Friday, October 23, 2020

பூ விலை

பூ விலை   

சின்ன குடை போல் விரியும் இமையும் 
விழியும் பார்த்தால் ஆசை விளையும்  




'இந்து சனாதன தர்மத்தில் பெண்கள் அனைவருமே பூ விலை மகளிர் '

எழுதவே கூசும் வார்த்தைகளை, எப்படி இவர்களால் மேடைகளில் பேசி கைதட்டல் வாங்க முடிகிறது? - இப்படி ஒரு கூட்டம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது, தன்னைப் பெற்றவளும் பெண் என்பதை மறந்து.

எங்கோ பேசியதை, எதிர்க்கூட்டம் கட்டம் கட்டி எடுத்து தூபம் போட்டு மக்களிடையே பரப்புரை செய்து வன்மத்தை தூண்டுகிறது.

23-10-2020 இன்றைய சூடான தமிழக நிகழ்வு இது.

இரண்டு கூட்டமுமே ஒன்றை மறந்துவிட்டு இதனை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறது.

பரமஹம்சர் சிவானந்த ஸ்வாமிகளின் சித்த வேதம் என்ற புத்தகத்தில் சொல்வார்கள், 'ஒருவன் வடை, பாயசத்தோடு உண்ட இலையை வைத்து மற்றவர் அதன் சுவையை சொல்வது போல்தான்' நாம் படிக்கும் ஆன்மீக புத்தகங்கள்.

சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டு  உள்ளதாலேயே, அந்த கருத்துகள், நிகழ் காலத்திற்கு ஏற்றதாகவும், தகுதி அற்றதாகவும் ஆகி விடாது.

உணவில் கல் இருந்தால் விலக்கி விட்டு உண்பது போல, நாம் நல்லதை மட்டும் நம் சிந்தனைக்கேற்ப  எடுத்துக்கொண்டு மற்றதை விலக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். 

பெண்மை என்பது மாபெரும் சக்தி. 

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் உறையும் சக்தியே, நம் உடலில் ஒவ்வொரு சிற்றறைக்குள்ளும் உறைகின்றது. அந்த சக்தியை உணர்ந்து, உய்யும் வழியை மானிடம் அடையும் வழித்துணை அவர்கள் என்று  திருமூலர் போன்ற தீர்க்கதரிசிகள் காட்டி சென்றுள்ளார்கள்.

உலகத்து உயிர்களை எல்லாம் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த ஆதி பராசக்தி உமையவள் என்னுள்ளும் கோவில் கொண்டுள்ளாள். பஞ்ச பூதங்களான நிலம், 
நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் உறையும் அதே சக்தி என்னுள்ளும் என் கண்களுக்குள்ளும்  குடிகொண்டிருக்கிறாள்.

தன்னுளு மாகித் தரணி  முழுதுங்கோண்(டு)
என்னுளு மாகி இடம்பெற நின்றவள் 
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வான்உளும்
கண்ணுளும் மெய்யுளுங் காணலும் ஆமே. 

                                                                                               - திருமந்திரம் 1354

கண்ணுக்குள்ளே வா வா.. நெஞ்சுக்குள்ளே போ போ..  என் ஜீவனே!



Saturday, October 17, 2020

அர்த்தநாரி

அர்த்தநாரி 

பார்த்த இடத்திலெல்லாம் 
உன்னைப்போல் பாவை 
தெரியுதடி 


 

'அர்த்தநாரி அல்லது மாதொருபாகன் என்றால்தான் என்ன?'

'ஹரத என்றால் பாதி. நாரி என்றால் பெண். இறைவன் பாதிப்பெண்ணானால் அர்த்தநாரி. மாதினை உடலின் ஒரு பாகமாக கொண்டால் மாதொருபாகன்.

'ஆண் பாதி, பெண் பாதியாக உள்ள  ஓருடலாய் இறைவனை உருவகப்படுத்துவது  சரியா?'

'எதனை எடுத்துரைக்க இந்த அவதாரம்?'

நம்முடைய உடலினை, அதன் ஆரம்பத்திலிருந்து பார்ப்போம்.

மனித உடலின் ஆதிக்கு செல்வோம். அங்கே ஆதியாய் ஆரம்பித்தது ஒரு செல், அதாவது ஒரு சிற்றறை. அந்த சிற்றறைக்குள் என்ன இருந்தது என்று பார்ப்போம், இப்போது.

ஓர்எழுத் தாலே உலகெங்கும் தானாகி 
ஈர்எழுத் தாலே இசைந்துஅங்கு  இருவராய் 
'மூ'எழுத் தாலே முளைக்கின்ற சோதியை 
மாஎழுத் தாலே மயக்கமே உற்றதே.

                                                                                     - திருமந்திரம் 885

ஓர் எழுத்து என்பது  'அ'காரம்.  சிவன் அகாரத்தால் உலகமுழுதும் [சிற்றறை] தானாகி, 'உ'காரத்தால்  உடம்பினுள் [சிற்றறைக்குள்] கலந்து,  மூவெழுத்தாகிய 'ம'காரத்தால் சக்தியுடன் [சிற்றறைக்கு சக்தி] இணைந்து, ஒளிப்பிழம்பாகவும், நாத மயமாகவும் விளங்குகிறான்.

அகாரம்  + உகாரம்  + மகாரம்   = ஓம் 

பிரணவ மந்திரம், 'ஓம்', நம் உடலில் பிரபஞ்ச நாதம்  ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அர்த்தநாரி அல்லது மாதொருபாகன்.

முதல் சிற்றறை தொடங்கி, அதன் அம்சமாக  கோடி கோடியான சிற்றறைகளாக, நம் உடல் இப்போது.

'பார்க்கும் இடமெல்லாம் பாவை தெரிவது இதனால்தான்'

அறிவியலும் இந்த சிற்றறை சித்தாந்தத்தில் அடங்கி போவதையும் பார்ப்போம்:

ஒரு காலத்தில், இதற்குமேல் பிரிக்க முடியாத சிறிய பகுதியாக அறியப்பட்டது அணுத்துகள். அதனை, பிரித்து பார்த்தபோது கிடைத்தது, மூன்று பொருள்கள்.

1. நியூட்ரான் 2. புரோட்டான் 3. எலக்ட்ரான் 

நியூட்ரானும், புரோட்டானும் கரு மையமாக நின்றிருக்க, எலெக்ட்ரான் கரு மையத்தை சுற்றிவரும். 

புரோட்டானில் உள்ள நேர்மறை சக்தி எண்ணிக்கைக்கு சமமான எதிர்மறை சக்தி எண்ணிக்கை எலெக்ட்ரானில் இருக்கும்.

அதாவது, 

நீ பாதி - நான் பாதி கண்ணே!


 




Wednesday, October 14, 2020

கண்ணழகு

ண்ணழகு 

பறவைகளில் அவள் மணிப்புறா 
பாடல்களில் அவள் தாலாட்டு 
கனிகளிலே அவள் மாங்கனி 
காற்றினிலே அவள் தென்றல்  


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் 
முகத்தின் அழகு கண்களில் தெரியும் 
கண்களின் அழகு விழிகளில் தெரியும் 
விழிகளில்  அழகு உயிராய் தெரியும்.

'அவள் கவிஞனாக்கினாள் என்னை'

மலரின் நறுமணம் தன்னை காட்டி நிற்கும். செய்யும் செயலே  உண்மையை  அறியச் செய்துவிடும். உள்ளத்தில் பொதிந்த எண்ணத்தை மனம் சொல்லுமுன்னர் முகமே  சொல்லிவிடும்.

நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்
அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்ப தில்.

                                                                                  - நான்மணிக்கடிகை 48

முகத்தையும் முந்திவிடும் கண்கள். பேசக்கூட செய்யும் என்கிறார் வள்ளுவர்.
இரண்டு ஜோடி காதல் கண்கள் காணும்போது பேச்சுக்கு அங்கே வேலை இல்லையாம்! 


கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
                                                                                    - திருக்குறள் 1100

மலரோடு மணம் பொருந்தி இருப்பதைப் போன்றே  பெண்ணுடன் உருவத்தில் இறைவன் பொருந்தி இருப்பதை உணர மாட்டார்கள். காதலில் கரு உயிர்க்க பெண்ணுடன் கலக்கின்றபோது, அங்கே பெருஞ்சோதியாக இறைவன் விளங்கி நிற்கின்றான்.  

மருவொத்த மங்கையுந் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார் 
கருவொத்து நின்று கலக்கின் றபோது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின்  றானே.

                                                                                                    - திருமந்திரம் 1137


 


Saturday, October 10, 2020

இரண்டு மூன்று நான்கு

இரண்டு மூன்று நான்கு 

ஓசு சோத்துல உடம்ப வளத்துட்டே(ன்)   
மீசை இருப்பத மறந்து இருந்துட்டே(ன்)   


2021 சட்ட மன்ற தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளர். அதிமுக  அதிகாரபூர்வ அறிவிப்பு!

'அதெப்படி நம்மள கேக்காம அவங்க பிரியாணி செய்யலாம். பக்கத்து வீட்டுக்காரங்கற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம. நாங்க இத ஒத்துக்க மாட்டோம். எதுத்த வீட்டுக்காரன்கிட்ட போயிருவோம்' - பாஜக முன்னாள் மத்திய மந்திரி.

அடுத்த நாளே அதே வாய், 'அவங்க வீட்டு பிரியாணி எப்பவுமே சூப்பர்'.

'எங்க தோட்டத்துலயே அறுபது ஆடு தேறும். தெரியுமில்ல? அவங்க பிரியாணி செய்யிறதா ஒத்துக்க மாட்டோம்' - பாஜக மாநில தலைவர்.

'என்னமோ போங்க. உங்க வீட்டு பிரியாணி மவுசே தனிதான்' - வாழ்த்தி வழிந்ததும் இதே தலைதான்.

'ஏற்கனவே எதுத்த வீட்டுக்காரன்கூட சேந்து பிரியாணி செஞ்ச வரலாறு இருக்கு. இந்த பிரியாணியை சரின்னு எங்க பாஸ் சொன்னாதான் சாப்பிடுவோம்' - பாஜக மாநில துணை தலைவர்.

'இவங்களுக்கு நாங்க எந்நாளும் கதவை திறக்க மாட்டோம்' - எதுத்த வீட்டு அறிவிப்பு பலகை.

'பிரியாணி முழுக்க நாங்களே வச்சுக்குவோம்' - அதிமுக மந்திரி.

'அதிமுக தனித்து போட்டியிடும். இணைந்து போட்டியிடும் ஒன்றிரண்டு கட்சிகளும் இரட்டை இலை  சின்னத்தில் போட்டி இடுவார்கள்.' - 2016 சட்ட மன்ற தேர்தல் நிலை  அது.

அப்பொழுதும் ஓசு சோத்துக்கு ஓலமிடும், இரண்டு தேசிய கட்சிகளும் முட்டி மோதித்தான் பார்த்தார்கள்.

இன்றைய சூழலில், தமிழனுக்கு கண்ணுக்கு தெரியும் எதிரிகள், இவர்கள் இருவரும்தான்.

2021 சட்ட மன்ற தேர்தலில்,  234 தொகுதிகளிலும், இரட்டை இலை, உதய சூரியன் மட்டுமே போட்டி என்ற நிலை எடுக்க வேண்டும். இவ்விரு பிரதான எதிர் கட்சிகள், தமிழகத்தின் நலன் கருதி ஒன்றிணையலாம். ஒன்றிணைய வேண்டும். 

அந்த நாள்.. 

எங்களுக்கும் காலம் வரும் 
காலம் வந்தால் வாழ்வு வரும் 
வாழ்வு வந்தால் அனைவரையும் 
வாழ வைப்போமே!


ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?

மத்திய அரசின் தொல்லியல் துறையில் முதுகலை பட்டத்திற்கு, தமிழ் மொழியை சேர்க்க போராடி பெற வேண்டும். 

மாநிலங்களுக்கு உரிய G S T நிலுவைத்தொகை மறுப்பு.

செய்வீர்களா? செய்வீர்களா?

நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன் 
காட்டுச் சிவிகை ஒன்று ஏறிக் கடைமுறை 
நாட்டார்கள் பின் செல்ல முன்னே பறைகொட்ட 
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

                                                                                - திருமந்திரம் 153

இப்பாட்டில், தலைமகன் செல்லும் ஊர் சுடுகாடு; இரண்டு தேசிய கட்சிகளும் செல்ல வேண்டிய ஊர்.

2021 தேர்தலில் வச்சு செய்யுங்கள்!

'

Friday, October 9, 2020

பாலும், தேனும், அமுதமும்

பாலும், தேனும், அமுதமும் 

பக்கத்தில் பழம் இருக்க 
பாலோடு தேனிருக்க  


மாத்தாடு மாத்தாடு மல்லிகே..

'தேனொடு, பால் தரும் செவ்விளநீர்களை 
ஓரிரு வாழைகள் தாங்கும்' - அது என்ன?  

'தெரியலையா?'

மாத்தாடு மாத்தாடு மல்லிகே..

 குறிஞ்சிப் பாட்டு:

கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் (தமிழ்ப்பண்பு) அறிவித்தற்குப் பாடியது – என்று கூறப்படுகிறது

காதலர் தாமே கூடிப் பின் மணந்துகொள்ளும் தமிழ்நெறியை ஆரிய அரசன் பிரகத்தன் உணராமல் ஏதோ பேசினான்.

அவனுக்குத் தமிழ்நெறி இத்தகையது என்று காட்டுவதற்காகக் கபிலர் இந்தக் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார். குறிஞ்சி நிலத்தெய்வம் முருகன், வள்ளி கதையாக பின்னர் அறியப்படுகிறது. 

பண்பு கெடாமல் நிகழ்ந்த தற்செயல் இயல்புப் புணர்ச்சியை இப்பாடலில் காணலாம்.

நாணும்  உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், சுவைஇ   
ஆகம் அடைய முயங்கலின், அவ் வழி,
பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை,
முழு முதற் தீம் கனி உதிர்ந்தென.....   

                                                                            - குறிஞ்சிப்பாட்டு 

நாணமும், அச்சமும் கொண்டு தோழி நான் பிரிந்து விட்டேன், அவர்களை தனித்திருக்க விட்டு விட்டு.

'ஒய்' என்று தலைவி  நெஞ்சை தலைவன்  தன் நெஞ்சில் அணைத்து தழுவிக்கொண்டான். பிரிய முயன்ற அவளை விடவில்லை அவன். மயிலாடும் பாறையில் இருந்த பழுத்த மிளகின் உள்ளிருந்த சுனையில்  பலாப்பழத்தேன் ஒழுகியது. அதில் முழு மாம்பழம் விழுந்தது.

'இன்னும்  விளங்கலையா?'


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்
.
                                                                                                        - திருக்குறள் 1121

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

இவ்வின்பத்தினூடே  இறைவனைக் காணும் வழியை  சொல்லுகிறார் திருமூலர்.

பாலொடு தேனும் பழத்துள் இரதமும் 
வாலிய பேரமுது ஆகும் மதுரமும் 
போலும் துரியம் பொடிபட உள்புகச் 
சீல மயிர்க்கால் தொறும் தேக்கிடுமாமே.

                                                                                                                                    - திருமந்திரம் 2831

துரியம்  என்பது பேரின்பம்; மோக்ஷம் அடைகின்ற நிலை. இதனை அடைகின்ற வழியாக இல்லற வாழ்வும் துணை நிற்கிறது என்று தெளிவாக்குகிறார்.

'இப்பவும் புரியலன்னா விட்டுருங்க, எப்பவுமே புரியாது.'









Wednesday, October 7, 2020

ஆஸ்திரேலியா பட்ஜெட் 2020

ஆஸ்திரேலியா பட்ஜெட்  2020 

அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா - அவ 
ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா


 

'அய்ய.. பண்டிகை.. பண்டிகை..' - சுண்டு விரல் குதித்தது.

'பண்டிகைக்கு என்ன பண்றது' - மோதிர விரல் கேட்டது.

'இனிப்பு செய்யணும்' - நடு விரல் சொன்னது.

'பணத்துக்கு எங்கே போறது? - ஆள்காட்டி விரல் சோகமாய் கேட்டது.

'நானிருக்கிறேன், எஜமானப்பன்' - கட்டை விரல் தம்ஸப் காட்டியது.

இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவை சரி கட்டும், பற்றாக்குறை பட்ஜெட் 2020 இது. ஆனால், பொருளாதாரத்தை நிமிர்த்தும் எல்லா அம்சங்களும் அதில் அடக்கம்.

JOBKEEPER, JOBSEEKER  என்று மக்களிடம் பணப்புழக்கம் இருப்பதை உறுதி செய்த அதே அரசு, பட்ஜெட்டில் மீண்டும் சலுகைகள் வழங்கி உள்ளது:

வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டி,

1. தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழிலாளர்கள் எடுக்க ஊக்கத்தொகை.  

2. வருமான வரி கணிசமான அளவில் குறைப்பு, அதுவும் நடப்பாண்டில் இருந்தே.

இத்தோடு நிற்காமல், 

நிறுவனம் கடந்த ஆண்டுகளில் நஷ்டத்தில் இயங்குகிறதா? அதற்கு முந்தைய ஆண்டுகளில் வரி செலுத்தி இருந்தால், நஷ்டத்தை கணக்கில் கொண்டு, முன்னர் கட்டிய வட்டியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்.

நான் நினைத்துக்கூட பார்க்காத கோணம் இது, பல வருடங்களுக்கு முன்னர் கட்டிய வரியை திரும்ப பெறுவது, கடலில் கரைத்த உப்பு, மீண்டும் அதே உப்பாக, மக்கள் கைகளில்.

ஆஸ்திரேலியா - எஜமானப்பன்!

நம்மூர்ல என்னடான்னா, மாநிலங்களுக்கு தர வேண்டிய GST நிலுவைத்தொகையே, மத்திய அரசிடம் இழுவைத்தொகையாக உள்ளது. 

இருபது லட்சம் கோடி அறிவிப்பு, பொருளாதாரத்தை நிமிர்த்த. எங்கே போச்சுன்னு, யாருக்கும் தெரியாது, நிதிமந்திரி உட்பட.

அரசாட்சி செய்பவர்கள் மக்களை காப்பது நல்லது. மக்களும் அரசன் வழி நிற்பர். அத்தன்மையில்லாமல், தானே அனைத்துலக  செல்வங்களையும் பிறரிடம் இருந்து பறித்து, தன்னகப்படுத்த போராடுவது, இலக்கில்லாமல் பாயும் புலியின் செயலைப்  போன்றதே.

வேந்தன் உலகை மிகநன்று காப்பது 
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர் 
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாம்கொள்ளப் 
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 

                                                                                          - திருமந்திரம் 245


Sunday, October 4, 2020

மே 2021

மே 2021


வாழ்ந்தவர் கோடி 
மறைந்தவர் கோடி 
மக்களின் மனதில் 
நிற்பவர் யார் 




மே 2021

[நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் நடக்க வாய்ப்புள்ள ஒரு கற்பனை] 

' ஜெ. ஜெயலலிதா என்னும்  நான்.. '  - கேட்ட காதுகளில், இன்று 
'நிர்மலா சீதாராம் என்னும்  நான்..'

'இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம், இந்தி பேசாத இம்மாநிலத்தை. மற்ற மாநிலங்களுக்கு இணையாக மாற்ற அயராது பாடுபடுவேன். அதே மாதிரி, தமிழ்நாடு மட்டும் நிதி நிலையில் தனித்துவம் என்பது கூட்டாட்சி தத்துவத்தை அவமதிக்கும் வண்ணம் இருப்பதால், நிதிப்பரவல் முறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வேன்' - முதல்வரின் முதல் அறிக்கையில் இருந்த செய்தி ஊடகங்களின் விவாத மேடைக்கு கருவாக இருந்தது.

234 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட,  N O T A-வையும், வெல்ல முடியாத கட்சி எப்படி ஆட்சிக்கு வரலாம் என்று பேசுவது கூட, தேசத்துரோகமாக சித்தரிக்கப்பட்டது.

'வணக்கம். ஜெகம் புகழும் எங்கள் கட்சி, அயோத்தியா ராமரின் கட்சி,  ஆட்சி அமைய பாடுபட்ட அனைத்து தமிழ் நாட்டு மக்களுக்கும் சேவை செய்வது என் கடமை' - பிரதமர் தமிழக மக்களுக்கு உரை ஆற்றியது தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக  வந்தது.

தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வரவேண்டிய துர்பாக்கிய நிலையில் அந்த கட்சி இல்லை.

சதுரங்க ஆட்டம், ஜெயலலிதா மறைந்த நாளிலேயே ஆரம்பித்து விட்டது.

2021 தேர்தலுக்காக காய்கள் சரியாக நகர்த்தப்பட்டது. கட்சி பாரபட்சமில்லாமல், வேட்பாளர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டார்கள். பிரதான எதிர் கட்சிகள், தலா நூறு இடங்களை பிடிக்க, மீதமுள்ளவை கூட்டணிக்கட்சிகளுக்கும், சுயேட்சைகளுக்கும் சென்றது.

அனைத்து கட்சிகளிலிருந்தும் விலை போன பதினைந்து சட்ட மன்ற உறுப்பினர்கள்,  நான்கு சுயேட்சைகள், ஆக பத்தொன்பது!

யாருக்கும் பெரும்பான்மை இல்லை.

ஆட்சி அமைக்க உரிமை கோரிய, மத்தியில் ஆளும் கட்சியால் பதவி வழங்கப்பட்ட ஆளுநர், அவர்களையே ஆட்சி அமைக்க அழைப்பினை விடுத்தார்.

'ஜெயிச்சு கப்பு வாங்குறதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது ஆத்தா'

துணை முதல்வர் பதவிக்காக, எடப்பாடி டெல்லி செல்ல, பன்னீர் மெரினா கடற்கரை சென்றார். வழக்கம் போல, தன்னை பதவி ஏற்பு விழாவில், இறுதி வரிசையில் அமர வைத்து, தமிழக மக்களை,  அவமரியாதை செய்து விட்டார்கள் என ஊடகத்திடம் உளறிக்கொண்டிருந்தார், பெருங்காய டப்பா தலைவர்.  

பண மதிப்பிழப்பு 
ஜி.எஸ்.டி 
கொரோனா கட்டுப்பாடு, தளர்வு  

'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' - துகிலுரிக்க ஆணையிட்ட துரியோதனின் அவையில் பீஷ்மரை நோக்கி தீக்கணை தொடுத்தாள் பாஞ்சாலி.

"தீங்கு தடுக்கும் திறம் இல்லேன்!" - பீஷ்மர் தலை குனிகிறார், பாஞ்சாலியின் வாதம் கேட்டு. 

உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமையால் தலை குனிந்து நிற்கிறது பாரதம்.

அரைக்கம்பத்தில் கொடியை பறக்க விடாதீர்கள். ஆதரித்து பேசும் அதிகார வர்கத்தையும், அரசியல்வாதிகளையும் அரைக்கம்பத்தில் பறக்க விடுங்கள். 

இதனை அரங்கேற்றிய கொடூரர்களை, பீமன் துரியோதனனை தொடையில் அடித்து கொன்றதுக்கு இணையாக தண்டியுங்கள்.

யோகி ஆதித்யநாத்கூட, தமிழக முதல்வராக வரமுடியும், நினைவில் கொள்ளுங்கள்.

எனக்கு எப்பொழுதும் மனதில்  எழும் கேள்வி. குற்ற பின்புலம், சிறை தண்டனை என உள்ளவர்கள் அரசு பணிக்கோ, மற்ற எந்த பணிகளிலோ  சேர முடிவதில்லை. ஆனால் அரசியலில் சேர்ந்தால் அவனே, முதல்வராகவும் ஏன் பிரதமராகவும் வர முடிகிறதே!
என்ன வகையான அரசியலமைப்பு சட்டம் இது. படிப்பும், வயதும் கூட இது போலத்தான். மக்களை ஆள அடி முட்டாள் போதும் என்ற அரசியலமைப்பு சட்டம்.

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் 
கல்லா  அரசனின் காலன் மிகநல்லன் 
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான் 
நல்லாரைக் காலன் நணுகநில் லானே.
                                                                   - திருமந்திரம் 238 

படிப்பறிவற்ற மன்னன், எமன்,  தர்ம நிலை அறியாது 'கொன்று வா' என்பான். அவனை விட நல்லவன் எமன், நல்லவரைக்கண்டால் துன்பம் தரமாட்டான்.

பின் குறிப்பு:
இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுரங்கப்பாதையில் பயணம் செய்த பிரதமர் மிகவும் ஆர்வத்துடன், தீவிரமாக  கை அசைத்தது, யாருமற்ற  சுரங்கத்தில். யாருக்கு டீ ஆத்தினார்?














 

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...