Wednesday, April 22, 2020

பேரவலம்


பேரவலம் 

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ..








'நீங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பது டீசர் மட்டுமே. முழுப்படம் காணத்தயாராகுங்கள்' - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உலக மக்களுக்கு கொரோனா  தாக்குதல் பற்றி அறிவுறுத்திக்கொண்டிருந்தார்.

'செய் அல்லது செத்து மடி'- போய், வழக்கமான காரியங்களை 'செய், உடனே செத்து மடி' ஆகி விட்டது.

உலக முதன்மை வல்லரசு, அமெரிக்க   நாட்டின்  இறப்பு செய்திகளே இப்படி என்றால், ஈகுவடார் போன்ற நாடுகளில் இருந்து கசியும் செய்திகள் அதிபயங்கரமானவை, பெருந்தொற்றால் வந்த பேரவலம்.


மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயான மட்டே, வழிக்கேது துணை
தினையா மளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆளவென்றும் பரலோகம் சித்திக்கும் சாத்தியமே.
                                                                           - பட்டினத்தடிகள் பொது 12

மனையாளும், மக்களும், சுற்றமும் கூட இனி இல்லை என்றாகிவிட்டது. பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தாலே பெரிய நிம்மதி என்றாகிவிட்டது.

வளத்துஇடை முற்றத்துஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடம்உடைந்தால் அவை ஓடென்று வைப்பர்
உடல்உடைந்தால் இறைப் போதும் வையாரே.
                                                                                               - திருமந்திரம் 158

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நொடிப்பொழுதும் இறந்த உடலை வைத்திருக்க மாட்டார்கள் என்ற வாக்கு எப்படி மெய்ப்பட்டிருக்கிறது பாருங்கள்.

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.
                                                                                               - திருமந்திரம் 252


சொர்கமான இந்த மண்ணை நரகமாக மாற்றிவிட்டோம் என்று இறைவனிடம் மன்னிப்பு கோரும் வண்ணம்,  வெற்றிலையை  படைத்து மன்னிப்பு கேட்போம். நம்மை சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு ஒரு வாய் உணவாவது வழங்குவோம். அண்டை, அயலில் வாழும் திக்கற்ற மக்களுக்கு ஒரு கைப்பிடி அளவாவது உணவுப்பொருளை கொடுப்போம். நாமே திக்கற்றவர்களாக இருப்பின், நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி தேற்றுவோம்.

இனி, செய்வதற்கொன்றுமில்லை.






Sunday, April 19, 2020

முதல் எதிரி

முதல் எதிரி 

இந்த பூமியிலே  எனக்கெதிரி
உம்புடவையை போலேது





'சாமி, பூதம் இதே  வேலையா போச்சு உங்களுக்கு. பொழுதோட வேலைக்கு வரோணும்னு தெனோஞ்சொல்லோணும்' - என்று அதிகாரமாக சொல்லிக்கொண்டிருந்தார், எட்டுப்பட்டி மிராசுதார்,
'சாமி கும்புட்டு வந்தேனுங்க சாமி. கொஞ்சம் பொழுதாயிருச்சு'- என்று குனிந்து சொல்லிக்கொண்டிருந்த வேலையாளுக்கு.

அவரைப்பொறுத்த மட்டில் திருவிழா நேரத்தில், முதல்  மரியாதை பெற கோயிலுக்கு போவதோடு சரி. மற்றபடிக்கு சாமி, பூஜை  என்பதெல்லாம் வீணான வேலை.

அதே நேரம், பேய், பிசாசு என்றால் அதீத பயம். கேரளா மாந்த்ரீகர்களை கொண்டு அடிக்கடி சிறப்பு பரிகாரங்களை செய்ய சொல்வார். இருட்டி விட்டால் வெளியே போவதென்பதே அவர் வாழ்க்கையில் கிடையாது. இளம் பிராயத்தில் நடந்த சின்ன சின்ன பயமூட்டும் நிகழ்வுகள் அவர்  ஆழ்மனதில் பதிந்து போயிருந்தது. அடிக்கடி அந்த எண்ணங்கள் மனதில் தோன்றி அவரை நிலை கொள்ளாமல் செய்து விடும்.

உயிரையும், உடலையும் ஆளும்  காரணிகளை தெரிந்து கொண்ட மனிதனால், எண்ணங்களை அறிந்து கொள்ளும் வழிமுறையை வகுத்து சொல்ல முடியவில்லை.

உயிர்:
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச்
செப்பரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.
                                                                  - திருமந்திரம் 126

முப்பத்தாறு பிரதம தத்துவங்கள் மனிதனின் ஆன்மாவை ஆளுகின்றது. இதனை அறிந்துகொண்டு வழி நடப்பவர்கள் இறைநிலை கண்டு ஆனந்த வாழ்வில் லயித்திருப்பர்.

உடலும் உயிரும்:
முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும்
செப்ப மதிள்உடைக் கோயில்உள் வாழ்பவர்
செப்ப மதிள்உடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
                                                                  - திருமந்திரம் 154

மொத்தம் தொண்ணூற்றாறு தத்துவங்கள் மனிதனின் உடலையும், உயிரையும் அடிப்படையாக கொண்டுள்ளது. உடலான கோயில் அழியும்போது இந்த தத்துவங்கள் மறைந்து விடும்.

மனமும் எண்ணமும்:
மன சந்தியில் கண்டமன் நனவாகும்
கனவுஉற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிவு என்ப
இனம் உற்றான்நந்தி ஆனந்தம் இரண்டே.
                                                                  - திருமந்திரம் 2613

ஐம்புலன்களால் பெரும் உணர்வுகளை கொண்டு நனவு வாழ்வு அமைகிறது.
புலன்கள் செயலற்ற தூக்க  நிலையில் கொள்ளும் உணர்வு கனவாகிறது. இவையல்லாமல், எண்ணங்களற்ற  அறிவோடு இயைந்த உணர்வே  பேரின்பமான ஆனந்தமாகிறது.

ஐம்புலன்களால் பெரும் உணர்வுகளை, மனம் எண்ணங்களாக  மாற்றி  நனவு வாழ்வில் அலைக்கழிப்பை அளிக்கிறது.

எண்ணங்களே மனிதனின்  முதல் எதிரி.

Sunday, April 12, 2020

இயற்கைப்பேருண்மை

இயற்கைப்பேருண்மை

இருக்குறதெல்லாம் பொதுவாய்ப்போனால்
பதுக்குற வேலையும்  இருக்காது
ஒதுக்குற வேலையும்  இருக்காது









'கலி யுகம் முடியும் நேரம் வந்துவிட்டதா? உலகம் அழிந்து விடுமா?'

இந்த கேள்வி எல்லோருடைய மனதிலும் இன்றைக்கு பதிலில்லாமல் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சிறு சிறு கிராமங்களும் தங்கள் எல்லைகளை மூடி, மனிதர்களை  மூடிய கதவிற்குப்பின்னால் ஒளிந்து கொள்ள சொல்லிவிட்டது.

இயற்கையை வாழ்வாதாரமாக கொண்ட, புதிய மனிதப்பண்புகள் கொண்ட உயிரினம் தோன்றுவதற்கான எல்லா முன்நிகழ்வுகளும் பூமியில் நடக்க ஆரம்பித்து விட்டது. அது மனிதனாகவே இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது.

இறைவனால் படைக்கப்பட்ட உலகம் அழியாது; தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும். அணுவினுக்கழிவில்லை என்னும் கோட்பாடுதான் இது. அணுவை பிளந்தாலோ, இணைத்தாலோ புதிய அணுக்கள் தோன்றுமே தவிர அழியாது.

Matter can neither be created nor destroyed - The first law of thermodynamics.

பதினெட்டாம் நூற்றாண்டிலேயே, ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய [கல்லிவர்ஸ் ட்ராவல்ஸ்] நான்காம் புதினத்தில் குதிரைகள் மனித குணத்தோடு, இயற்கையோடு  இணைந்த வாழ்க்கையின் அருமையை எழுதி உள்ளார்.

அறிவியல் வளர்ச்சி என்ற   பெயரில் மனிதன்  ஆடிய ஆட்டத்திற்கு சம்மட்டி அடி  மட்டுமல்ல, மனித இனமே மரபணு மாற்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஆறாம் அறிவை அப்படியே அடித்து சாய்த்து மனிதன் ஐந்தறிவுடன் வாழும் காலம் வெகு விரைவில் என்பது அப்பட்டமாக நம் கண் முன்னே  தெரிகிறது.

வான எல்லைகளை சொந்தம் கொண்டோம். நெருப்பு சக்தியை விற்று காசாக்கினோம். நீரினை வியாபாரமாக்கினோம். நிலத்தை நாமே ஆண்டனுபவிக்க அளந்து, சந்ததி சந்ததியாக சொத்தெழுதி வைத்தோம். காற்றினை கையகப்படுத்துமுன் இயற்கை முந்திக்கொண்டு விட்டது.
பூமியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காற்றினை சுவாசிக்க முடியாத அளவிற்கு பெருந்தொற்றை பெற்றிருக்கிறோம். பஞ்சபூதங்களை மிக சாதாரணமாக எண்ணினோம், அதற்கான பரிசு கிடைத்துவிட்டது.

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப் பட்டார்களும் அன்பிலர் ஆனார்
கொடை இல்லை கோள்இல்லை கொண்டாட்டம் இல்லை
நடைஇல்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
                                                                                          - திருமந்திரம் 209


கிழிந்து போன புடவை போலானது மனித வாழ்வு. உற்றார்களும், உறவினர்களும் அன்பு செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். கொடுத்துதவுபவர்கள் யாருமில்லை. ஐம்புலன்கள் சரியாக இயங்காமல் மனம் நோய் கொண்டுவிட்டது. எந்த மனமகிழ்வு தரும் கொண்டாட்டங்கள் இல்லை. இதுநாள் வரை, கட்டி காத்து வந்த பழக்க வழக்கங்கள்,  பண்பாடுகள் என்ற நடைமுறை  மாறி, பூமியில் வாழுகின்றவர்கள் தன்மை மாறி விடும்.



Friday, April 3, 2020

நல்ல நேரம்

நல்ல நேரம்


ஆயிரம்தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை





'கோவிட்தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை'

அனிச்சையாக ரீமிக்ஸ் பண்ணி பாடி சந்தோசப்பட்டுக்கொண்ட சுந்தர், மிக சிறப்பாக தமிழாக்கம் செய்யப்பட்ட பட்டாம்பூச்சி நாவலில் மூழ்கி இருந்தான்.

'தனிமை சிறையில் அடைக்கப்பட்ட பட்டாம்பூச்சி, தன்னிலை மறக்காமல் இருக்க அந்த குறுகிய  இருட்டறையில் தொடர்ந்து நடப்பதை வழக்கமாக்கிக்கொண்டான்.'

'சிறையில் இருந்து வெளியே வந்த பட்டாம்பூச்சிக்கு வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை. அறையில் நடந்த எட்டுகளுக்குமேல் கால் நடக்க மறுத்தது.'

'ஏங்க, எப்படி உங்களால மட்டும் சும்மாவே இருக்க முடியுது. சகிக்கல, ஆம்பள வீட்டுலயே முட்ட வச்சிட்டு இருக்கிறது. வாஷிங் மெஷின்ல இருக்கிற துணிய எடுத்து காயப்போடுங்க. கொஞ்சம் ஒடம்பு வளையட்டும்'- சித்ரா என்ற சித்ராங்கியின் சித்ரவதை தாங்க முடியவில்லை சுந்தருக்கு.

'கொரோனா  வேணுமா சித்ரா வேணுமான்னு கேட்டா, என்னுடைய ஓட்டு கொரோனாவுக்கே'-   முனகிட்டே துணி காயப்போட போனான் சுந்தர்.

கொரோனா லாக் டௌன். வேலை இல்லை. ரொம்ப நாளா படிக்கணும்னு இருந்த ஒரு நாவலை படிக்க விடமாட்டேங்குறாளே, ராக்ஷசி.

நாள் தவறாமல் காலை எழ வேண்டியது,  எந்த வேலையும் செய்யாமல் மாலை வரை நாளை ஓட்ட வேண்டியது, மறுபடியும் தூங்க வேண்டியது. ஓய்வெடுத்து, ஓய்வெடுத்து ஓய்ந்து போய்  மறுபடியும் ஓய்வெடுப்பது. இத்தகையவரைக்கண்டால் இறைவனும் கோபம் கொள்வான். இதிலிருந்து வெளியேறி தத்தம் வாழ்நாளின் கடமையை செய்ய நினைப்பவர்க்கு இன்பம் அருளுவான்.


காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே.

                                                                   - திருமந்திரம்  182






Sunday, March 22, 2020

இறைவன்

இறைவன்
இல்லை
என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள்
இல்லை என்பார்











காணொளி:
https://au.video.search.yahoo.com/search/video?fr=mcafee&p=koduthathellam+koduthaan+song+youtube#id=4&vid=8413d3219acea79bd7573049f6d26e84&action=click



கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்.

'பாட்ட நிறுத்துங்கப்பா. தலைவர் இப்ப பேசுவார்..'

'வணக்கத்திற்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.. சரியான பாட்டுதான் போட்டிருக்காங்க. இன்னைக்கு கொரோனாவ கொடுத்து, மனித இனத்தின் இறுதி அத்தியாயம் போய்கிட்டிருக்கிறதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறுவதை காண மிக ஆனந்தமாக உள்ளது.

ஏதோ  இந்த பூமி தனக்காக மட்டுமே  படைக்கப்பட்டதாக எண்ணி , நம்மை எல்லாம் கால்நடை என்று கிண்டல் பேச்சு பேசிக்கொண்டிருந்த மனிதன் காலே நடக்க முடியாமல் படுத்துக்கிடக்கிறான்.

இந்த அருமையான வேளையில்,  பாரதப்பிரதமருக்கு, நம்முடைய ஆடுகள் இனத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வோம். இன்று, ஞாயிறு ஒரு நாள் முழு அடைப்பு நடத்துவதன் மூலமாக, லட்சக்கணக்கான நம் இனத்து மக்கள் உயிர் விடுவதை தடுத்திருக்கிறார்.

மனித இனத்தின் அழிவின் பயணத்தில், அவர்கள் படைத்த வேதங்களும், மதங்களும்,கோவில்களும், சிலைகளும், பணமும்  அவர்களே முன் நின்று  அழித்து  சென்று விடுவார்கள். பொன்னும், பொருளும், வீடும், தோட்டமும் இனி இயற்கைக்கு சொந்தமாகிவிடும்.

அணுவினை படைத்து, அணுவினுள்ளும்  உறையும் இறைமை, இருப்பதிலும், இல்லாததிலும் நீக்கமற நிறைந்திருப்பது, அவனது ஆறாவது அறிவுக்கு புலப்படாமலே மனித இனம் அழிவதை நாம் சாட்சிகளாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மனிதனுக்கு உணவாவதே நம் வாழ்வு என்ற நிலை மாறி, நாமும் இறைவனின் படைப்பில் முழு வாழ்வும் வாழ்வோம்.'

இப்படியாக கொரோனா என்ற கொடிய தோற்று நோய் மனித இனத்தையே வேரோடு, வேரடி மண்ணோடு சாய்த்துவிடும் என்று தெரிந்தோ என்னவோ திருமந்திரம் அதற்கும் ஒரு மருந்தை மனித இனத்துக்கு அளித்து வைத்துள்ளது.

வீர மருந்துஎன்றும் விண்ணோர்  மருந்துஎன்றும்
நாரி மருந்துஎன்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்துஎன்று அறிவார் அகலிடம்
சோதி மருந்துஇது சொல்ல ஒண்ணாதே.
                                                                                            - திருமந்திரம் 850


குறிப்பு:
இந்த மருந்தைப்பற்றி  முழுமையாக அறிந்து கொள்ள எண்ணுபவர்கள், திருமந்திரப்பாடல்களில் 845, 846, 847, 848, 849 பாடல்களை படிக்கவும்,







Sunday, March 15, 2020

விதை நெல்




எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்..
எதனை கண்டான்
பணம்தனை படைத்தான்..

காணொளி:

https://au.video.search.yahoo.com/search/video?fr=mcafee&p=manithan+maarivittan+youtube+song#id=1&vid=22f6ae9b8cededb39caaad724c48547b&action=view

'ரிசர்வ் பேங்கில் வைப்பில் உள்ள சேமிப்புத்தொகை நாட்டின் விதை நெல். விதை நெல்லை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துவது  நாட்டின் பொருளாதாரத்தை பல முனைகளில் இருந்து பலவீனப்படுத்திவிடும்.....' - பொருளாதார அரசியல் விமர்சகர் தன்னுடைய கருத்தை   அழுத்தமாக  பதிவிட்டுக்கொண்டிருந்தார்.

இதோடல்லாமல், நாட்டின் கனிம வளங்களை விதை நெல்லாக கொள்ளலாம். தங்கமோ, கிரானைட்டோ  அல்லது எண்ணையோ நாட்டின் வளமாக மட்டும் கொள்ளாமல்  அனைத்து பொது மக்களுக்கும் சொந்தமானதாக கொள்ள வேண்டும். ஆளும் அரசியல் கட்சிகள் மட்டும் சொந்தம் கொள்வது மக்களின் வளத்தை சுரண்டுவதாகும்.

கனிம வளத்தை கொண்டு, அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களை நிறுவி தேசிய வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் கொண்டு வருவது நாட்டுக்கும் வீட்டுக்கும் வளம் பெருக்கும். அதனை தவிர்த்து, கனிம வளங்களை மூலப்பொருளாக ஏற்றுமதி செய்துவிட்டு, அதன் சார் பொருட்களை இறக்குமதி செய்வது நாட்டுக்கு செய்யும் பொருளாதார இழப்பாகும். இது விதை நெல்லை உண்பதுக்கு ஒப்பாகும்.

நம் உடலைப்பொருத்தமட்டில், நாம் உண்ணும் உணவில் இருந்து இருபத்தொரு நாட்களில், புல்லின் நுனியில் அரும்பும் பனித்துளி அளவு உற்பத்தி ஆகும் விந்து, விதை நெல் ஆகும். இந்த விதை நெல்லை வறுத்து  உண்பதென்பது, அளவற்ற முறையில் செலவிடுவதாகும். விதை நெல்லை  உடலுக்குள்ளேயெ  சுட்டு உண்ணக்கூடியவரும்  உள்ளனர். இருவரும் விதை நெல்லை உபயோகித்தாலும், விதை நெல்லை உடலில் சுட்டு உண்பவர், விதை நெல்லை உண்ணாமல் உடலுக்குள்ளே விதைப்பவராகிறார்.

வித்துக்குற்று உண்பான் விளைவு அறியாதவன்
வித்துக்குற்று உண்ணாமல் வித்துச்சுட்டு உண்பவன்
வித்துக்குற்று உண்பானில் வேறுஅலன் ஈற்றவன்
வித்துக்குற்று உண்ணாமல் வித்துவித்தான் அன்றே.
                                                                                                       - திருமந்திரம் 1964


உடலை தங்கம்போல் மிளிர திருமூலர் தரும் தேவவாக்கு, உடலுக்கு மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்பது உறுதி. அதுவே, கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்களுக்கு வருமுன் காக்கும் அருமருந்தாகும்.












Saturday, January 18, 2020

கடவுள் - தானிருந்தான் உணர்ந்தெட்டே

கடவுள் - தானிருந்தான் உணர்ந்தெட்டே






நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை



'உடல் தன் தேவையை அடையாமல் இருக்க முடியாது.'

'வெகுதூரம் பயணம் செய்யும் ஒருவன் தன் குதிரையை எப்படி பராமரிப்பானோ, அப்படி உடலை பராமரிக்க வேண்டும்.'

'அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம் என்னிடம் இருப்பதை எடுத்துக் கொள்ள சொல்கிறேன்.'

'பசித்து நிற்கும் ஒரு நாய்க்கு நீ அளிக்கும் உணவு, என் பசியை தீர்க்கிறது.'

தன்னுடைய தேவைக்கு கூட அன்பர்கள் அளிக்கும் பொருட்களை சேமிக்காது, உடனே தேவையானவர்களுக்கு கொடுத்து விடும் பேரன்பை மனதில் கொண்டிருந்த ஷீரடி சாய்பாபா அவர்களின் சாய் சத் சரிதத்திலிருந்து நான் புரிந்து கொண்ட அருள் வார்த்தைகள், மேலே குறிப்பிட்ட சொற்றொடர்கள்.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் காலில் கயிறு கட்டி குருவியை இழுப்பதுபோல் இழுத்து உலக நன்மைக்கு பேரருள் வழங்கும் சாய்பாபா அவர்கள் என்னையும் இழுத்து அருள் வழங்கியுள்ளார் என்பதை நாளும் உணர்கிறேன்.

அதீதத் துரியத்தில் இயங்கி உலகெலாம் இன்றும் பேராசி வழங்கும் ஷீரடி சாய்பாபாவின் பொற்பாதங்களில் சங்கமிக்கும் அருள் பெற வேண்டுவோம்.


அதீதத் துரியத்து அறிவனாம்  ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.
                                                                     - திருமந்திரம் 2199


அதீதத்துரியமாகிய பேருறக்க நிலையில், உயிர் மிக்க அறிவுடையதாக இருக்கும். தொடர்ந்து இந்நிலையில் உயிர் நிற்க இயலுமாயில், சுடர்விட்டெழும் ஆருயிரின் அறிவுச்சுடர் ஞானக்கனல் எனப்படும் நிலையை அடையும். இதுவே சீவாக்கினியில் உயிர் பேருறக்கம் கொண்டு பரம்பொருளை அடையும் நிலை.


உரிய நனா துரியத்தில் இவனாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரனாம்
திரிய வரும் துரியத்தில் சிவமே.
                                                                     - திருமந்திரம் 2273


துரியம் என்னும் பேருறக்கத்தில், நனவு, கனவு மற்றும் உறக்கம் என்றடையும் போது, உயிர் பரம் என்னும் பரம்பொருள் தன்மையை அடையும். இதன் அடுத்த நிலையில், உயிர் பரம்பொருளுடன் கலந்து இறைவனாகவே விளங்கும்.

ஆதி யோகி சிவன். முதற் சித்தர் என  உணர்த்தப்பட்டவர் சிவன். எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கும்  பரம்பொருளுடன் ஒன்றி நின்றவன் சிவன். நம் வாழ்நாளில், மிக அருகில், நம்முடன் வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா என்னும் சிவன்.

அப்படியெனில், பரம்பொருள் என்பது யார்?

எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்துதிரு விளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியு நின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே.
                                                                   - பாம்பாட்டி சித்தர் பாடல் 9


அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, அவைகளை ஆட்டுவிக்கும் பரம்பொருளே, அனைத்து உயிர்களாகவும், அனைத்து உலகங்களாகவும் ஆகி பேரானந்தமாய் நின்றான்.

இதுவே இறைவனின்  எட்டாவது குணம்.

அவன் திருவடிகளை பணிந்து  நிற்பதே பேரின்பம்.







ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...