடலைப் பிரிந்துவிட்டது.
புதைத்த இடத்தை உயிர் பார்த்தது எப்படி? புலன்வழி உணர்வுகள் உடலோடு முடிந்து விட்டதே!
உயிர் காற்றில் கலந்திருக்கும் என்பது நாம் அறிந்த உண்மை. உயிரை சுற்றி ஒளி வடிவில் நினைவிருக்கும் என்பது நம்புவதற்கு கஷ்டமான உண்மை.
என் நினைவுகள் எல்லாம் ஒளியாக..
- கவியரசு கண்ணதாசன்
எடுத்த அத்தனை ஜென்மங்களின் நினைவுகளின் சேமிப்பு, ஒலியும் ஒளியுமாக உள்ள உயிராக, நம்முடன் தொடர்கிறது.
உயிருக்கு மருத்துவம் உண்டா? உயிரின் மகத்துவத்தை பகுத்தறிந்தோர் உண்டோ?
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
உயிரின் அளவை சொல்லும் திருமூலர், அதன் ஆதி பிறப்பையும், பயணிக்கும் தன்மையையும், இறைமைக்கு ஒப்பாக்குவதால், நாம் தள்ளி நின்றே உயிரை கவனிக்க வேண்டியவராகிறோம்.
ஆனால், உயிரின் உள்ளொளியை நம்மால் காண முடியும் என்று அறுதியிட்டு சொல்கிறார்.
காண கிலாதார் கழிந்தோடிப் போவார்கள்
நாண கிலாதார் நயம் பேசி விடுவார்கள்
காண கிலாதார் கழிந்த பொருளெல்லாம்
காண கிலாதார் கழிகின்ற வாறே.
- திருமந்திரம் 761
உயிரின் உள்ளொளியை காணாதவர்களின் உள்ளொளியும் அவரைப்போலவே மறைந்துவிடும். வெட்கம் கெட்டவர்கள் இவர்கள், எதற்கும் உதவாத சாத்திரம் பேசி நேரத்தை வீணடிப்பவர்கள்.
உயிரை வளமாக்க, உடலை உரமாக்க சொல்கிறார்.
இருப்பினும், என்புதோல் போர்த்த உடல், உயிருக்கான தற்காலிக புகலிடம் மட்டுமே.
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது
பற்பல யுகங்களாய் தொடரும் உன் உயிர், எத்தனையெத்தனை பரு உடல் பெற்றிருக்கும்? அத்தனையும் உனக்குள் உறையும் உயிருக்கு தெரியுமல்லவா?
உன்னுடலில் இருக்கும் உயிருக்கு முக்காலமும் தெரியும்; பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் தெரியும்.
உயிரின் கதவை
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் தரப்படும்
புலன்களின் ஆளுமையில் உள்ள உடலையும், உயிரையும் இணைக்கும் பாலம் உள்ளம். உள்ளத்தில் புலன்வழி வரும் எண்ணங்களை பதப்படுத்தி, உயிர் வழி செலுத்திப்பாருங்கள்.
அங்கே அற்புதக்காட்சியை காணலாம். ஒலியும், ஒளியுமாக உயிரின் திருநடனம் காணலாம்.
காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்தில் இருந்திடில்
காணலு மாகுங் கலந்து வழிசெயக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.
- திருமந்திரம் 1352
எண்ணங்கள் ஒன்றுபட நின்றிட உயிரின் ஒளியை காண்பதுடன், உயிரின் செயல்கள் மற்றும் நம்மை வழிநடத்தும் தன்மையையும் காணலாம்.
அமைதியான இடத்தில வசதியாக அமர்ந்து கண்களை மூடி மனதினை ஒரு நிலைப்படுத்துங்கள்.
பூமியில் நீங்கள் பிறந்த தினத்தை நினைவில் கொண்டு வாருங்கள்.
அங்கிருந்து ஒரு வருடம் பின்னோக்கி காலப்பயணம் செல்லுங்கள்.
பிறக்கு முன்னர் எங்கிருந்தோம்?
எங்கிருக்கிறீர்கள் இப்பொழுது?
இறந்த பின்னர் எங்கு செல்வோம்?
இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை காண முயல்வோம் இன்று.
அம்மாவின் வயிற்றில் சேருமுன்னர், நிச்சயம் அந்த ஊரில்தான் நீங்கள் இருந்திருக்க முடியும்.
எப்படி இருந்தீர்கள்?
காற்றில் ஜோதியாக கலந்து, ஒரு காரணப்பொருளாக இருந்திருக்கிறீர்கள் என்று திருமந்திரம் சொல்கிறது.
திருமந்திரம்-388
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே.
நீரினை ஆதாரமாக கொண்டு இயங்கும் சுவாதிஷ்டான சக்கரத்தில் கலவி இன்பம் உண்டாகும் வேளையில் உடலில் இறைக்கனலின் ஜோதி உண்டாகும். அந்த ஜோதியில் ஒலி வடிவான சிவமும், ஒளி வடிவான சக்தியும் புதிய உயிரினை உண்டாக்கி நீரினைத் தாங்கி இயங்கும் இந்த பூமியில் பிறக்க வைப்பார்கள்.
ஒரு சந்தேகம்.
காற்றில் கலந்திருந்த உயிர், தந்தையை கடத்தியாக கொண்டு எவ்வாறு ஒரு காரியப்பொருளாக தாயை சென்றடைந்தது?
இறையருள், எங்கெங்கும் வியாபித்திருப்பதோடல்லாமல், உயிருடன் இருக்கும் மனிதனை எப்பொழுதும் சூழ்ந்திருக்கும். பெற்றோரின் புலனுணர்வுகள் ஐக்கியமாகும் தருணத்தில், அகவிழிப்பு நிலையும், புறவிழிப்பு நிலையும் ஒன்றிய நிலையில் உயிர்களின் பரிமாற்றம் வாயு நிலையில் நடைபெறுகிறது.
இப்படியாக பிறந்த நாம், உடலை ஆதாரமாக கொண்டு இந்த மண்ணில் உயிர் வாழ்கிறோம்.
இறக்கும்போது, இந்த உயிர் எப்படி பிரிகிறது? அது எங்கே செல்கிறது?
திருமந்திரம்-134
புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
புரை விடப்படாத பாலில் உள்ள நெய்போல் உடலில் இருப்பது உயிர் என்பதை உணரக்கூடிய ஞானிகளின் உடம்பை நீங்கி செல்லும் உயிர், வாயுவாகி பரம்பொருளின் ஜோதியில் கலந்து விடும்.
ஜோதியில் உதித்த உயிர் ஜோதியில் கலந்து விடுகிறது.
அப்ப.. நாமெல்லாம்?
புளிய மரமோ, முருங்கை மரமோ தலை கீழாக தொங்க வேண்டியதுதான், அடுத்த பிறப்பு வரை.
அப்புறம்..
அப்புறமென்ன.. இதே சங்கிலித்தொடர்தான், நம்முடலிலும் பரமன், உயிராக உள்ளான் என்ற ஞானம் வரும்வரை.
அது சரி, அதென்ன தலைப்பு, அற்றதொன்றழிவற்றது?
இல்லாத ஒன்றை அழிக்க முடியாது.
அழிவற்ற ஒன்று இறைநிலை.
இறைநிலை என்று ஒன்று இல்லை என்று சொல்பவர்களுக்கு, இல்லாத ஒன்றுதான், ஆனால் அழிக்க முடியாத ஒன்று என்று சொல்லலாம்.
காற்றினை நீர் ஏற்காது. காற்றினுள் நீர் கரைந்து நிற்கும்.
எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றை தண்ணீருக்குள் செலுத்தி நிறுத்திவிட முடியாது. ஆனால், தண்ணீரைவிட மிக மெலிதாக வெப்பம் கூடுதலாக தென்றல் இருக்கையில், தண்ணீரை உறிஞ்சி எடுத்து தன்னுள் வைத்துக்கொள்ளும்.
நீர்.. நெருப்பு.. காற்று.
மனித உடலிலும் இந்த முக்கிய மூன்று அம்சங்கள் பொதிந்திருக்கிறது.
காற்றடைத்த பை நம் உடல். உடல் முழுதும் சென்றுவர அதற்கு எழுபத்திரண்டாயிரம் பாதைகள்.
இந்த பாதைகளில் ஏற்படும் அடைப்புகள், தடைகளே உடலின் ஆரோக்கிய கேட்டிற்கு முதல் காரணி ஆகிறது.
வாயுப்பிடிப்பு என்று சாதாரணமாக சொல்லி கடந்து செல்கிறோம்.
காற்று புக முடியாத பாதைகளிலும் நீர் புகுந்து விடுகிறது.
நீர் கோர்த்துக்கொண்டது என்று இன்னொரு காரணமும் சொல்லிக்கொள்கிறோம்.
காற்றும், நீரும் ஏற்றுக்கொள்ளாத பொழுது, வெப்பம் தோன்றிய இடத்திலே குவிய ஆரம்பிக்கிறது.
கட்டிகளாகவும், கொப்பளங்களாகவும் தோலில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.
உடலின் பாதைகள் அடைபட்டு, உபாதைகள் ஏற்படுவதை தடுக்க சித்தர்கள் பல எளிய வழி முறைகளை சொல்லி சென்றுள்ளார்கள். ஆனால், அவைகள் பாட்டு வடிவில் இருப்பதால், நிகழ் கால மக்களுக்கு அதன் பொருள் புரியாமல் அவ்வரிய வழிகாட்டுதலை தவிர்த்து வருகிறோம். வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லாமல் அவர்களுக்கு பெருந்தீங்கு இழைக்கிறோம்.
திருமூலர், நாம் அனிச்சையாக விடும் மூச்சுக்காற்றை, பயிற்சியாக இடது மூக்கில் உள் இழுத்து, சற்று உள் நிறுத்தி, வலது மூக்கு வழியாக விடவும், இதனையே மாற்றி மாற்றி செய்ய சொல்கிறார்.
இரு மனம் நிறைந்த காதலில், மணவினை ஏற்ற தலைவி, முதலிரவு முடிந்து, அதிகாலையில் பாடும் பாடலாக திரையில் வருகிறது.
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
இளகும் மாலைப்பொழுதில் தலைவனிடம் அடைக்கலம் பெற்ற தலைவியின் தன்னுணர்வு நிலை விளக்கப்பாடல் இது.
தலைவி அடைக்கலத்தின் உணர்வு நிகழ்வில் ஆலய மணியின் ஓசையை கேட்டதாக பாடுவதாக அமைந்திருக்கிறது. .
அருந்தவ யோகிகளுக்கு தியான நிலையில் கிடைக்கக்கூடிய பேருணர்வின் ஓசை நிலை இது.
குண்டலினி என சொல்லப்படும் உயிர் நிலையில் இருந்து எழும் கீதம் அது.
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட.. ..
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!
சிவ குகனான முருகன், பன்னிரண்டு கால்களில் சலங்கை மணி சத்தத்துடன், குண்டலினியினின் நடுவில் நின்று நடனமிடும் இடம் அது.
உன் இறைவன் அவனே அவனே எனப்பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே என்னும் தாயின் மொழி கேட்டேன்
மணவினை ஏற்ற தலைவி, சங்கம வேளையில், இறைவனையும் தன் தலைவனையும் ஒரு சேர காண்கிறாள்.
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்துஎழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்கஒண் ணாதே.
- திருமந்திரம் 606
மணி ஓசையுடன் பல்வேறு இசைதனை தியானத்தில் கண்டும் , கேட்டும் உணரலாம்.
ஆலயத்தின் மணி ஓசை மற்றும் இறைவனுக்கு தீப ஆராதனை காட்டும்போது எழும் மணி ஓசை, குண்டலினியில் எழும் ஓசையின் மறுபதிப்பாக மனிதர்கள் உணர்ந்து கொள்ளவே!
சிந்திக்கும் திறன் பெற்ற மனிதனின் உடல், தன்னில் இருக்கும் உயிர் இவை இரண்டும் தன்னுள் இறைவன் இருப்பதை அறிவதில்லை. இறைவனை அறிந்த உணர்வு நிலை பெற்ற மனிதன் இறை நிலைக்கே சென்று விடுகிறான்.
அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவனாமே.
- திருமந்திரம் 1789
மணவினை ஏற்ற தலைவி, தன் உடல் [அவன்-1], உயிரினை [அவன்-2] தாண்டி அங்கு உறையும் இறைவனையும் [அவன்-3]காண்கிறாள்.
தமிழா? தமிழை அறிந்ததால் வந்த சிறப்பா?
ஆன்மீகம் தந்த பெரும் பரிசாக திருமூலர் நமக்கு வழங்கி சென்றுள்ளதை நாம் அனைவரும் படித்துணர்ந்து பயனுறுவோம்.
கவியரசர் கண்ணதாசன் இயற்ற, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மெட்டமைக்க, இசைக்குயில் பி.சுசீலா குரலில், நவரச இயக்குனர் ஸ்ரீதர் இயக்க, கல்யாண்குமார் மற்றும் தேவிகா நடிப்பில் உருவான காவியப்பாடல் இது.
தமிழ்த்திரையிசை பாடல்களில் மிகவும் அபூர்வமான பாடல் 'நெஞ்சம் மறப்பதில்லை' எனும் பாடல்.
தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
பாடலில் வரும் இந்த வரிகளில் என்ன சொல்ல வருகிறார் கவியரசர்.
நெஞ்சம் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது?
இதயம் இருக்கும் இடத்தை நெஞ்சம் என்று கூறுகிறோம். இதனையே ஆறாதார சக்கரங்களில், அநாகத சக்கரம் உள்ள இடமாக சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இந்த நெஞ்சம் பன்னிரண்டிதழ்கள் கொண்ட தாமரை மலர் என்றும் வர்ணிக்கிறார்கள்.
இதனையே திருமூலர்,
ஆயும் மலரின் அணிமலர் மேலது ஆய இதழும் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்தம் ஆகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே.
- திருமந்திரம் 1711
எதையும் ஆராய்ந்தறியும் இயல்புடையது மனம் - இதயத்தாமரை.
நெஞ்சத்தின் தன்மைகளை அகத்தியர் கூறுவதை கேளுங்கள்.
கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே. - அகத்தியரின் சௌமிய சாகரம் 32 உயிரோடு கலந்த சக்தி, மாயை நிலையில் இயங்கும் உடல், உணர்வுதனை மனதுக்கு வழங்குகிறது. மனதிற்கு என்று தனிப்பட்ட எந்த கோளும் அதாவது புலனுறுப்பும் இல்லை. ஆயினும், 1. மனம் 2. புத்தி/அறிவு 3. ஆங்காரம் 4. சித்தி என்ற நான்கு படிகளில் மனித உணர்வுகளை வழி நடத்துகிறது.
இந்த நான்கு தன்மைகளில் உள்ள தாமரை மலர் நெஞ்சத்தில், மனதினை மட்டும் தனியாக எடுத்து, உன் நினைவுக்காகவே வைத்திருக்கிறேன்.