Sunday, October 4, 2020
மே 2021
Thursday, October 1, 2020
சூரியன்
சூரியன்
காலையில் மலரும் தாமரைப்பூ
அந்திக்கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ
கிழக்கில் உதித்தால் காலை
மேற்கில் மறைந்தால் மாலை
மறைந்து நின்றால் இரவு - எனில் சூரியனுக்கில்லை காலம்.
காலத்தை கடந்தவன், ஒளி வடிவான இறைவன்.
சுடர்மிக்க ஒளி வீசித்திகழும் அந்தப்பகலவனே, உடலில் உள்ள மாயை என்னும் பேரிருளை ஞானத்தால் அகற்றும் பேரருளாளனாக விளங்குகின்றான்.
சுடர்உற ஓங்கிய ஒள்ஒளி ஆங்கே
படர்உறு காட்சிப் பகலவன் ஈசன்
அடர்உறு மாயையின் ஆர் இருள் வீசில்
உடல்உறு ஞானத்து உறவியன் ஆமே.
- திருமந்திரம் 2694
Saturday, September 26, 2020
ஆயிரத்தியொரு நிலா
ஆயிரத்தியொரு நிலா
என்னுயிரிலே உன்னை எழுத
பொன்மேனி தாராயோ
பொன் விளையும் பூமி
உன்மேனி விதைத்திடவே
தந்ததின்று மேனி..
நீ அழைத்த ஆயிரம் நிலவுகள்
உன்னை இணைத்துக்கொண்டது
ஆயிரத்தியொரு நிலவாய்..
'ஆயிரம் நிலவே வா' என்னுமுந்தன் முதல் பாடல், புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
தேந்தமிழ்ப்பாடலை
திருவேங்கடத்தான் நீ பாட
மூவேந்தர் வழிவந்த மன்னவனும்
காவிரி தந்த பேரெழிலும் ஆட
திராவிடமே மலர்ந்ததங்கே!
பாடும் நிலா என மக்களால் அன்புடன் அறியப்பட்ட நீங்கள் இன்று தெய்வமானீர்கள்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
- திருக்குறள் 50
நிறை வாழ்வு உங்களுடையது. குறையொன்றுமில்லை தெய்வமாய் மிளிர்ந்து நிற்க!
Friday, September 18, 2020
மின்னலிழை
மின்னலிழை
மின்சாரம்
பாய்ந்ததுபோல்
மேனியெல்லாம்
நடுங்குவதேன்
ஒரு பத்து மாதங்கள் பின்னோக்கி செல்லுங்கள், உங்கள் பிறந்த நாளிலிருந்து.
அப்பொழுது எங்கிருந்தீர்கள்?
பெற்றவர்கள் பெற்றவர்களே, நம்மைப் படைத்தவன் இறைவன்.
நெல் முளைத்தெழ, உமியுடன் இருக்க வேண்டும். உமியைப்போன்றவர்களே நம் பெற்றோர்கள்.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.
- அவ்வையார் மூதுரை 11
பேராற்றல் கொண்ட இறைவனுக்கும், அவன் படைப்பிற்கு உறுதுணையாய் நின்றவர்கள் பெற்றோர்கள். நெல்லுக்குள் அரிசியாய், நம் உயிரினை, உடலுடன் படைத்தவன் இறைவன்.
திருமூலரும் வித்தினில் இருந்து முளை விடும் தன்மையை சொல்லுகையில், முளை விட்டபின் முளையும் வித்தும் வேறு வேறல்ல, இரண்டும் ஒன்றே என்கிறார்.
வித்தினில் அன்றிமுளை இல்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்பாடு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
அத்தன்மை யாகும் அரனெறி காணுமே.
- திருமந்திரம் 1932
இவ்வாறாக உடலினைப் படைத்த இறைவன், நமக்குள் அடுத்த தலைமுறைக்கான வித்தினைப் படைக்கிறார்.
அன்னம் பிராணன் என்றுயார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்னமாம் உருத்தோன்றும் எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே.
- திருமந்திரம் 1966
நம் உடலில் உள்ள வித்தினில் ஒன்று அன்னம், மற்றொன்று பிராணன். அதாவது, நெல்லாகிய வித்தில் உள்ள உமியும், அரிசியும் போன்றதே இது.
உடலில் லட்சக்கணக்காக உருவாகும் இவ்வித்து, எப்பொழுதும் எதிர்ப்பாலினத்தை நோக்கியே கவரப்பட்டிருக்கும். உடலில் இவ்வித்தை சேர்க்க வல்லார்க்கு, உடல் தங்கத்தைப்போலிருக்கும்; அஷ்டமா சித்திகளும் கைகூடும்.
பெற்றோர்கள் கூடுகையில், மின்னலிழைப்போல் உடலில் இன்ப அதிர்வுடன், உடல் முழுதும் உள்ள உயிர் வித்துக்கள் பாய்ந்து செல்லும். அப்படி வித்துக்களை வீணாக்காமல், அஷ்டாங்க யோகம் மூலம், சந்திர மண்டலம் என அறியப்படும் சுழுமுனைவரை ஏற்றம் தரவல்லோர்க்கு, எந்நாளும் மின்னலைப்போன்ற ஒளி இன்பம் நம் உடலுக்குள் சுடர் விட்டிருக்கும்.
விளங்கொளி மின்ஒளி ஆகிக் காந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும் எப்போதும்
உளங்கொளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற
வளங்கொளி எங்கும் மருவி நின்றானே.
- திருமந்திரம் 2687
பின்குறிப்பு:
இதனை எழுத எந்த இறையருள் எனக்கு ஊக்கம் கொடுத்ததோ, அதே அருள்தான் உங்களையும் படிக்க வைத்திருக்கிறது.
ஓம் நமக்ஷிவய
Saturday, September 5, 2020
தவறும் தப்பும்
தவறும் தப்பும்
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்
'மண்ணில் பிறந்து, மண்ணில் வளர்ந்ததை உண்டு, மண்ணுக்குள் மறையும் மனிதன், அணுவிலிருந்து அண்டம் வரை இயங்கும் இறைவனை, உண்டதின் கழிவை சுமக்கும் தன்னையொத்த மனிதனாக உருவகப்படுத்தியது தவறா? இல்லை தப்பா?'
தவறாய் இருந்தால் திருத்த வேண்டும். தப்பாய் இருப்பதால் வருந்தும் மக்களை மேலும் குழப்பாமல் நல்வழி காட்ட வேண்டும்.
மணவாழ்வில் இன்பம் பெறவும், நல்ல குழந்தைகளை பெற்றெடுக்கவும், உடலில் சேர்ந்துள்ள உணவின் கழிவுகளைக் அகற்றி, கடைபிடிக்க வேண்டிய வழிதனை காட்டுகிறார் திருமூலர்.
கலக்குநாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டின் அந்நாரி உதரக்
கலத்தின் மலத்தைக் தண் சீதத்தைப் பித்தை
விலக்குவன செய்து மேல் அணைவீரே.
- திருமந்திரம் 1955
காதலில் இன்பத்தைப்பெற, கூடுமுன்னர் உடலில் உண்ட உணவின் கழிவுகள் நீங்கப்பெறுதல் வேண்டும்.
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரம் வந்த குழவிக்கே.
- திருமந்திரம் 481
மந்த புத்தியுடைய, ஊமையான, கண்ணற்ற மக்களை யார்தான் பெற விரும்புவார்கள். மேலும் தொடரும் 482, 483, 484 பாடல்களில் நன்மக்களை பெற்றெடுக்கும் உபாயங்களை தெரிவிக்கிறார் திருமூலர்.
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.
- பாம்பாட்டி சித்தர் பாடல் 59
இந்த மனித உடலானது மேற்கூறிய தன்மைகளை பெற்றிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாயினும், இறைவனை மனித உருவில் படைத்து, தானுண்ணும் உணவினையும் படைப்பது சரியா, தவறா, தப்பா?
Saturday, August 29, 2020
பாறாங்கல்
பாறாங்கல்
'அந்த ரெண்டு பாறையும், கொஞ்ச நாள்ல ஒண்ணா சேந்துரும்'
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது, வெள்ளியங்கிரி ஏழாவது மலையின் உச்சியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி நாதரின் குகைக்கோவிலின் நுழைவு வாயில்.
பத்து வயதில், பெரியம்மாவுடன் மலை ஏறியபோது இரண்டு பாறைகளின் இடையே நல்ல இடைவெளி இருந்தது. ஒரு ஐம்பது வருட இடைவெளியில், அவ்விரு பாறைகளுக்கு இடையே இடைவெளி இல்லை.
'அவையினர் கருத்து சொல்லலாம்', சிம்மக்குன்றில் உள்ள பாறைகளை கொண்டு எல்லைக்கோட்டையை நிர்மாணிக்க எண்ணிய அரசனுக்கு, கருத்து சொல்ல அரசவையை கேட்டுக்கொண்டான் மந்திரிப்பிரதானி.
'பேரரசே, கற்கள் மிகவும் உயர்ந்த தரத்தில் இருப்பதால், அவைகளை நம் கால வரலாற்றை பிரதிபலிக்கும் கடவுள் சிலைகளாக வடித்து, சிற்பக்கூடமாகவும், கோயிலாகவும் மாற்றலாம்' என்றான் தலைமை சிற்பி.
' மன்னா, நம் தலைமை சிற்பி சொன்னது போல், கற்கள் நல்ல தரமாக இருப்பதால், அதனை அறுத்து, மெருகூட்டி நல்ல விலைக்கு வெளிநாடுகளில் விற்று வாணிபம் செய்தால், பொருளாதாரத்தில், நம் நாட்டுக்கு இணை யாரும் இருக்க முடியாது'- இது நிதி மந்திரி.
'பாறைகளை அகற்றி கோட்டை கட்டுவது, அதனை கடவுளாக்குவது அல்லது அதனை அறுத்து வாணிபம் செய்வது, இவை நாம் நம் சந்ததியினர்க்கு செய்யும் துரோகம் ஆகும்' - என்றார் எதனையும் மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்ற சித்தாந்தம் கொண்ட பகுத்தறிவுப்பிரசங்கி .
திருக்குறள்-423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
மன்னனுக்கு காவல் முக்கியம். சிற்பிக்கு தன்னுடைய திறமை முக்கியம். நிதி மந்திரிக்கு நிதி முக்கியம். பகுத்தறிவுவாதிக்கு தன்முனைப்பு முக்கியம். அவரவர் அறிவுக்கேற்ப பாறைகளின் மெய்ப்பொருள் மாறுபடுகிறது.
திருமூலர் எப்படி சொல்கிறார் பாருங்கள்; உங்கள் பார்வைதான் முக்கியம்.
திருமந்திரம்-2290
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே.
மரத்தால் செய்யப்பட்ட யானையை பார்க்கையில், யானையாக பார்த்தால் மரம் தெரிவதில்லை. மரத்தின் தன்மையை பார்த்தால் யானை தெரிவதில்லை. இவ்வுலகில் ஐம்பூதங்களை பார்த்தால் அதில் உறையும் பரம்பொருள் தெரிவதில்லை. கண்ணால் காண்பவை எல்லாம் பரம்பொருளாகப்பார்த்தால் ஐம்பூதங்கள் தெரிவதில்லை.
இவ்வளவு பெரிய பாறைகள் எப்படி உருவாகி இருக்க முடியும். அதை யார் தூக்கி இவ்வளவு உயரத்தில் வைத்திருக்க முடியும்? தானாகவே, இறையருளால், அணுவாகி, மூலக்கூறாகி, பாறையாகி இருந்தால் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டுமே.
வளர்ந்து கொண்டே இருப்பதன் சாட்சிதான் வெள்ளியங்கிரி மலை உச்சியில் நான் கண்ட பாறைகளின் இணைப்பு.
*** *** ***
Sunday, August 23, 2020
லங்கனம்
லங்கனம்
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும்லங்கனம் எனப்படும் பரம மருந்தின் மூலம், உடல் தனக்கு வரும் நோய் மற்றும் உபாதைகளில் இருந்து தன்னைத்தானே சமநிலைப்படுத்திக்கொள்ளும். லங்கானத்தை சாதாரண மனிதர்களும் பயனுறும் வண்ணம் நான்கு வகையாக முறைப்படுத்தியுள்ளார்கள்.
1. உடலின் தேவைக்கு மட்டும் உண்ணுதல்
2. முறையாக மூச்சு விடும் பழக்கத்தை மேற்கொள்ளுதல்
3. தேவையானதை மட்டும் கருத்தூன்ற பேசுதல்
4. தன்னையே நினைந்து அமைதியாக இருத்தல்
இவ்வளவு சிறப்பான கருத்தை திருமந்திரத்தில் தேடினேன். திருமூலர் ஒரு படி மேலே சென்று, உடலை ஏன் நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்து லங்கானத்தில் உள்ள அனைத்து வகைகளையும் விளக்கி சென்றிருப்பது நமக்கு கிடைத்த பாக்கியமே.
உடம்பை வளர்த்தல்
உடம்பை வளர்க்கும் உபாயத்தை அறிந்தவர், தானும் வளர்த்து நமக்கும் அதை அளித்து சென்றுள்ளார்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
- திருமந்திரம் 724
தேவைக்கு மட்டும் உண்ணுதல்
உடலில் உயிர் நிலைத்திருக்க, நாம் உண்ணும் அளவில் கருத்து கொண்டு உடலின் தேவைக்கு மட்டும் உண்ண வேண்டும்.
அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலஉள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.
- திருமந்திரம் 735
மூச்சுக்காற்றை முறைப்படுத்துதல்
நாம் சுவாசிக்கும் காற்று, உட்செல்லுதல், வெளியேறுதல் மற்றும் தங்கி இருத்தல் எனும் மூன்று தன்மையதாகவும், நாம் உணர உட்செல்லுதல், வெளியேறுதல் மட்டும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. உட்தங்கும் காற்றின் நேரத்தை அதிகப்படுத்தி பயிற்சி செய்ய உடம்பு நிலைத்து வாழும்.
மூன்று மடக்குஉடைப் பாம்புஇரண்டு எட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்தான்
நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட்டு
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே.
- திருமந்திரம் 725
அளவறிந்து பேசுதல்
முறையாக முயன்று, பேசும் பேச்சை கட்டுப்படுத்தி, உடலை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் மறைந்துள்ள உண்மை என்ன வென்றால், நாம் எண்ணியதை எல்லாம் ஊருக்கு சொல்லி பறைசாற்ற வேண்டிய அவசியமில்லை.
முறை முறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றோன்றும் இல்லை
பறைஅறை யாது பணிந்து முடியே.
- திருமந்திரம் 748
தன்மயமாக திளைத்திருத்தல்
ஓவியம் போல் ஆடாமல் அசையாமல் ஒன்றில் ஒன்றிக் கலந்து இலயிக்கின்ற அறிவுணர்வைப்பெறுங்கள். அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களிலும் மூலாதாரத்திலிருந்து தினமும் சஞ்சரியுங்கள்.
ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயனறி வார்இல்லை
தீவினையாம் உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.
- திருமந்திரம் 751
இந்த பாடல்கள், மனித குலத்திற்கே பெரு நன்மை விளைக்கும் அற்புதமானவை. நோயெதிர்ப்பு சக்தி கிடைக்க, பெருந்தொற்றுகளில் இருந்து மனித சமுதாயம் விடுபட மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஒளிக்கதிர்
ஒளிக்கதிர் உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...
-
சாமியார் ஆவது எப்படி? பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை. ஞானம் பிறந்து விட்டது எனக்கு. காப்பி குடிச்ச...
-
தவறும் தப்பும் தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணு...
-
தேவாமிர்தம் சாட்சி சொன்ன சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ? உடலின் ஒவ்வொரு அசைவிற்கும், உணர்வுக்கும் சாட்சியாக நிற்பது சந்திரன். வி...

