காதல் செய்வீர்
கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
'இவ்வளவு கேவலமானவனா இருப்பேன்னு எனக்கு தெரியாமப்போயிருச்சு. இனிமே என்னப்பாக்க இந்தப்பக்கம் வராதே' - என்று தன்னுடைய தோழி அவனைப்பார்த்து புன்னகைத்ததற்காக ஊடிக்கொண்டே, இன்னும் கொஞ்சம் நெருக்கமாக உட்கார்ந்தாள் காவ்யா.
பெண்களின் வார்த்தைகளின் அர்த்தமும் வேறுதான், அகராதியும் வேறுதான்.
புறத்தில் தோன்றும் காட்சிகளால், உள்ளத்தில் தோன்றும் அன்பின் வெளிப்பாடே, நட்பாகவும், பந்தமாகவும், பாசமாகவும், கருணையாகவும், காதலாகவும் பரிணமிக்கிறது.
அந்த அன்பே அகத்தில் தவத்தின் வெளிப்பாடாக தோன்றும்போது, பக்தியாகி, சக்தி நிலை தூண்டப்பெற்று பேரின்பத்தையம், சித்திகளையும் தருகிறது.
உறங்கும் அளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல் ஐயாஎன்று உபாயம் செய்தாளே.
- திருமந்திரம் 1107
சீரிய தவ உறக்கத்தில், ஆக்கிணை சக்கரத்தில் வீற்றிருக்கும் அன்னை பராசக்தி, வளைக்கர நாதத்தோடு கழுத்தினை இறுக்கி அணைத்து, உள்நாக்கின் மேலண்ணத்தில் சக்தியின் ஆதாரமான அமிழ்தம் ஊறச்செய்து, தொடர்ந்து தவ உறக்கத்தில் இருக்கும் வழிதனை காட்டி நின்றாள்.
