Friday, June 14, 2019

மயக்கம்

மயக்கம் 

மாலைப்பொழுதின்
மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி

பொருள்:

'அய்யா, இவளுக்கு தினமும் சாயந்திரம் காய்ச்சல் வர்ற மாதிரியா?'

தலைவனை பிரிந்த தலைவி பசலை நோய் படர்ந்து மாலையில் கடும் வெம்மையில்  வாடுகிறாள் என்று இலக்கிய வகுப்பெடுத்துக்கொண்டிருந்த
தமிழ் அய்யாவை பார்த்து, பக்கத்து இருக்கை  விஜயாவை சுட்டிக்காட்டி கேட்டாள்  கமலா.

'அதெல்லாம், வயசு போனவங்களுக்கு இல்லை'- தலையில் குட்டுவது போல் எரிச்சலுடன் பதில் சொன்னார் தமிழய்யா, 'உங்கள சொல்லி குத்தமில்லை, வகுப்பெடுக்க சொன்ன உங்க மன்றத்தை சொல்லணும். ஒண்ணு, ரெண்டு  பெத்து போட்டுட்டு, ஜாலியா வந்து என்ன வறுத்தெடுக்குதுங்க'- என்று மனதில் நினைத்துக்கொண்டே.

'இன்னுமா வரல?'- விஜயாவை பார்த்து முணுமுணுத்துக்கொண்டே உட்கார்ந்தாள், கோவை குசும்பு அவள் கண்களில் மின்னியது.

மாலை மயக்கத்தை தொடர்ந்து, இலக்கியம் இரவை நோக்கி பயணித்தது.

பறம்பு மலையில் முருகன், வள்ளியுடன் இணைந்து  கார்த்திகை நட்சத்திரங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டிருந்தார்.

இரவும், நிலவும், வானமும், நட்சத்திரங்களும் அதனுடன் பயணிக்கும் காதலும்  இல்லாத இலக்கியமேதும் உண்டா?

உடலும், உள்ளமும் புத்துயிர் பெற சரியான உறக்கம் இரவில் அவசியம். அறிவியலும், இரவில் உறங்குவதன் தேவையை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது.

'அய்யா, நைட் லைப் தெரியலன்னு சொல்றீங்க. சுத்த வேஸ்ட்..' - இது சந்தியா   போட்ட குண்டு, ஒன்பதரை மணிக்கு தூங்க போயிருவேன்னு  பேச்சினூடே சொன்னதற்கு.

குறைந்தது இருபது வருஷம் தூங்கி இருக்கிறேன், எட்டு மணி நேரம் நாள் வீதம் கணக்கு போட்டால், இந்த அறுபது வயது வாழ்வில்.

வாழ்வின் முதல் இருபது  வருஷம் அறிவு வளர்ச்சிக்கு.  [60-20=40]

கடுமையான உழைப்புக்கு  இன்னொரு முப்பது  வ்ருஷம். இதில் பத்து வருடம் தூக்கம்.                                                                                                   [40-10=20]

அடுத்த பத்து வருடம் உழைப்பு, தூக்கம், நோய், ஓய்வு. இந்த வகையில் ஐந்து வருடம் தீர்ந்தது.                                                                                  [20-5=15]

பத்திலிருந்து பதினைந்து வருடம் வாழ்வதற்குத்தான் இந்த போராட்டம்.  

உணர்வோடு வாழ்ந்ததை கணக்குப்போட்டால், ஒரு நாள் கூடாது தேறாது.

பேதைமை.

*** ***

'நான் சுத்த வேஸ்ட்தான்'

இனிமேல் இரவு நேரம் கண்விழித்து வாழ்நாட்களை அனுபவிப்பேன்.

வேள் பாரி முதல் பாகம் படிச்சு முடிச்சிட்டு தான் தூங்கணும்னு சபதம் போட்டு படிக்க ஆரம்பித்தேன். கண்கள் சொக்க, புத்தகத்தை மூடிட்டு, பெட்ல விழுந்து கைபேசி எடுத்து நேரம் பாத்தேன்.

நேரம் இப்பொழுது, சரியாக ஒன்பது மணி இருபத்தி ஒன்பது நிமிடம்.

'போங்கடி, நீங்களும் உங்க நைட் லைப்பும், எனக்கு  தூக்கம்தான் முக்கியம்.'

இரவை பற்றிய இன்னொரு சிறப்பு செய்தி:

கூட்டல் பதினெட்டு மற்றும் தமிழ் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டும், திருமூலர் சொல்வது,

செய்யும் அளவில் இருள்நண் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையும் இடத்துஓடி நன்காமநூல் நெறி
செய்க வலம்இடம் தீர்ந்து விடுகவே.

                                                                                  - திருமந்திரம் 
















Tuesday, June 11, 2019

வாலை ரசம்

வாலை ரசம் 

யாரது யாரது
தங்கமா..











பொருள்:

'ஹய்யோ.. அம்மா.. கிண்டல் பண்றதுகூட தெரியாம சிரிக்கிறியே, 'எம்புருஷன் என்னை புகழ்ந்துட்டார்னு' '

போட்டுக்கொடுக்கிறதுல, பர்ஸ்ட் கிளாஸ் என் மகள்.

'நீதான் என் தங்க மயில்' என்று மகளை ஆசையில் சொன்னதும், 'அப்ப, நானு?' - என்று கேட்ட மனைவிக்கு 'நீ தங்க ரதம்' என்று வழிந்ததுக்கு  மகளின் பதில் அது.

'நீ குண்டுன்னு சொல்லுது அப்பா.. நீ சந்தோசமா சிரிக்கிறே'


'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தில், வாலையாக நிற்கும், என்னுடைய குடும்பம் என்னும்  ஈர்ப்பு, மூவரையும் மகிழ்ச்சியில் திளைக்க விடுகிறது.

பாசம்.

*** ***

'என்னடா பண்றே, செல்பி எடுக்கும்போது..' - பின்னால் நிக்கிறவங்களுக்கு மறைக்க கூடாதுன்னு காலை கொஞ்சம் மடக்கி உயரத்தை குறைத்த சக ஊழியரை பார்த்து கிண்டல் கேள்வி.

'இப்பத்தாண்டா, கிரிக்கெட் முடிச்சிட்டு வந்தோம். விக்கெட் கீப்பர் போஸ்     குடுக்கிறான்'- சந்தோசமாக ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டார்கள்.

நாளின் அதிக நேரம் ஒன்றாக கூடி இருக்கும் அலுவலக தோழமை, ஈர்ப்பின் மற்றொரு பரிமாணத்தில், உயிர்ப்புடன் 'ஓம்'  வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

*** ***

'இதோ நான் கொண்டு வர்றேன்'- பக்கத்துக்கு வீட்டு அம்மா ஓடிப்போய் நாலைந்து மெழுகுவர்த்தி கொண்டு வந்து கொடுத்தார்கள்.

எல்லா ஏற்பாடுகளும் செய்து, டெக்கரேஷன்ஸ் முடிச்சு, பர்த்டே கேக் டேபிளின் மேல் வச்ச பின்னால்தான் தெரிஞ்சது, கேண்டில் இல்லைனு.

குழந்தைகளின் ஆனந்தம், சக குடும்பங்களின் ஒருங்கிணைந்த சந்தோசம், அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது 'ஓம்'
என்னும் ஈர்ப்பாக.

*** ***

'சார், அனுப்புனவங்க டீடைல்ஸ் தெரியல. ஒருவேளை பேக்கிங் உள்ளார இருக்கலாம்' - பரிசுப்பொருள் அனுப்பும் கடையிலிருந்து பதில் வந்தது, கேக்கும், சிவப்பு ரோஜா மலர்க்கொத்தும் வந்த போது.

இது ஒருவகை, சொல்லத்தான் நினைக்கிறேன் கவன  ஈர்ப்பு தீர்மானம். வாழ்வின் சுவாரஸ்யங்களில் இதுவும் ஒரு அம்சமே, 'ஓம்' எனும் பிரணவம் இங்கும் வாழ்கிறது.

*** ***

ஓம் எனும் பிரணவத்துள்ளே, அகர, உகர, மகார சேர்க்கை உள்ளது என்பது அறிஞர்கள் மற்றும் சித்தர்களின் அறிவு நிலை.

அ + உ + ம்    =   ஓம்

திருமந்திரம்-2056

வரும் வழி போம் வழி மாயா வழி
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலுமாமே.

                                                                              

வரும் வழி போம் வழி - மூக்கின் வழியாக உள்ளே, வெளியே செல்லும் சுவாசக்  காற்று, அகாரம் மற்றும் உகாரம்.

மாயா வழியே மகாரம், அதுவே மனித வாழ்வை அமைத்து கொடுத்து, எடுத்து செல்லும் ஈர்ப்பு சக்தி, மூன்றாம் கண்.

*** ***





















Thursday, June 6, 2019

பிறந்த நாள்

பிறந்த நாள் 

ஏன் பிறந்தாய்
மகனே
ஏன் பிறந்தாயோ?


பொருள்:

'ஒண்ணாங்கிளாஸ்ல பையன விட்டுட்டு போங்க' - தலைமை ஆசிரியர், இரத்தினசாமி, அப்பாவிடம் சொன்னதை கை கட்டி சந்தோசமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

வலது கை, இடது காதை தொட்டால்தான் ஸ்கூல்ல சேத்துக்குவாங்க, பர்த் சர்டிபிகேட், இல்லாத காலமது. அப்பா என்ன தேதி சொல்றாரோ, அதுதான் என்னுடைய வாழ்நாள் முழுக்க, என்னைத் தொடரும்  பிறந்த தேதி.

'டேய் லைலாவை, கடல் பூதம் தூக்கி தோளில் போட்டுக்கிட்டு குகைக்கு போகுது'- சிந்துபாத் கதை தினத்தந்தியில் வருவதை தினமும் படித்து காண்பிப்பேன். இதுக்கு ஒரு நண்பர் பட்டாளம் என்கூட இருக்கும். என்னுடைய கதை படிக்கும் ஆர்வம்  சிந்துபாத் கார்ட்டூனில்தான்  ஆரம்பித்தது.

*** ***

'குழந்தையை கொன்று விடுவதுதான், ஒரே வ்ழி'- வானியல் அறிஞர்களும், ஜோதிடர்களும் போட்ட அறிவியல் கணக்கின் விடை.

பூமாதேவியின் அம்சமாக விளங்கிய, சீதையின் பிறப்பின் காலம், கோள்களின் நிலை, தந்தைக்கும், நாட்டுக்கும் கேடு என்று கணக்கிட்டவர்களின் ஒருமித்த தீர்ப்பு.

'இல்லை. என்னிடம் விட்டு விடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்'-  இராவணேஸ்வரனின் கம்பீரக்குரலில் அவையினர் அமைதியாயினர்.

குழந்தை பிறக்கும் நேரத்தை, வினாடி கூட பிசகாமல்  கணக்கிட, பிரசவ அறையிலிருந்து உருட்டி விடப்படும் எலுமிச்சையிலிருந்து காலம் கணிக்கப்பட்டு, ஜாதகம் எழுதப்படும்.

*** ***

'அம்மா, என்னுடைய பொறந்த தேதி என்னம்மா?'- கதை படிக்கும் வேகத்தில் என்னுடைய பிறந்த நாளும் இந்த மாதிரி ஜாதகம் எல்லாம் எழுதி இருப்பார்கள் என்று ஆவலுடன் கேட்டேன்.

'சிக்கண்ணன் கல்யாணத்துக்கு மொதநா காத்தாலே, சூரியன் உதிக்கும் போது   நீ பொறந்தே கண்ணு'

'அன்னிக்கு வியாழக்கிழமை..'- கூடுதல் தகவல்.

எப்படியோ கூட்டி, கழிச்சு, என்னுடைய பிறந்த நாள் கண்டுபுடிச்சேன்.

காலை ஆறு மணி, ஆறாவது நாள், ஆறாவது மாதம்.. ட்ரிபிள் சிக்ஸ்..

666

*** ***


விட்டபின் கர்ப்ப உற்பத்தி விதியிலே 
தொட்டுஉறும் காலங்கள் தோன்றக் கருதிய 
கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மைசீர்ப் 
பட்டநெறி இதுஎன்று எண்ணயும் பார்க்கவே.
                                                                                                 - திருமந்திரம் 1944  

எலுமிச்சை உருட்டி பிறந்த காலத்தை கணிப்பது கூட சரியாகாது. அன்னையின் வயிற்றில் கருவான அந்த கணமே இந்த மண்ணில் வாழும் நாள், இறக்கும் நாள், குணாதிசயம் எல்லாம் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.

*** ***











Tuesday, June 4, 2019

காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்

காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம் 

காத்து பட்டாலே
கரையாதோ கற்பூரம்
கரையுது எம்மனசு
உன்னாலே

பொருள்:

'எந்தாலி அறுக்கிறதுக்குனே வருதுங்க'- வார்த்தைகள் நேராக மனதை துளைக்க, கண்டக்டரிடம் ஒன்றும் சொல்லாமல், பஸ் சீட்டில் ஓரமாக அமர்ந்தாள் சுப்பாத்தா.

வடவள்ளியிலிருந்து மருதமலை செல்லும் அதிகாலை பேருந்து. மருதமலை ஏறும்  படிக்கட்டுகளில் நீர் மோர், மாங்காய், வெள்ளரிக்காய் வியாபாரம் சுப்பாத்தாவிற்கு. வழக்கமான இடத்தில்  கடையை ஆரம்பிக்க இதுதான் சரியான நேரம்.

'அவந்தான் என்ன செய்வான். மொத பஸ்ல அஞ்சு ரூவா டிக்கிட்டுக்கு நூறு ரூவா குடுத்தா?'- ஆனா 'தாலி அறுக்கிறது' என்ற வார்த்தை வெள்ளை சேலை கட்டி இருந்தவளை, வெகுவாக பாதித்தது.

கணவனை இழந்த பெண்கள், பூவையும், பொட்டையும் இழப்பதுடன் வண்ண நிற சேலை கட்டுவதும் மறுக்கப்படுகிற சமுதாயம் சுப்பாத்தாவினுடையது.

மூன்று குழந்தைகளை, கொடுத்துவிட்டு அல்ப ஆயுசில், தம்பியண்ணன்  போய் சேர்ந்ததில் இருந்து வெள்ளை சேலைதான்.

*** ***

'டேய், தம்பியண்ண நம்ம சுப்பு கழுத்துல தாலி கட்டிட்டாண்ட..'- ஊரெல்லாம், தண்ணி புடிக்க போன சுப்புலட்சுமி கழுத்துல மஞ்சக்கயிறு கட்டினது தான் பேச்சாக இருந்தது.

அவன் ஒரு ரெக்கவெட்டு. பொயிலையும், வெத்தலையும் போட்ட வாயில் மஜித் பீடி. பத்தாதற்கு,  பட்டணம் மூக்குப்பொடி. பட்டசாராயமும், மட்ட ஊறுகாயும் தான் தன் உலகம் என்றிருந்தவனுக்கு, சுப்பு மேல இயல்பாகவே ஆசை இருந்தது, தாய்  மாமன் என்ற வகையில்.

'அட, இன்னிக்கு நம்ம சுப்புவ  பொண்ணு பாக்க வர்றாங்க. வீட்டோட இரு'ன்னு அவன் அக்கா  சொன்னதும் ரோஷம் தலைக்கேறி, புல்  மப்புல வந்து தாலிய கட்டிட்டு, மண்ணில் உருண்டு விட்டான்.

ஆனது ஆயிருச்சு. சொந்த மாமன்தானே, ஊரும் ஒதுங்கி, அவள் வாழட்டும் என்று உறங்கிய நேரத்தில், நெஞ்சு முட்ட துக்கத்துடன், குறட்டை விட்டு தூங்கும் மாமனையே பார்த்து காற்று படாமலே, கற்பூரமாய்  கரைந்து கொண்டிருந்தாள் சுப்புலட்சுமி.

என்ன நடக்குதுன்னு என்று விளங்குமுன்பே, தாலி கட்டிய தன் கடமை முடிந்து விட்ட கர்வத்தில் தூங்கிவிட்டான்.

ஒவ்வொரு முறையும் மலரும் பெண்மை, இருபத்தியொரு இதழ்கள் விரிய மலர்கிறது. நாளொரு இதழாக மூடி, இருபத்தியொரு நாட்களில் மூடி, மீண்டும் மலர தயாராகும் பெண்மை, இன்று கேட்பாரற்று கிடக்கும் வேரில் பழுத்த பலாவாக. 

ஆனால், பழி என்னவோ பெண்மைக்குத்தான்.

கைப்பிடிநாயகன் தூங்கையிலேயவன் கையையெடுத்து
அப்புறந்தன்னில் அசையாமல் முன் வைத்தயல் வளவில்
ஒப்புடன் சென்று துயினீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படி நானம்புவேன் இறைவாகச்சி யேகம்பனே.
                                                                                                              - பட்டினத்தார் 

அயல் வளவு செல்லாமலே, கொஞ்சம் தெளிவாக இருந்த நாட்களில் கணவனுடன் சேர்ந்தே, மூன்று குழந்தைகளுக்கு தாயாகி விட்டாள்.

***  ***
மஞ்சள் நீராட்டு விழாவில், பெற்றோர்கள் கொண்ட அளவிலா சந்தோசம், ஊரெல்லாம் அழைத்து கொண்டாடிய விதத்தில் தெரிந்தது. அதுவரை, 'மாமா, மாமா' என்று  அவன் பின்னால்  ஓடிக்கொண்டிருந்த சுப்பு, அவனைப் பார்த்ததும் தலை குனிந்தது, வெட்கத்தினால் அல்ல, சொந்த அண்ணனை பார்ப்பது போலத்தான். ஆனால், தம்பியண்ணனுக்கு தலை கால் புரியவில்லை.

*** ***

'தாய் மாமன, கூப்பிடுங்கப்பா. பாப்பாவை மடியில் வெக்கட்டும்'- சுப்பு லட்சுமிக்கு மொட்டை அடித்து, காது குத்தும் விழாவில், தம்பியண்ணனை  அழைத்தார்கள்.

*** ***

கோயிலுக்கு செல்லும்போது 'இந்த தொட்டில் உனக்கு கட்டினது'- அம்மா காட்டிய போது, 'அப்ப நான் இந்த மரத்தில் இருந்து  இறங்கி வந்திருப்பேன்' என்று நினைத்துக்கொள்வாள் குட்டி சுப்பு.

*** ***

'ஆத்தா.. மருதமல வந்துருச்சு, எறங்காத்தா'- சில்லறையை கையில் வைத்துக்கொண்டு எழுப்பிய கண்டக்டர் கைகளில் சரிந்தது சுப்பாத்தாவின் தலை.

*** ***
மனித உடலின் நிலையற்ற தன்மையை விளக்கும் பாடல் இது. 

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரோடு மந்தணங்  கொண்டார் 
இடப்பக்க  மேஇறை நொந்தது  என்றார் 
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. 

                                                                                       - திருமந்திரம்  

வீட்டில் நன்கு சமைத்து வைத்திருந்தார்கள். நன்றாக உண்டுவிட்டு, மனைவியிடம் உறவு கொண்டார். 'நெஞ்சு வலிக்குது' என்று படுத்தவன் அப்படியே உயிரை விட்டான்.

தம்பியண்ணனும், சுப்பாத்தா மட்டும் விதி விலக்கா என்ன?








Sunday, June 2, 2019

நிசப்தம்

நிசப்தம்

அமைதியான
நதியினிலே
ஓடம்

பொருள்:

நிசப்தம்...

கிரிக்கெட் உலகக்கோப்பையின் கடைசிப்பந்து. 

பௌலரின் கையிலிருந்து 120 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டு, பிட்ச்சில் பட்டு எழுகிறது.

கடைசி  பந்தில், தேவை மூன்று ஓட்டங்கள், வெற்றி பெற.
அதே  பந்தில்,  மட்டை  ஆட்டக்காரர் ஆட்டமிழந்தால் ஃபீல்டிங் அணிக்கு வெற்றி.

சுமார், 25,000 பார்வையாளர்கள் கொண்ட அரங்கு நிறைந்த  விளையாட்டரங்கத்தில், ஒருவரின் இதய ஒலியை அடுத்தவர் கேட்கும் அளவிற்கு நிசப்தம்.

*** ***

சுற்றிலும், கண்களை சுழற்றி ஒருமுறை  பார்த்துக்கொண்டாள்,  செல்வி. மனத்தின் படபடப்பு கொஞ்சமும் குறைந்த பாடில்லை. பக்கத்தில் நின்றிருந்த, சிவாவை பரிதாபமாக  பார்த்தாள்.

'நடுவில் என்னை சோதித்து விட மாட்டாயே'- அவள் விரிந்த விழிகளில் கேள்வி இருந்தது.

'போர்டிங் கால் இது.. எந்திரி போகலாம்'- சிவா அன்பாக சொன்னது கூட, எரிச்சலாக பேசுவது போல் இருந்தது அவளுக்கு.

எவ்வளவோ நாட்கள் ஆசைப்பட்டு, அதற்கான பிளான் போட்டு, சிவாவை வற்புறுத்தி இந்த விமான பயணத்திற்கு அச்சாரம் போட்ட போது, இருந்த வேகம் தொலைந்து போயிருந்தது செல்விக்கு.

உணர்வுகள் தீவிரமாக  ஒரு செயலை செய்ய எண்ணும்போதே  அந்த செயலின் பலனை  அனுபவித்து விடும். உடல் உணரும் முன்பே, உள்ளம் உணர்வுகள் மூலமாக அனுபவத்தை தந்து விடும். தேவையில்லாத பயமும், பதட்டம் மட்டுமே மிஞ்சும் செயலில்.

வாழ்க்கையே ஒரு பொம்மலாட்டம் தானே!

*** ***

கோடான கோடி மக்கள், வைத்த கண் வாங்காமல், சீறி எழுந்த பந்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொல்வதை விட, மூச்சு விட மறந்திருந்தார்கள்.

ஆண்டவன் மட்டும் அனிச்சை செயல்களை படைக்காமல் விட்டிருந்தால், எத்தனை பேர் பிழைத்திருப்போமோ?

நேராக நடு ஸ்டம்ப்பை வீழ்த்தி சென்றது, பந்து.

ஆரவாரம் ஒரு பக்கம்; ஆற்றாமை ஒரு பக்கம்.

*** ***

கைகள் கோர்த்திருந்தது. பேச்சை மறந்திருந்தார்கள்.

'எவ்வளவோ பேச நெனச்சிருந்தேன். ஒண்ணுமே பேச தோணல'- செல்வியின் பேச்சை கண்கள் மூடி ரசித்துக்கொண்டிருந்தான் சிவா.

வாய் பேச நினைத்ததெல்லாம், மனம் பேசிக்கொண்டிருக்குமோ?

பஞ்சு மெத்தை விரித்த மேகத்தின் மேல் மிதந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து, கிழக்கே உதிக்கும் சூரியன் செஞ்சுடர் வீசி, ஆரஞ்சு பந்தாய் எழுந்து கொண்டிருந்தது.

ஆனந்தம் ஒரு பக்கம்; இந்த கணம் நிலைக்கணுமே என்ற எண்ணம் ஒரு பக்கம்.

*** ***

அத்தனை ஆரவாரமும், ஆற்றாமையும் ஒரு சேர, 'நோ பால்' சொன்ன நடுவரின் பக்கம் திரும்பியது. மூன்றாம் கண்ணை திறந்து, பௌலர் எல்லை கோட்டை தாண்டி பந்து வீசியது, 'ஸ்லோ மோஷன்' ஒளி பரப்பில் சென்று கொண்டிருந்தது. 

மீண்டும் நிசப்தம்.

ஆட்டத்தின் உச்சம் உணர்வு பூர்வமாக  முடிந்து விட்டது. இனி வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான்.

*** ***

இருவரின் மனதிலும், உடலிலும் இனம் தெரியாத பரவசம். வாழ்வினில் இனி சேர நேர்ந்தாலும், சேரா விட்டாலும் நம் நட்பு மாறுவதற்கில்லை என்ற அன்பில் நிறைந்து நின்றார்கள். 

அமைதி  அவர்களை முழுமையாக ஆட்கொண்டது.

உணர்வு பூர்வமாக அவர்கள் வாழ்ந்து விட்டார்கள்.

*** ***

ஆதியும், அந்தமுமாய் உள்ள இறை நிலை என்றும் நிசப்தத்தில்தான் உறைந்திருக்கிறது. அந்த நிசப்த நிலையைத்தான், 'ஆதியுள் அந்தம்'  என திருமூலர் விளக்குகிறார்.

விளங்கு நிவிர்த்தாதி மேவும் அகராதி
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
களங்கம்இல் நாதாந்தம் கண்ணின்உள்  நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.

                                                                                                   - திருமந்திரம் 

பொதுப்பொருள் சொல்வதானால், ஓம் எனும் பிரணவ மந்திரமே நிசப்தத்தின்  ஆணிவேர். உடலும், மனமும் ஒருங்கிணைந்து தவ நிலை கொள்ளும் நிசப்தத்தில் ஓங்கி ஒலித்திடும்  இம்மந்திரம்.

அகாரம், உகாரம், மகாரம் இவற்றுள் ஆதியாய் நிற்பது அகாரம். இம்மூன்றுமே விந்துவில் அடங்கி நிற்கிறது. ஒலியும், ஒளியுமாக மூலாதாரத்தில் விளங்கும் (அ+உ+ம்) ஓம் எனும் பிரணவ மந்திரத்தை கண்களின் உட்புறமாக மனதால்  பார்த்து, ஒலிக்கக்கேட்பீர்களானால், அதுவே ஆதியுள் அந்தம் ஆகும்.

*** ***
















Saturday, June 1, 2019

அசைவம்

அசைவம் 

செத்தே தள்ளிக்கோங்கோ
நான் ரொம்ப அசைவம்

பொருள்:

தயிர் பச்சிடிக்கு கை போகும்போது, பச்சை மொளகா கடிச்ச நாக்கு சுர்ருன்னு ஏறி, கடிச்ச சாப்ஸ் எலும்பின்  சுவையை இன்னும் மேல கொண்டு போச்சு.

இந்த சுவை எப்படி நமக்கு தெரியுது?

வரக்கூடாத சந்தேகம், வரக்கூடாத நேரத்தில். நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் சுவையை உணர்த்துகின்றன, சரி.

சக்கரையை சாப்டா இனிப்பு ஒரு பகுதியிலும், மருந்து சாப்டா கசப்பு ஒரு பகுதியிலும் தெரியுது, அதுவும் சரி.

அதுதான் சுவையை உணர்ந்து அனுபவிக்கவா, எச்சில்?

எனக்கு ஒரு வீக்னஸ்.

நல்ல பிரியாணி சாப்டுட்டு இருப்பேன், டக்குன்னு அந்த வெத்தல ஞாபகம் வந்துரும். அத்தன டேஸ்டும் அங்கே திசை மாறிரும்.

'வெத்தல போட்டா  வாய் சிவக்குது, எச்சிலினாலே இல்லை இயற்கையா'-ன்னு பட்டி மன்றம். காசு வச்சு, தீவிரமா   ஆடுபுலி ஆட்டம் ஆடிட்டிருந்த கும்பலுக்கு ஒரு சந்தேகம்.

ஒரு கோஷ்டி எச்சிலினால், இன்னொரு கோஷ்டி சுண்ணாம்பு, பாக்கு, வெத்தல செத்து இடிச்சா செவந்துரும்னு.

அதுக்கும் காசு பந்தயம் கட்டி ஆட ஆரம்பிச்சாங்க.

திண்டுக்கல் வேணு பிரியாணி ஹோட்டல்ல, சாப்பிட்டு வெளியே வந்தால், இனிப்பு பீடா கிடைக்கும். அது யாருக்கு வேணும், சுத்த சைவம்.

கடைக்கு வெளில, ரோட்டு முக்குல ஒரு துக்குணூண்டு, பெட்டிக்கடை.

என்னைப்பாத்ததும் கண்டுபுடிச்சிட்டார் கடைக்கார்.

'சார், வெத்தல கொஞ்சம் காரம் ஜாஸ்தி. ஆனா நல்ல வெத்தல'

சுவீட் பீடா போடுறதுக்கு இது ஆயிரமாயிரம் மடங்கு மேல். சுவீட் பீடா  போட்டா பிரியாணி சாப்ட திருப்தியே போயிரும்.

வெத்தலய, லேசா நீவி குடுத்து, காம்ப கட் பண்ணி, நுனியை கிள்ளி தயார் பண்ணினேன். நரம்பு பிக்கிற அளவுக்கு முத்தின வெத்தல இல்ல.

ரெண்டு நிஜாம் பாக்கு, எடுத்து வச்சிக்கிட்டேன்.

வெத்தல மேல, கடைக்காரர் கொஞ்சம் தாராளமா சுண்ணாம்பு தடவிகிட்டே,
'கார வெத்தலக்கு, கொஞ்சம் தூக்கலா சுண்ணாம்பு போட்டா, காரத்த டேஸ்டா மாத்திரும்'.

சுண்ணாம்ப ஒதரப்போன நான், சரி ஒரு தடவ, ட்ரை பண்ணுவோம்னு, விட்டுட்டேன்.

ரெண்டு பாக்கையும் சுண்ணாம்பு மேல போட்டு, அழகா மடிச்சு, மொத ராத்திரியில, பொண்ணு கடிச்சு குடுக்கிற வெத்தல மாதிரி, வாயில போட்டு கிட்டேன்.

கார்ல முன் சீட்..  மொதல்ல, சுண்ணாம்பு காய்ச்சல் நாக்குல உள்ள சுவை மொட்டுக்களை பதம் பாக்க ஆரம்பிச்சிச்சு. அத சமன் செய்ய வெத்தலையை வேகமா மெல்ல வேண்டி இருந்துச்சு.

அப்ப ஆரம்பிச்சிச்சு பாருங்க.. சுவை மொட்டுக்கள் ஆடிய ஆட்டம். புல் பாட்டில் ராவா அடிச்ச கூட இந்த சுவை கிடைக்குமான்னு தெரியாது.

ஆனா, இந்த தாடி வச்சு, கொண்ட போட்ட பொய்யா மொழிப்புலவர் இருக்காரே, அந்த காலத்துலே இத சொல்லிட்டு போயிட்டார், எச்சிலுக்கு உள்ள சுவையை.

குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்

நீங்க சொல்லுங்க தீர்ப்ப..

எச்சிலினால் வாய் சிவந்து, சுவை வந்ததா?
சுவை தெரிந்ததால், வாயில் எச்சில் ஊறியதா?












Sunday, May 19, 2019

சாமியார் ஆவது எப்படி?

சாமியார் ஆவது எப்படி?

பொறந்தாலும்
ஆம்பளையா
பொறக்கக்கூடாது






ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை.  ஞானம் பிறந்து விட்டது எனக்கு.

காப்பி குடிச்சிட்டு, சொல்லிட்டு கிளம்பிற  வேண்டியதுதான்.

'எங்கேடி காப்பி'

'என்ன டி யா? விளக்குமாறு பிஞ்சிரும்'

'ஆமாண்டி பொண்டாட்டி. பாரு, இதுல கூட டீ இருக்கு'

'எனக்கு ஞானம் வந்துருச்சு. காப்பி குடிச்சிட்டு சன்யாசம் போறேன். ஒரு நாலு மொழ வேட்டி  எடுத்து வை'


'அது டூ மச் டாட். ஒரு ஈரிழை துண்டு போதும்' - அன்பு மகளின் பதில்.

'அது கூட அதிகம்தான். ஒரு கர்ச்சீப் போதும்'- நான் கொஞ்சமும்  எதிர்பார்க்காத சிந்தனை மனைவியிடமிருந்து.

பொறப்பட்டாச்சு, இனி வெள்ளியங்கிரி மலையில் போய் செட்டில் ஆயிர வேண்டியதுதான்.

இப்ப கேள்வி எல்லாம் எங்கே செட்டில் ஆவது? மலை அடிவாரம் உள்ள கிராமத்தில் தங்கலாமா, இல்லை அடிவாரத்தில் தங்கலாமா?

கிராமத்தில் தங்குவதும்  ஒன்றுதான், வீட்டில் இருப்பதும் ஒன்றுதான். மனம் அலை பாய விடக்கூடாது.

ஏழு மலை இருக்கு. மத்த சாமி மலைகளில் எல்லாம் பாத்தால், சாமியார்கள், பிச்சைக்காரர்கள் அங்குமிங்கும் தங்கி இருப்பார்கள். இந்த வெள்ளியங்கிரி மலை மேல்  மட்டும் சாமியார்கள் , பிச்சைக்காரர்கள், பிராமணர்கள்  என்று யாரும் இல்லையே. கண்ணுக்கு புலப்படாமல் நிறைய சித்தர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்கிறார்கள்.

அடிவாரத்தில் மட்டும் ஒரு சாமியார் கும்பல் இருக்கு. அதுகூட சேந்துக்கலாமா?

நோ.. நோ.. இவர்கள் பணம் கேட்கிறார்கள். நான் இல்லற வாழ்வை முற்றும் துறந்து ஞானம் பெற்றவன். அவர்களுடன் சேர்ந்து,  இரந்து வாழ மாட்டேன்.

'மலை மேல எல்லாம் ஏறி தங்க வேண்டாம் டாட்..'

'ஏம்மா..'- மகளின் அக்கறை பற்றி அவசரமாக ஆனந்தப்பட்டு கேட்டேன்.

'நீ விட்ற கொறட்டைக்கு, எல்லா மிருகங்களும் பயந்து மலய  விட்டு ஓடி, ஊருக்குள்ளாற வந்துரும்'

'மேற்கு தொடர்ச்சி மலையில், ஒரு ஜீவ ராசி கூட தங்காது'- இது என் தர்ம பத்தினி.

'சரி. என்னை யாரும் பாக்க வரவேண்டாம்'- என் தன்மானத்தை சீண்டுகிறார்கள்.

'நீ வராம, இருந்த சரி' - கலிகாலம் பேசியது.

முதல் மலை உச்சியில், வெள்ளை விநாயகர் கோவில். ஒரு சின்ன ஓய்வு மேடை இருக்கு. அங்கே தங்க முடியாதே.

ரெண்டாவது மலை முடிவில், பாம்பாட்டி சித்தர் குகை இருக்கு. அங்கிருந்து கொஞ்சம் மேலே, ஒரு நீரூற்று இருக்கு. குகைக்குள் தங்கலாம். நான் தங்கினால் அவர் எப்படி தங்குவார். இந்த குறட்டை வேற கூடவே வருது. பாவம் இல்லையா பாம்பாட்டி சித்தர். வேண்டாம் ரெண்டாவது மலை.

ஆறாவது மலை முடிவில், நீர் சுனை இருக்கு. ரொம்ப குளிரும். குளிருதுன்னு, கஞ்சா, தண்ணின்னு கெட்ட  பழக்கம் வந்துரும். பொண்டாட்டி திட்டுவா. வேண்டாம்ப்பா.

அட. சாமியார் ஆயிட்டா, 'மகளே, என்ன வரம்  வேண்டும் கேள்'-னு சொல்லிறலாம். சாமியார் ஆன பின்னால்  ஆம்பளைங்க பொண்டாட்டிக்கு  எக்காரணம் கொண்டும் பயப்படக்கூடாது.

பொண்டாட்டி பயமில்லாமல் வாழ்க்கை. ஆஹா.. நினைத்தாலே இனிக்குதே!

ஆனாலும், ஆறாவது மலையும்  சரிப்படாது.

ஏழாவது மலையில் நிக்க கூட இடம் இல்ல. ஆனா பக்க வாட்டு சரிவுல ரெண்டு குடிசை இருக்கு. தண்ணி இல்ல, ஒண்ணும் இல்ல எப்படி தங்க? அவரே, சிவனேன்னு குகைக்குள் உக்காந்திருக்கார். முதலில், இருக்கிற குகையில் சக்தி அம்மா இருக்காங்க. நுழைவு பாறை அடியில் நம்ம ஞான முதல்வன். எல்லாம் ஒண்டுக்குடித்தனம், நமக்கெங்கே இடம் அங்கே.

யோசிச்சிட்டே இருந்ததில் நேரம் போனதே தெரியல. மணி பன்னிரண்டு பக்கம் ஆயிருச்சே.

மசாலா வாசனைவேறு  மூக்கை துளைத்து என் ஞானத்தை கேலிக்குறியாக்கியது.

பனியில்லாத மார்கழியா?
மட்டனில்லாத ஞாயிரா?

இன்னிக்கு மட்டனா?.. சிக்கனா?..

'காடை, மசாலாவில் ஊறுனது போதும். எடுத்து அவனில் வை' - மகளுக்கு கட்டளை மனைவியிடமிருந்து.

இந்த வாரம் சாமியார் ஆகாட்டி என்ன,  இந்த வாரம் வந்த ஞானம் அடுத்த வாரம் வராமலா போகும்.

'தயிர் கம்மியா இருக்கு தயிர் சட்னி பண்ண. போய் வாங்கிட்டு வாங்க'

ஹய்யா.. அப்படியே வெத்தலையும், பாக்கும், சுண்ணாம்பும் வாங்கிட்டு வந்திரலாம். ஒரு புடி புடிச்சிட்டு மத்தியானம் தூங்கினா, கொறட்ட சத்தத்துக்கு பக்கத்து வீட்டு நாய் கத்தி கிட்டு கிடக்கும். எனக்கென்ன, கத்திட்டு போகட்டும்.

சாமியார் ஆயிரலாம்னு நெனச்சோமே. சாப்பாடு யார் குடுப்பான்னு நெனக்கலியே. அதுதான் மலை மேல ஒரு சாமியார் கூட இல்ல.

நமக்கு சாப்பாடுதான் முக்கியம்.

இல்லறத்தார் சாமியார் ஆவது இப்படித்தான்.

[கல்யாணமான ஆண்களின் மனக்குமுறலை எண்ணி  எழுதப்பட்டதால், இந்த இதிகாசத்தை ஆண் இனத்துக்கு அர்ப்பணிக்கிறேன்.]

ஒரு நல்ல விஷயம். புலன்களை அடக்க கூடாதுன்னு திருமூலரே சொல்லி இருக்கார். ஐம்புலன்களை அடக்க சொல்பவன் அறிவில்லாதவன்னு சொல்லி இருக்கார்.

எனவே, வாய்க்கு ருசியா சாப்பிடுறது தப்பில்ல.

திருமந்திரம்

அஞ்சும்  அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் 
அஞ்சும்  அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும்  அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா  அறிவை அறிந்தேனே. 

தெளிந்த அறிவுடையவர் ஐம்புலன்களை அடக்க சொல்ல மாட்டார்கள். தேவர்களாலும் புலன்களை அடக்க முடியாது. அப்படியே, அடக்கினால் நாம்  உணர்வுகளற்ற ஜடத்திற்கு சமமாகிவிடுவோம். அதனால், ஐம்புலன்களையும் அடக்காமல் அதனை  அறிந்து வாழும் அறிவினை பெற வேண்டும்.


*** *** ***

நீங்களும் சாமியார் ஆகலாம்.

எளிய முறையில் சாமியார் ஆவது எப்படி என்று விளக்கி இருக்கிறேன்.

இனி, எந்த  பொண்டாட்டி தொல்லையும்  இருக்காது.
என்று நினைப்பவர்கள் சற்று ஒதுங்கிக்கொள்ளவும்.








கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...